" திருமணம் ஆயிரம்காலத்து பயிர் " என்பது முதுமொழி, தனது சந்ததிகள் வாழையடி வாழையாக தழைத்து ஓங்கி வாழ சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர் ஜாதகத்தை தனது வாழ்க்கை துணையாக தேர்வு செய்வது அவசியமாகிறது, இதை கருத்தில் கொண்டே முன்னோர்களும் பெரியவர்களும் சுய ஜாதக வலிமை அறிந்து திருமணம் செய்வது அவசியம் என்பதனை வலியுறுத்துகின்றனர், இதை ஏற்றுக்கொண்டு தமது இல்லற வாழ்க்கையில் சரியான பொருத்தம் நிறைந்த வலிமை பெற்ற ஜாதகத்தை தேர்வு செய்யும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பல சிறப்புகளை பெறுகின்றது, குறிப்பாக ஜாதகரின் வாரிசுகள் யோகம் நிறைந்ததாகவும், வாழ்க்கையில் குன்றாத வளம் நிறைந்தததாகவும் அமைகிறது, சுய ஜாதக வலிமை மற்றும் பொருத்தம் ஆகியவற்றில் சிறிது தவறு செய்தாலும் தம்பதியரின் வாழ்க்கை முற்றிலும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தருகிறது, கருத்துவேறுபாடு ஏற்பட்டு இல்லற வாழ்க்கை பிரிவை நோக்கி செல்கிறது.
இந்த இடர்பாடுகளை தவிர்க்க தம்பதியரின் சுய ஜாதக வலிமையை தெளிவாக உணர்ந்து வலிமை பெற்ற ஜாதகத்தை இல்லற வாழ்க்கையில் சங்கமிக்கும் பொழுது திருமணம் என்னும் உயர்ந்த பந்தம், இல்லற வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும், சுகபோகங்களையும் தர தவறுவதில்லை, தனது வாழ்க்கை துணையாக கீழ்கண்ட ஜாதகத்தை தேர்வு செய்யலாமா ? என்ற ஓர் அன்பரின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட ஜாதகத்தை இன்றைய ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !
லக்கினம் : துலாம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 2ம் பாதம்
மேற்கண்ட ஜாதகியை திருமணம் செய்துகொள்ளலாம ? நட்ச்சத்திர பொருத்தங்கள் 9 உண்டு என்பதால் பொருத்தம் சிறப்பாக இருக்கின்றது இல்லற வாழ்க்கை யோகத்தை தரும் என்கின்றனர் தங்களின் ஆலோசனை என்ன ? என்பது ஜாதகரின் கேள்வி, பெரும்பாலும் திருமணம் பொருத்தம் காண்பதில் சுய ஜாதக வலிமை கருத்தில் கொள்ளாமல், தசவித பொருத்தம், தோஷ நிர்ணயம், ஏக திசை பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம் போன்றவற்றிற்கு மட்டும் முக்கியத்துவம் தந்து திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வது கல்லை கட்டிக்கொண்டு கடலில் இறங்குவதற்கு சமம் என்பதை கருத்தில் கொள்வது நலம், சுய ஜாதகம் வலிமை பெறாமல் எந்த பொருத்தங்கள் இருந்தாலும் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையாது என்பதே உண்மை, மேற்கண்ட ஜாதகத்திற்கு நட்ச்சத்திர பொருத்தம் ஒன்றை மட்டும் அடிப்படையாக கொண்டு திருமணம் செய்ய பரிந்துரை செய்து இருக்கின்றனர், இது எவ்வளவு பெரிய இன்னல்களை மணமகனுக்கு தரும் என்ற விஷயம் அறியாமலே, இனி ஜாதகியின் சுய ஜாதக வலிமையை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் .
திருமண வாழ்க்கையில் பெண்ணின் ஜாதகத்தில் அடிப்படையில் மிகவும் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகம் லக்கினமாக, லக்கினம் வலிமை பெறுவது ஜாதகியின் உயர்ந்த குணத்தையும், வளரும் சூழ்நிலை, மனவலிமை, உடல் ஆரோக்கியம் மற்றும் ஜாதகியின் கீர்த்தி புகழ் போன்றவற்றை எடுத்துரைக்கும், இந்த ஜாதகிக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, அடிப்படையில் லக்கினம் எனும் முதல் பாவகமே வலிமை அற்று காணப்படுகிறது என்பதும், ஜாதகி லக்கின பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை அனுபவிக்க பிறந்தவர் என்பதும் தெளிவாகிறது, குறிப்பாக ஜாதகி பிற்போக்கு தனமான எண்ணமும், சுய ஆளுமை திறன் அற்றவர் என்பதும் உறுதியாகிறது.
