சனி, 14 மார்ச், 2015

ராகுகேது தோஷம் சுய ஜாதகத்தில் வழங்கும் அவயோக பலன்கள் !




ஜோதிடதீபம் பொதுவாக, சாய கிரகமான ராகு கேது, சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் அமரும் பொழுது, ஜாதகருக்கு  தரும் யோக பலன்களை பற்றி வெகுவாக பதிவு செய்திருக்கிறது இதற்க்கு முன் எழுதிய கட்டுரைகளில், மேலும் சுய ஜாதகத்தில் ராகு கேது எங்கு அமர்ந்தால் நன்மையை செய்வார்கள் என்று சில விளக்கங்களும், கட்டுரைகளில் தெளிவுபட தெரிவித்திருக்கும், ஆனால் ராகு கேது ஒருவரது ஜாதகத்தில் பாதிப்பான பலனை தரும் அமைப்பில் அமர்ந்து இருப்பின் அவர்கள் தரும் அவயோக பலன்களை பற்றி குறிப்பிட்ட அளவிலேயே பதிவு செய்திருக்கும், இந்த பதிவில் ராகுகேது பாதிப்பை தரும் அமைப்பில் இருப்பின் ஜாதகரின் வாழ்க்கை எவ்வித இனல்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

சாய கிரகங்களான ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமரும் பொழுது எந்த அளவிற்கு யோக பலன்களை வாரி வழங்குகிறதோ? அதை போன்றே பன்மடங்கு அவயோக பலன்களை வாரி வழங்கும் தான் அமர்ந்த நிலையில் வலிமை அற்ற தன்மையுடன் இருப்பின், பொதுவாக சுய ஜாதகத்தில் ராகு கேது பாதிப்பை தாராமல் வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த நலன்களை தரும், ஒருவேளை ராகு கேது பாதிப்படைந்து அமர்ந்த பாவகத்தின் பலனை நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம்  மற்றும் சூட்சமம்  அல்லது எதிர்வரும்திசை,புத்தி,அந்தரம்  மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகருக்கு நல்லது, ஒருவேளை குறிப்பிட்ட பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகர் அந்த பாவக வழியில் இருந்து பெரும் அவயோக பலன்களை எந்த விதத்திலும் தவிர்க்க இயலாது அனுபவித்தே தீரவேண்டி வரும், மேலும் சாய கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்களின் பலா பலன்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும், தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் பலன்களையும் தானே ஏற்று நடத்த ஆரமிபித்து விடும் வல்லமை பெற்றது, இந்த  சாயா கிரகங்களான ராகு கேது  என்றால் அது  மிகையில்லை.

சரியான உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் காண்போம் :



லக்கினம் : கும்பம்
ராசி : துலாம்
நட்சத்திரம் : சுவாதி 4ம் பாதம்

ஜாதகருக்கு கும்ப லக்கினம் ராகு கேது சுய ஜாதகத்தில் முறையே,  தனுசு ராசியில் உள்ள 10ம் பாவகத்தில் ராகுவும், மிதுன ராசியில் உள்ள நான்காம் பாவகத்தில் கேதுவும் அமர்ந்து, 10ம் பாவகத்தையும், 4ம் பாவகத்தையும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கும் வல்லமையை பெறுகின்றனர், இனி ஜாதகருக்கு சாயா கிரகங்கள் தரும் பலன்களை பற்றி சிந்திப்போம்.

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகமும், ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகமும் பாதிப்பது ஜாதகருக்கு சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து அதிக இன்னல்களை வாரி வழங்கும், மேலும் பாதிப்பிற்கு சாயாகிரகங்கள் காரணமாக அமைந்தால் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாப நிலைக்கு ஆளாக்கும், இந்த ஜாதகம் ஆண்  என்பதால் பாதிப்பின் தன்மை மிகவும் கடுமையானதாக அமைந்தது, உத்தியோகம் புருஷ லட்சனம் என்று சொல்வார்கள், இவரது ஜாதகத்தில் ராகு பகவான் ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்து ஜாதகரின் தொழில் மற்றும் வேலை வாய்ப்பை கடுமையாக பாதித்து ஜீவன வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றினார், ஜாதகருக்கு இதுவரை சரியான தொழில் அமையவில்லை, சிறு வேலைகூட கிடைக்கவில்லை, மேலும் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகம் பெற்ற தகப்பனை குறிக்கும் என்பதால், ஜாதகருக்கும் ஜாதகரின் தகப்பனாருக்கும் ஒட்டு உறவு இல்லாமல் செய்தது, தனது தகப்பனார் வழியில் இருந்து பெற வேண்டிய  எந்த ஒரு நன்மையையும் ஜாதகர் பெற இயலாமல், அதிக இன்னல்களுக்கு ஆளானார்.

 ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியாக வருவதால், ஜாதகர் எந்த ஒரு வேலையை செய்தாலும் சம்பந்தபட்ட இடத்தில் இருந்து நர்ப்பெயரோ, முன்னேற்றமோ கிடைக்கவில்லை, கிடைத்தது அனைத்தும் அவமானங்களும், துன்பமும்தான், ஜாதகரை மேற்கண்ட விஷயங்கள் வெகுவாக பாதிப்பை தந்தது, ஜீவன ரீதியான வாழ்க்கையில் ஜாதகர் இதுவரை கடுமையாக போராடிக்கொண்டு வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழ்நிலையே ஏற்ப்பட்டது, எதிர்பாராத சந்தர்ப்பங்களில் ஜாதகரின் கௌரவம் பலரால் கடுமையாக பாதிக்கபட்டது, இதனால் வேலை இழப்பு, தொழில் வெற்றி கிடைக்காமல் ஜாதகர் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி, விரக்தியின் உச்ச நிலைக்கே செல்லும் தன்மையை தந்தது, ஜாதகர் தனது தகப்பனார் வழியில் இருந்து எந்த ஒரு வழிகாட்டுதலும் பெற இயலாமல், தனி ஒருவராக வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திக்க வைத்தது, ஜாதகர் ஜீவன வழியில் தொடர்பு பெற்ற அன்பர்கள் யாவரும் ஜாதகரை தனது சுய லாபத்துக்காக மட்டும் பயன்படுத்தி கொண்டனர், இவருக்கு எவ்வித சிறு நன்மையையும் செய்யவில்லை என்பது கவனிக்க தக்கது.

சொத்து சுகம், வண்டி வாகனம், நிலபுலன்கள் என்ற விஷயங்களை குறிக்கும் சுக  ஸ்தானமான நான்காம் பாவகம் ஜாதகருக்கு மிதுன ராசியில் வியாபித்து, அங்கு அமர்ந்த கேது பகவான், ஜாதகரின் சுக போகமான வாழ்க்கைக்கு, வேட்டு வைத்தார், பொதுவாக 10ம் பாவகம் தகப்பனாரையும், 4ம் பாவகம் தாயரையும் குறிக்கும், இவரது ஜாதகத்தில் இந்த இரண்டு பாவகமும் கடுமையாக பாதிப்பதால், ஜாதகர் சிறுவயது முதல் 10 மற்றும் 4ம் பாவக வழியில் இருந்து நன்மை பெற இயலவில்லை, பெற்றோரை பிரிந்து ஜாதகர் தனது வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்மையை தருகின்றது என்றால், ஜாதகரின் நிலை என்ன ? என்பதை அன்பர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறது " ஜோதிடதீபம் " பெற்றோரை பிரிந்த குழந்தையின் வளர்ப்பும், வாழ்க்கையும் எவ்விதம் இருக்கும், அடிப்படையில் கிடைக்க வேண்டிய பெற்றோரின் பாசமே கிடைக்காத, இந்த ஜாதகரின் வாழ்க்கைக்கு அடிப்படை காரணமாக அமைந்தது, இவரது ஜாதகத்தில் அமர்ந்த சாயா கிரகங்களான ராகுகேது என்றால் அது மிகையில்லை.

சுக ஸ்தானமான 4ம் பாவகம் கேது பகவானால் பாதிப்படைந்ததால், ஜாதகருக்கு குடியிருக்க ஒரு நல்ல வீடு இன்னும் அமையவில்லை, சிறந்த போக்குவரத்து வாகனம் அமையவில்லை, நிம்மதியாக உறங்குவதற்கு வசதியற்ற ஒரு சூழ்நிலையில், ஜாதகர் தனது இருப்பிடத்தை அமைத்துகொள்ளும் சூழ்நிலையை தந்துள்ளது, தான் கற்ற கல்வி வழியில் இருந்தும் ஜாதகரால் பெரிய அளவில் எதையும் செய்ய இயலாவண்ணம், சந்தர்பம் மற்றும் சூழ்நிலைகள் அமைந்தது, மிதுனம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியாக அமைவதால், ஜாதகரின் முயற்ச்சிகள் யாவும் படு தோல்வியை சந்தித்தது, ஜாதகரின் மனமும் மூடநம்பிக்கையால் முடங்கி போனது, பிற்போக்கு சிந்தனைகள் ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதித்து ஜாதகரின் முன்னேற்றத்தை கடுமையாக பாதித்தது, உபய காற்று தத்துவம் என்பதால் ஜாதகரின் அறிவு எவ்வித பலனும் தாராமல், பயனற்று போனது, ஜாதகரின் திட்டங்கள் வெறும் கற்பனையாகவே நின்றது, நடைமுறைக்கு வாராமல், அவரது எண்ணத்திலேயே சமாதி நிலையை கண்டது, ஜாதகரின் முயற்ச்சிக்கும் தன்மை 100% விகிதம் தோல்வியை பெற்றது.

பொதுவாக சுய ஜாதகத்தில் 4,10ம் பாவகங்கள் பெற்றோரை குறிப்பதால், பெற்றவர்களின் அமைப்பில் இருந்து ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையின் தன்மையை இது உறுதி செய்யும், ஆனால் இவரது ஜாதகத்தில் 4,10ம் பாவகங்கள் சாயா கிரகங்களான ராகுகேது பகவானால் பாதிக்க படுவதால், ஜாதகருக்கும் ஜாதகரின் பெற்றோருக்கும், நல்ல உறவு நிலையே அற்றுபோகும் சூழ்நிலையை உருவாக்கியது, ஜாதகரின் லட்சியம், எண்ணம், அறிவு திறனின் செயல்பாடுகள், இறை அருளின் கருணை அனைத்தையும் ஏக காலத்தில் இழந்து, வாழ்க்கையில் போராட்டத்தை அதிக அளவில் சந்திக்கும் தன்மையை தந்தது, தற்பொழுது நடைபெறும் சனி திசையும் ஜாதகருக்கு 4ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையில் உள்ள இன்னல்களையும், எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் கட்டியம் கூறுகிறது, நடைபெறும் சனி திசை, ஜாதகருக்கு கேது அமர்ந்த 4ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, உபய காற்று தந்து அமைப்பில் இருந்து அதிக துன்பங்களையும், சுக ஸ்தான அமைப்பில் இருந்து வரும் பிரச்சனைகளையும் காட்டுகிறது, ஜாதகர் சரியான அமைப்பில் உள்ள வீட்டில் குடியிருந்தால் மட்டுமே, சனி திசை ஜாதகருக்கு 30% விகித நன்மையை செய்ய கூடும், இல்லை எனில் ஜாதகரின் வாழ்க்கை கடுமையாக பாதிப்பதை தடுப்பது குதிரை கொம்பாகவே இருக்கும்.

குறிப்பு :

(சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது நல்ல வலிமையுடன் அமர்ந்தால், அந்த ஜாதகருக்கு அவர்கள் தரும் யோக வாழ்க்கை என்பது அளவில்லாத தன்மையுடன் இருக்கும், ஜாதகரின் யோக  வாழ்க்கைக்கு எவராலும் தடை போட முடியாது, யோக பலனின் தன்மை முழு வீச்சில் வேலை செய்யும், சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது வலிமை அற்ற தன்மையில் அமரும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுவதை, எவராலும் தடுக்க இயலாது, குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்களுக்கு ஒரு வரைமுறை இருக்காது, ஒருவேளை நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ராகுகேது அமர்ந்த பாவக பலனை ஏற்று நடத்தாமல், இருந்தால் ஜாதகர் தப்பித்தார், ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோ கதிதான்.)


வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

3 கருத்துகள்:

  1. 4-ல் ராகு,10ல் கேது கன்னி லக்னம்,புதன் 10ல் ஆட்சி,குரு 11ல் உச்சம் புதன் ராகு சாரம்,கேது குரு சாரம்,ராகு சுக்கிர சாரம்.,சுவாதி நட்சத்திரம் 2 ம் பாதம், சனி திசை 2017ல் 5ல் ஆட்சி,ஜீவனம் எப்படி??4 பட்டம் வயது 24..

    பதிலளிநீக்கு
  2. கும்ப லக்கினத்திற்கு மிதுனம்,தனுசு முறையே 5,11ம் வீடாக வரும் பொழுது தாங்கள் 4,10ல் கேது ராகு அமர்ந்ததாக குறிப்பிடுவது எப்படி ?

    ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் எத்தனை பாகையில் ஆரம்பிக்கிறது என்ற கணிதம் சரியாக தெரியாத பொழுது, தாங்கள் குறிப்பிட்ட சந்தேகம் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம், ஒருவரது ஜாதக பலன் காண முற்படும் பொழுது, அந்த ஜாதகருக்கு லக்கினம் முதல் 12 பாவகங்களின் நிலையை உணர்ந்து பலன்கானும் பொழுது துல்லியமான ஜாதக பலன் காண முடியும், மேலும் ஒரு ஜாதகருக்கு பாவகங்களின் ஆரம்பம் மற்றும் முடிவு ஆகிய விஷயங்கள் தெரிந்தால் மட்டுமே, நவ கிரகங்கள் எந்த பாவகத்தில் உள்ளது என்ற உண்மை நிலை புரியும், அதை அடிப்படையாக கொண்டு ஜாதக கணிதம் செய்தால் மட்டுமே, ஜாதகருக்கு சரியான ஜாதக பலனை சொல்ல இயலும்.

    மேலோட்டமாக ஜாதகருக்கு லக்கினம் கும்பம் தானே? மிதுனம்,தனுசு 5,11ம் பாவகமாக தானே வரும் என்று முடிவு செய்வது, ஜாதக கணித அறிவு சிறிதும் இல்லாத ஜோதிடர்கள் செய்யும் முடிவாக கருத வேண்டியுள்ளது, மேற்கண்ட இந்த ஜாதகருக்கு லக்கினம் கும்பம் என்றாலும் லக்கினம் ஆரம்பிக்கும் இடம் கும்ப ராசியில் உள்ள 329.51.44 பாகையில் ஆரம்பித்து மேஷ ராசியில் உள்ள 000.23.07 பாகையில் முடிவடைகிறது, ஆக ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் கும்ப ராசியில் ஆரம்பித்து மீனம் முழுவதும் வியாபித்து, மேஷ ராசியில் முடிவடைகிறது, இந்த இடத்தில் ஜாதகருக்கு நாம் லக்கினம் எதுவாக பாவிப்பது என்ற சந்தேகம் எழக்கூடும், அதில் சந்தேகமே வேண்டாம் ஜாதகரின் லக்கினம் கும்பம் தான், லக்கினம் எனும் முதல் பாவகம் கும்பம்,மீனம் ,மேஷம் எனும் 3 ராசிகளுடன் சம்பந்தம் பெருகிறது என்று மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

    தங்களது சந்தேகத்திற்கு உண்டான விளக்கம் இனிவருமாரு, ஜாதகருக்கு 4ம் பாவகம் மிதுன ராசியில் 61.25.55 பகையில் ஆரம்பித்து கடகத்தில் 90.54.31 பாகையில் முடிவடைகிறது, இந்த 4ம் பாவகத்திர்க்கு உற்பட்ட 79.05.54 பாகையில் கேது அமர்ந்து இருக்கின்றார், ஜாதகருக்கு 10ம் பாவகம் தனுசு ராசியில் 241.25.55 பாகையில் ஆரம்பித்து மகர ராசியில் 270.54.31 பாகையில் முடிவடைகிறது, இந்த 10ம் பாவகத்திர்க்கு உற்பட்ட 259.05.54 பாகையில் ராகு அமர்ந்து இருக்கின்றார், எனவே இந்த ஜாதகருக்கு சாயா கிரகங்களான ராகு கேது முறையே 10,4ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பது தெள்ள தெளிவாக தங்களுக்கு விளக்கம் வழங்கியாகி விட்டது, இதற்கு மேலும் தங்களுக்கு சந்தேகம் ஏற்ப்பட்டால், சரியான ஜோதிட கணிதம் தெரிந்த ஜோதிட ஆசானிடம் ஜோதிடம் கற்று கொள்வதே சிறந்த வழி, ஆதி நூல்களின் பாரிச்சியம் இருப்பின் 4ம் பாவகம் தாய் ஸ்தானத்தையும், 10ம் பாவகம் தந்தை ஸ்தானத்தையும் குறிப்பது தெளிவாக புலனாகும், 9ம் பாவகம் பாக்கிய ஸ்தனமாகவே விளங்குகிறது.

    பதிலளிநீக்கு