திங்கள், 26 செப்டம்பர், 2011

ராசி ஜோதிட பலன்கள்


பொதுவாகப் பலன் சொல்லும் போது லக்கினத்தியே முதல் பாவமாக வைத்துப் பலன் சொல்கிறோம். ஆனால் ராசிபலன் எழுதும் போது சந்திர லக்கினத்தையே முதல் பாவமாக வைத்து எழுதுகிறோம். லக்கினத்தை எடுத்துக் கொள்வது இல்லை. அதாவது நம் ராசியையே முதல் பாவமாக வைத்து எழுதுகிறோம். மேலை நாட்டினர் அவர்கள் பிறந்த ஜாதகத்தில் சூரியன் எங்கு இருக்கிறதோ அதை முதல் பாவமாக வைத்துப் பலன் எழுதுகின்றனர். கிரகங்களுக்கு இடையே உள்ள தூரமே "Aspect" எனப்படும் பார்வையாகும். இந்தப் பார்வையில் நல்ல பார்வையும் உண்டு, கெட்ட பார்வையும் உண்டு. அதற்கு ஏற்றார்போல் பலன்கள் மாறும். அவ்வளவே.
சரி ! நாம் நமது ஹிந்து ஜோதிடத்திற்கு வருவோம். ராசியை வைத்து ஏன் எழுதுகிறார்கள் எனப் பார்ப்போம். பொதுவாக எல்லோருக்குமே அவர்கள் லக்கினம் தெரியாது. ராசியும் நட்சத்திரமும்தான் தெரியும். ஆகவே எல்லோருக்கும் தெரிந்த ராசியை வைத்துப் பலன் எழுதுவதே அவர்களுக்குப் புரியும். இது ஒரு காரணம்.
இரண்டாவது, நமது ஜோதிட நூல்களே லக்கினம், அல்லது ராசி இதில் எது வலுவாக இருக்கிறதோ அதை வைத்துத்தான் பலன் சொல்ல வேண்டும் என்று கூறுகிறது. லக்கினம் ஒரு ஜாதகத்தில் வலுவில்லாத இருக்குமேயாகில் அந்த ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி வலுவுடன் இருந்தால் ராசியை முதல் வீடாக வைத்துப் பலன் சொல்ல வேண்டும் என்பது நமது நூல்களில் கூறப்பட்டு இருக்கிறது. ஆகவே ராசியை வைத்துப் பலன் சொல்வதில் தவறு இல்லை.
மூன்றாவது ஒரு தலையாய காரணம் இருக்கிறது. இது மிகவும் முக்கியமானதும் கூட. ஜோதிடத்தில் பிறந்த நேரத்தைவிட கருத்தறித்த நேரத்திற்கு ஜாதகம் கணித்தால் அது மிகச் சரியாக இருக்கும் என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்து. கருத்தறித்த நேரத்தைக் கண்டு பிடிப்பது எவ்வாறு ? அது என்ன அவ்வளவு எளிய காரியமா ? ஒரு உயிர் எந்த லக்கினத்தில் கருத்தறிக்கிறதோ அந்த லக்கினத்திற்கு சுமார் ஒன்பது அல்லது பத்து மாதம் கழித்துச் சந்திரன் வரும் போது அந்த ஜீவன் பிறக்கிறது. அதாவது ஒரு குழந்தையின் ஜென்ம ராசியே அது கருவான லக்கினம் ஆகும். இது அநேகமாகச் சரியாக இருக்கும். ஆகவே ஜென்ம ராசியை வைத்துப் பலன்கள் கூறினால் அது கருத்தறித்த லக்கினத்தை வைத்துப் பலன் சொல்வதற்கு ஒப்பாகும்.
ஆகவே ஜென்ம ராசியை வைத்துப் பலன் கூறுகிறார்கள். ஆக இந்தப் பல்வேறு காரணங்களினால் சந்திரன் இருக்கும் நிலையை வைத்துப் பலன்கள் கூறுகிறார்கள், எழுதுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக