Thursday, September 1, 2011

ஜோதிட தீபம் 4


12 ராசிகளின் பாவங்கள்

முதல் பாவம்:

உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்க்கையின் நிலை, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை முதல் பாவத்தின் வலிமை, அதில் தங்கியிருக்கும் கிரகங்கள் அவற்றின் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.

இரண்டாம் பாவம்:
குடும்ப சூழ்நிலை, செல்வம், கலை, பேச்சுத் திறமை, கல்வி ஆகியவற்றிக்கு உரியது

மூன்றாம் பாவம்:
சகோதரி, சகோதரர்கள், பணியாள்கள், வாகன வசதி, சங்கீத ஞானம், அரசின் ஆதரவு, துணிவு, வீர தீரச் செயல்கள், உறவினர். நண்பர்கள் உதவி முதலியவற்றிற்கு முக்கியமானது.

நான்காம் பாவம்:
கல்வி, நில புலன்கள், செல்வம், கால் நடைகள், முன்னோர் சொத்து. நண்பர்கள் ஆதரவு, உதவி முதலியவற்றுடன் தாயாரின் சுக சௌகரியங்களையும் அறிய முக்கியமானது. இந்த பாவத்தை மாத்ரு பாவம் என்று கூறுவர்.

ஐந்தாம் பாவம்:
இதைப் புத்திரஸ்தானம் என்று அழைப்பர். ஒருவருக்குச் சந்ததி விருத்திகுழந்தைகள் பிறப்பதுஎப்படியிருக்கிறது என்பதை அறிய ஐந்தாம் பாவம் முக்கியமானது. இந்த பாவத்தின் வலிமையைக் கொண்டுதான் ஒருவருக்கு மழலைச் செல்வம், உண்டா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். மற்றும் ஜாதகர் ஒருவரின் பூர்வ புண்ய பாவம், புகழ், பாவம், செல்வம், செல்வாக்கு, மதி நுட்பம் ஆகியவற்றையும் இந்த ஐந்தாம் பாவமே எடுத்துக் கூறக் கூடியது.

ஆறாவது பாவம்:
தாய் மாமன் குணம், உடல் ஆரோக்கியம், உதவி முதலியவற்றைக் கண்டறிய முக்கியமான பாவம், ஜாதகரின் உடல் ஆரோக்கியம், விரோதிகள் தன்மை, கடன், பொருள் சேதம், விபத்துகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவது இந்த பாவம்.

ஏழாவது பாவம்:
காதல் திருமணம், மனைவி உறவு முறை, நொருங்கிய உறவினர், சகோதர சகோதரிகள் ஆதரவு. உதவி, வழக்குகள், அரசு ஆதரவு. சமுகத்தில் செல்வாக்கு. விரோதம் முதலியவற்றைக் குறிக்கக் கூடியது. இதை களத்திர-மனைவி-பாவம் என்று பொதுவாகச் செல்வார்கள்.

எட்டாவது பாவம்:
ஆயுள் பாவம் பெண்களுக்கு தாலி பலத்தைக் குறிக்கும் பாவமும் இதுவே. உடல் கோளாறு, விபத்துகள். பொருள் இழப்பு, நோய்கள், மனைவியுடன்-கணவனுடன்-உறவு முறை முதலியவற்றையும் இந்த பாவத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

ஒன்பதாம் பாவம்:
பித்ருஸ்தானம்-தந்தை-அதிர்ஷ்டம், பொன், பொருள், தான தர்ம குணம். தூர தேசப் பயணம், பிறவிப் பயன், தெய்வ பக்தி, பேரன் பேத்திகள், முன்னோரின் தர்ம சிந்தை முதலியவற்றை அறிய ஒன்பதாம் பாவம் உதவுகிறது.

பத்தாம் பாவம்:
இதை, கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்றும் அழைப்பார்கள். வாணிபம், அரசாங்கப்பதவி, செல்வம், வெளி நாட்டுப் பயணங்கள், தெய்வபக்தி முதலியவற்றைக் கண்டறியலாம். ஜாதகருக்குக் கர்மம்-ஈமக்கடன்-செய்ய பிள்ளைகள் உண்டா என்பதை அறியவும் இந்த பாவம் முக்கியமானது.

பதினொன்றாம் பாவம்:
லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், சகோதர சகோதரிகள் உறவு முறை, கல்வி, நகைகள், உடை, வீடு, மன மகிழ்ச்சி முதலியவற்றை பதினொன்றாம் பாவம் எடுத்துக் காட்டுகிறது.

பன்னிரண்டாம் பாவம்:
இதை விரைய ஸ்தானம், சோர ஸ்தானம் என்றும் மறைவிடம் என்றும் சொல்வார்கள். பன்னிரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் ஜாதகருக்குப் பொன்னும், புகழும் பெருகும். விரோதிகள் இருந்தாலும், பொருள் இழப்புகள் நேரிட்டாலும் ஜாதகர் மனம் தராமல் இருப்பார். ஆணாக இருந்தால் மனைவி பெண்ணாக இருந்தால் கணவன் நடத்தையை அறிய இந்த பாவம் முக்கியமானது.
பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் அனைத்தும் பொதுவானது. இவற்றில் தங்கும் கிரகங்கள் நிலை-விளிமை தன்மை ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

சர ஸ்திர உபய ராசிகள்


பன்னிரண்டு ராசிகளும் சர, ஸ்திர, உபய ராசிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். இவற்றை லக்னமாகப் பெற்ற ஜாதகர்களில் பலன்களைப் பார்ப்போம்.

சரம்: 
சர ராசியில் பிறந்த ஜாதகனுக்கு பதினோராம் இட அதிபதியான லாபாதிபதியால் நற்பலன்கள் இல்லை. ஏனெனில் அவன் தசை காலங்களில் வீடு, பொருள் நஷ்டமும் அரசாங்க பகையும் உண்டாகும். இந்த பலன்கள் ஏற்படாமல் செல்வம் போன்ற யோக பலன்களை அளித்தாலும் வியாதிகளை உண்டாக்குவான். இதனால் ஜாதகன் பெற்ற தனங்கள் அழியலாம். எனினும் லாப ஸ்தானாதிபதி 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் நன்மையான பலன்களையே தருவார்.
ஸ்திரம்: 
ஸ்திர ராசி லக்னமாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு நன்மை செய்யும் பாக்கிய ஸ்தானாதிபதியான 9ம் இட அதிபதியால் தீமையே உண்டாகும். அதே சமயத்தில் பாக்கியாதிபதி 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் நின்றால் அரசாங்க நன்மை முதலான யோகங்கள் உண்டாகும். மற்ற இடங்களில் நின்றால் பிரயோசனம் இல்லை. நற்பலன்கள் உண்டாவதில்லை. எடுத்த தொழிலில் முற்று பெறாமல் தடை உண்டாகும்.

உபயம்:  
உபய ராசியில் ஜெனித்த ஜாகருக்கு கேந்திர ஸ்தானாதிபதிகளில் 7ம் இட அதிபதி நற்பலன்களைத் தரமாட்டார். ஊழ்வினையின் காரணமாக பூமியில் பல தொல்லைகளை அடைவார். போதுமான வருமானம் இல்லாமல் செய்யும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்காமல் பண விரயமும் ஏற்படும். அரசாங்க பகையும் உண்டாகும். உடல் உபாதையும் நோயும் ஏற்படும். அதே சமயத்தில் மற்ற கிரகங்களின் பலத்தைப் பொறுத்து மேற்கண்ட கெட்ட பலன்களின் ஆதிக்கம் குறைய வாய்ப்புண்டு.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.