அடுத்து குடும்ப ஸ்தானமான 2ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகியின் இல்லற வாழ்க்கை, தனம் சார்ந்த முன்னேற்றம், இனிமையான வாக்கு வன்மை ஆகியவற்றை பறைசாற்றும், ஜாதகியின் 2ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்ப வாழ்க்கையில் பலவித இன்னல்களை சந்திக்கும் நிலைக்கு ஜாதகி ஆளாகும் சூழ்நிலையை தரும் என்பதும், இனிமையான பேச்சு திறன் அற்றவர் என்பதும், பொருளாதார ரீதியான நெருக்கடி மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அற்ற தன்மையை தரும் என்பதும் உறுதியாகிறது, எனவே ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
அடுத்து தனது குலம் தழைக்க நல்ல வாரிசை நல்கும் அமைப்பான 5ம் வீடு ஜாதகிக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல, மேலும் ஜாதகிக்கு சுய சிந்தனை, சமயோசித புத்திசாலித்தனம், நுண்ணறிவு ஆகியவை திறம்பட செயலாற்ற வாய்ப்பில்லை, மேலும் ஜாதகிக்கு புத்திர பாக்கியம் சார்ந்த இன்னல்களும் ஏற்படும், தெய்வத்தின் அனுக்கிரகமும், இறையருளின் கருணையையும் ஜாதகி பெறுவது என்பது குதிரை கொம்பாகவே இருக்கும், மேலும் புதிய சிந்தனை, அறிவு சார்ந்த முயற்சிகள் என்பது ஜாதகிக்கு சற்று குறைவு என்பது கவலை அளிக்கும் விஷயமாகும், இதனால் ஜாதகியின் வாழ்க்கை துணை பெரும் சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், தன்னம்பிக்கை குறையும், வீண் வாதமும், பிற்போக்குத்தனமான எண்ணங்களால் சூழப்பட்ட மனநிலையை பெற்றவர் என்பதும் உறுதியாகிறது.
அடுத்து கணவன் எனும் 7ம் வீடு ஜாதகிக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் கணவர் ஜாதகம் வலிமை பெற்று இருக்கவில்லை எனில் அவரின் கதி அதோகதிதான், அடிப்படையில் கணவன் மனைவி என்ற பிணைப்பே இருக்காது, தனது வாழ்க்கை துணையை ஓர் எதிரியாக பாவிக்கும் மனநிலையை ஜாதகிக்கு தந்துவிடும், திருமணத்திற்கு பிறகு கணவரின் அனைத்து செயல்பாடுகளும் முழுவதுமாக முடங்கும், ஜாதகரின் சுய வலிமை அனைத்தும் செயலற்று சூனியமாக மாறிவிடும், தம்பதியர் இருவருக்கும் மிகுந்த கருத்துவேறுபாடு உருவாகும், தம்பதியர் இருவரும் ஒருவர் வழியில் இருந்து ஒருவர் கடுமையான இன்னல்களை சந்திக்கும் நிலையை தரும், இல்லற வாழ்க்கையில் நிம்மதி என்பதே சிறிதும் இருக்காது, 7ம் வீடு பெண்களின் ஜாதகத்தில் பாதிக்கப்படுவது கணவருக்கு மிகப்பெரிய நெருக்கடிகளை கொடுக்கும் என்பதும், இல்லற வாழ்க்கையில் பிரிவு ஏற்படும் என்பதும் கவலை தரும் விஷயமாகும்.
அடுத்து ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் வீடு ஜாதகிக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கும் ஜாதகியின் கணவருக்கும் பேரிழப்புகளையும், திடீர் இழப்புகளையும் தரும், விபத்து, உடல்நல குறைபாடு, தனம் சார்ந்த நஷ்டங்கள், என தம்பதியர் இருவரும் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையை தரும், மேலும் ஆயுள் பாவகம் என்பது ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் வருமானம் மற்றும் பொருளாதார வசதி வாய்ப்புகளை குறிக்கும், இந்த பாவகமும் ஜாதகிக்கு பாதிக்கப்படுவது ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து கடுமையான இழப்புகளை சந்திக்கும் நிலைக்கு ஆளாவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
அடுத்து அயன சயன ஸ்தானம் எனும் 12ம் வீடு ஜாதகிக்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு சில நன்மைகளை தந்த போதிலும், இல்லற இன்பம் எனும் விஷயங்களில் முரண்பட்ட வாழ்க்கையை தந்துவிடும் என்பதால் இதுவும் உகந்ததல்ல, எனவே மேற்கண்ட ஜாதகியின் சுய ஜாதக வலிமை என்பது மிகவும் வலிமை அற்று காணப்படுவது, ஜாதகியை மணந்துகொள்ள நினைக்கும் அன்பருக்கு நல்லதல்ல, ஒருவேளை மணந்துகொள்ள நினைக்கும் அன்பரது சுய ஜாதகம் மிகவும் வலிமை பெற்று இருந்தால் ஓரளவிற்கு ஜாதகர் சமாளிக்க கூடும் என்பது மட்டுமே ஆறுதலான, விஷயம்.
தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் அன்பர்கள்! அவரது சுய ஜாதக வலிமை நிலையை உணர்ந்து தேர்வு செய்வது நல்லது, இல்லை எனில் தனது சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையும், யோக பங்கமாக மாறிவிட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்க, மேலும் நட்ச்சத்திர பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ராகுகேது தோஷம், ஏக திசை பொருத்தம் போன்றவை எல்லாம் ஓர் ஜாதகத்தை ஆளுமை செய்யாது, அதனால் யாதொரு பாதிப்பும் வாராது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் மட்டும் வலிமை பெற்று இருப்பதை உறுதி செய்து தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம், சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்து நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் நட்ச்சத்திர பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ராகுகேது தோஷம், ஏக திசை பொருத்தம் ஆகியவை இல்லை என்றாலும், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பாதிக்கப்பட்டு, நடைபெறும் எதிர்வரும் திசாபுத்திகள், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், நட்ச்சத்திர பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ராகுகேது தோஷம், ஏக திசை பொருத்தம் ஆகியவை இருந்தாலும் அதனால் யாதொரு பலனும் இருக்காது, இல்லற வாழ்க்கையும் சிறப்பிக்காது, என்பதை உணர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனம்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக