செவ்வாய், 26 ஜூன், 2018

" தத்து பரிகாரம் " செய்வது எங்களது குழந்தைக்கும், எங்களுக்கும் சுபயோகங்களை வழங்குமா ?


கேள்வி :

 எங்களது குழந்தையின் ஜாதகத்தில் கிரகங்கள் பாதிப்பில் உள்ளதாலும், பெற்றோரை குறிக்கும் 4,9ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாலும் எங்களது குழந்தைக்கும், எங்களுக்கும் கடுமையான இன்னல்களை தரும் என்றும், குழந்தைக்கு தற்பொழுது நடைபெறும் சனி திசை பெற்றோரான எங்களிடம் இருந்து பிரிவினையை தரும், எனவே எங்களது பெற்றோரிடம் குழந்தை வளர்வதே தங்களுக்கு நல்லது என்கின்றனர், மேலும் குழந்தையை "தத்து" பரிகாரம் செய்து கொடுப்பதே அனைத்திற்க்கும் தீர்வாக அமையும் என்கின்றனர், இது உண்மையா? எங்களது குழந்தையை தத்து பரிகாரம் செய்து கொடுக்கலாமா ? தத்து பரிகாரம் முறையாக செய்வது எப்படி ? தெளிவான விளக்கம் தர வேண்டுகின்றேன்.


பதில் :

 மேற்கண்ட உதாரண ஜாதகமே "தத்து" பரிகாரம் செய்வதற்க்கான அனைத்து தகுதியும் உள்ள ஜாதகம் அன்பரே.

 தங்களது குழந்தையின் ஜாதகத்தில் தத்து பரிகாரம் செய்வதற்கான சிறு பாதிப்பு கூட இல்லை, அதற்க்கான அவசியமும் இல்லை என்பதே உண்மை நிலை, எனவே  தங்களது குழந்தையை தத்து பரிகாரம் செய்துதரவேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை என்பதை உணருங்கள், மேலும் தங்களது குழந்தையின் ஜாதகத்தில் 1,4,5,7,9,10 ம் வீடுகள் அனைத்தும் லாப ஸ்தானமான 11ம்  பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதுடன் 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  சுக ஸ்தானமான கடக ராசியில் வியாபித்து நிற்பது தங்களுக்கும், தங்களது குழந்தைக்கும் சுபயோக பலாபலன்களையே வாரி வழங்கும், மேலும் நடைபெறும் சனி திசை குழந்தைக்கு 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் நன்மைகளை தருவது சிறப்பு மிக்க கல்வி காலத்தையும், கல்வியில் தேர்ச்சியையும், ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, தெளிவான சிந்தனை, தெளிந்த நல்லறிவு என்றவகையில் நன்மைகளை வாரி வழங்கும் என்பதால் தாங்கள்  யாதொரு மனவேதனையும் கொள்ளாமல், தங்களது குழந்தையை தாங்களே பாசமுடன் வளர்ப்பது நல்லது என்பதை கருத்தில் கொள்ளுங்கள், குழந்தையின் ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும்  4,10ம் வீடுகள்  மிகுந்த வலிமையுடன் இருப்பது தங்களுக்கே சிறப்பான அதிர்ஷ்டத்தை தரும் என்பதை நினைவில் கொண்டு நலம் பெறுங்கள்.

மேற்கண்ட உதாரண ஜாதகரை ஏன்? தத்து பரிகாரம் செய்யவேண்டும் என்பதை சற்று விரிவாக இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 

லக்கினம் : துலாம் 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : ரேவதி 3ம் பாதம் 

பொதுவாக சுய ஜாதகத்தில் தாய்,தந்தையை குறிக்கும் பாவகங்களான 4,10ம் வீடுகள் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே அவரை  தத்து பரிகாரம் செய்து தரவேண்டும், குறிப்பாக 4,10ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது,  சத்ரு ஸ்தானமான 6ம் பாவக தொடர்பை பெறுவது, திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக தொடர்பை பெறுவது, விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது, போன்றவை மட்டுமே குழந்தை மற்றும் பெற்றோருக்கு இடையிலான உறவில் பிரிவு, மிகுந்த இன்னல்கள், போராட்ட வாழ்க்கை, ஆயுள் பங்கம் என்றவகையில் சிரமங்களை தரக்கூடும், அதுவும் குழந்தைக்கு நடைமுறையில் உள்ள திசாபுத்திகள், மேற்கண்ட பாதிப்பை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே தீய பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், என்பதை கருத்தில் கொள்க. 

உதாரண ஜாதகத்தில்  4,10ம் வீடுகள்  பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அடிப்படையிலேயே பெற்றோருக்கு கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், இது ஜாதகருக்கும் ஜாதகரின் பெற்றோருக்கும் 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், பெற்றோருடன் சேர்ந்து ஜீவிக்க இயலாத நிலை, பெற்றோருக்கு வரும் பொருளாதர இன்னல்கள், நிலையற்ற தன்மையிலான வாழ்க்கை,  ஜாதகருக்கு வரும் உடல் மன நலம் சார்ந்த பாதிப்பு, போராட்ட வாழ்க்கை, ஒவ்வொரு விஷயத்தையும் போராடி பெறவேண்டிய நிலை, என்ற வகையில் பாதிப்பை தரும், மேலும் லக்கினம் விரைய ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு  வளரும் சூழ்நிலையில் எதிர்பாராத பாதிப்புகளை சந்திக்கும் நிலையினை தரும், எடுக்கும் முயற்சிகள் தடைபெறும், அதிர்ஷ்டமின்மை ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், மேலும் நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது, ஜாதகரே விருப்பப்பட்டாலும், தனது பெற்றோருடன் ஜீவிக்க இயலாது என்பது கவனிக்கத்தக்கது.

இதுபோன்ற நிலையை கொண்ட ஜாதகரை அவர்களது பெற்றோர், தமது குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திற்கு தத்து பரிகாரம் செய்து தருவது, சிறப்பான நன்மைகளை ஜாதகருக்கும், ஜாதகரின் பெற்றோருக்கும் வாரி வழங்கும், ( என்ன செய்வது ஜாதகருக்கு கொஞ்சம் வயது அதிகம் ) எனவே தத்து பரிகாரம் செய்யுமுன் சுய ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும் பாவகங்கள், லக்கினம், பூர்வ புண்ணியம், பாக்கிய ஸ்தான வலிமையை கருத்தில் கொண்டு தத்து பரிகாரம் செய்வது சிறப்பை தரும்.

குறிப்பு :

கன்னி லக்கினம், மிதுன ராசி, திருவாதிரை நட்ஷத்திரம் கொண்ட  தங்களது குழந்தையின் ஜாதகத்தில், பெரும்பாலான பாவக தொடர்புகள் மிகவும் வலிமையுடன்  உள்ளது, மேலும் பெற்றோரை குறிக்கும் 4,10ம் வீடுகள் மிக வலிமையுடனும், லக்கினம், பூர்வ புண்ணியம், பாக்கிய ஸ்தானம் போன்றவை மிகுந்த வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது, தவறான அறிவுரையின் பேரில் தங்களது குழந்தையை தத்து பரிகாரம் செய்துவிடாதீர்கள், ஏனெனில் குழந்தை வழியிலாக வரும் சுபயோகங்கள் தங்களுக்கு கிடைக்காமல் விரையமாகிவிட அதிக வாய்ப்பு உள்ளது, எனேவ தங்களது குழந்தையுடன் சேர்ந்து வாழ்ந்து சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெறுங்கள் என்பதே " ஜோதிடதீபம்" வழங்கும் துல்லியமான ஆலோசனை வாழ்த்துகள்

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

1 கருத்து: