செவ்வாய், 5 மார்ச், 2013

லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள்! பகுதி 1



சர லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் பெரும் இன்னல்கள் :

மேஷம் : 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷ ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு பாதக ஸ்தானமாக வருவது 11 ம் வீடான கும்பம் , இந்த வீட்டுடன் ஜாதகரின் லக்கினம் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர் சிந்தனை என்பது மற்றவர்களுக்கும் தனக்கும் மிகுந்த துன்பத்தை தரும் விதத்தில் அமைந்துவிடும் , ஜாதகர் செய்யும் அறிவுபூர்வம் அற்ற செயல்களினால் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது வெகுவாக பாதிக்க படும் , தனக்கு கிடைக்க வேண்டிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஜாதகர் தனது வீண் பிடிவாதத்தாலும் , வறட்டு கௌரவத்தாலும் இழக்கும் சூழ்நிலையை தரும் .

மேலும் அவசர கதியில் செய்யும் செயல்கள் ஜாதகரை படுகுழியில் தள்ளிவிடும் , அல்லது மற்றவர்களின் பேச்சை கேட்டு வாழ்க்கையில் பல நன்மைகளை இழந்து, தனது சுய அறிவின்மையின் காரணமாக மது போதை பழக்கத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும் , அல்லது மற்றவர்களின் கட்டுபாட்டில் வாழ்நாள் முழுவது துன்பத்தை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும் , குறிப்பாக இவை அனைத்தும் ஜாதகரின் வாழ்க்கையில் விரைவாகவும் , எதிர்பாராத சூழ்நிலைகளிலும் நடந்துவிடும் , இதன் பலனோ மிகவும் கடுமையானதாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை .

மேஷம் லக்கினத்தை பெற்ற அன்பர்களின் ஜாதகத்தில் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் அறிவில் விழிப்புணர்வுடன் இருப்பது சகல நலன்களையும் தரும் , தனக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை எக்காரணத்தை கொண்டும் தவறவிடாமல் இருப்பது வாழ்க்கையில் மிகுந்த நன்மைகளை தரும் , மற்றவர்கள் அறிவுரையை கேட்காமல் தனது பெற்றோர் அல்லது வாழ்க்கை துணையின் ஆலோசனை படி நடப்பது ஜாதகரின் பாதக ஸ்தான பலனை வெகுவாக குறைக்கும் .

 கடகம் :

காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியான கடக ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு பாதக ஸ்தானமாக வருவது 11 ம் வீடான ரிஷபம் , இந்த வீட்டுடன் ஜாதகரின் லக்கினம் தொடர்பு பெரும் பொழுது ஜாதகரின்  நிலையான சொத்துகள் அல்லது அசையும் அசையா சொத்துகள்  வெகுவாக பாதிக்க படும் , தனது பெயரில் உள்ள நிலையான சொத்துகளை ஜாதகர்  வலுகட்டாயமாக விரையம் செய்வார் , யாருடைய ஆலோசனையும் ஜாதகரின்  செயலை தடுத்து நிறுத்தாது , ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்து  வறுமையில் வாடும் சூழ்நிலையை தரும் .

சில நபர்களுக்கு தனது வாயினாலேயே தனது வாழ்க்கையை கெடுத்து  கொள்வார்கள் , பெண்கள் என்றால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையாது , ஆண்கள்  என்றால் தனது வருமானத்தை அனைத்தையும் வீண் செலவு செய்யும்  சூழ்நிலையை தரும் , அல்லது மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு பிறகு  துன்பப்படும் சூழ்நிலையை தரும் , இவர்களின் வாழ்க்கை துணையின் நிலைதான்  மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக இருக்கும் , தேவையில்லாமல் இவர்களின்  ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும் , இவர்களால்  குடும்ப வாழ்க்கையில் எவ்வித நிம்மதியும் பெற முடியாமல் வாழ்க்கையை  வாழும் தன்மையை தரும் .

கடக லக்கினத்தை பெற்ற அன்பர்களின் ஜாதகத்தில் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கை துணைக்கு  அதிக முக்கியதுவம் தருவது நல்லது , அவர்களுக்கு எவ்வித துன்பமும் வாக்கினாலும் , செயலாலும் செய்யாமல் இருப்பது பாதக ஸ்தான பலனை  குறைக்கும் , குறிப்பாக ஜாதகர் தனது பெயரில் உள்ள சொத்துகளை கவனமாக  பாதுகாப்பது அவசியம் , மேலும் உடல் நிலையில் சிறு வயது முதற்கொண்டே  அதிக கவனம் செலுத்துவது அவசியம் , நல்ல உணவு , உடற்பயிற்ச்சி , வண்டி வாகனங்களில் அதிக பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது  அவசியம் .

துலாம் :

காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஏழாம் ராசியான துலாம்  ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு பாதக ஸ்தானமாக வருவது 11 ம் வீடான சிம்மம் , இந்த வீட்டுடன் ஜாதகரின் லக்கினம் தொடர்பு பெரும் பொழுது ஜாதகரின் செயல்கள் அதிகம் நாத்திக அமைப்பில் இருக்கும் , தனது குலதேவதையை  நிந்தனை செய்யும் தன்மையும் , பெண்களுக்கு துரோகம் செய்யும்  தன்மையும் , இறை வழிபாட்டினை கேலி செய்யும் மன நிலையை தரும் , குறிப்பாக  ஜாதகருக்கு நன்மை செய்பவர்களை கூட பகைத்து கொள்ளும்  மன நிலையை தரும் , தனது ஜாதகத்தில் உள்ள புண்ணிய பதிவுகளை  தானே கெடுத்து கொள்ளும் தன்மையை தரும் . 

ஜாதகர் பெற்றோர் மற்றும் வயதில் பெரியவர்களின் மனதை அதிகம் பாதிக்க செய்வார்கள்  , அவர்களின் சாபம் ஜாதகரை வெகுவாக பாதிக்கும் , பெரியவர்கள்  கூறும் அறிவுரைகளை கேட்காமல் ஜாதகர் தான்தோன்றி தனமாக  நடந்து தனது வாழ்க்கையில் பல நன்மைகளை பெற இயலாமல் துன்பப்படும்  நிலையை தரும் , முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும் , மற்றவர்களின்  சொத்து சுகங்களுக்கு ஆசை கொண்டு பாவ காரியங்களை எவ்வித  தயக்கமும் இன்றி செய்யும் சூழ்நிலையை தரும் , இவை அனைத்தும் ஜாதகரை மனதளவில் கூட சிறு பாதிப்பையோ பயத்தையோ தராது என்பதே வேதனைக்கு  உரிய விஷயம் .

துலாம் லக்கினத்தை பெற்ற அன்பர்களின் ஜாதகத்தில் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் பெற்றோர் மற்றும்  பெரியவர்களை மதித்து அவர்களின் சொற்படி வாழ்க்கையில் நடப்பது சகல நிலைகளிலும் பாதக ஸ்தான பலனை குறைக்கும் , தெய்வீக காரியங்களுக் தன்னால்  இயன்ற உதவிகளையும் , பிராமண தர்மங்களையும் வாழ்நாள் முழுவதும்  செய்து வருவது அவசியம் , குறிப்பாக தனது இல்லங்களில்  சுப  ஹோமங்களை வருடம் தவறாமல் செய்து வருவது அவசியம் அல்லது பசு தானம் செய்து வருவது பாதக ஸ்தான பலனை வெகுவாக குறைக்கும் .

மகரம் :

காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பத்தாம்  ராசியான மகர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு பாதக ஸ்தானமாக வருவது 11 ம் வீடான விருச்சகம், இந்த வீட்டுடன் ஜாதகரின் லக்கினம் தொடர்பு பெரும் பொழுது ஜாதகரின் எண்ணம் மற்றும் மன நிலை திடீர் பாதிப்பிற்கு உள்ளாகும் , மன நோய் , மன குழப்பம் , எண்ண சிதறல்கள் என மனோ ரீதியான பல இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும் அல்லது மற்றவர்களிடம் சூழ்நிலை கைதியாக மாட்டி கொண்டு அவதியுற நேரும் , எப்பொழுதும் தெளிவற்ற மன  நிலையுடனே ஜாதகர் துன்பப்பட கூடும் , இவர்கள் என்ன  மனநிலையுடன் இருக்கிறார்கள் என்பதை எந்த மனோதத்துவ நிபுணரும் கண்டுபிடிக்க இயலாது , அவ்வளவு மன குழப்ப முடிச்சுகளுடன் ஜாதகர் இருப்பார் , இவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்பது அவ்வளவு எளிதான  காரியம் அல்ல என்பதே உண்மை .

சிலர் மீள முடியாத குடிபழக்கத்திற்கு அடிமையாகி தனது உடல்நிலையையும், மன  நிலையையும் வெகுவாக கெடுத்து கொள்வார்கள் , தன்னம்பிக்கை இல்லாத மன நிலையும், பயந்த சுபாவத்தையும் தரும் , இதனால் எவ்வித சுய முயற்சியும்  செய்யாமல் , மற்றவரை சார்ந்து வாழும் சூழ்நிலையை தரும் , இதனால்  மற்றவர்களுக்கு அதிக சிரமங்களை ஏற்ப்படுத்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை  அதிகம் உருவாக்கும் , ஜாதகர் விளைவு அறியாமல் செய்யும் சில காரியங்கள் வாழ்நாள் முழுவதும் ஜாதகருக்கும் , ஜாதகரை சார்ந்தவர்களுக்கும்  ஆறாத மன காயத்தையும் , வடுவையும் ஏற்ப்படுத்தும் .

மகர  லக்கினத்தை பெற்ற அன்பர்களின் ஜாதகத்தில் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் முடிந்த அளவிற்கு தன்னம்பிக்கையை  வளர்த்துகொள்வது அவசியம் , அல்லது சொந்த பந்தங்கள் , உறவுகளுடன் கூடி வாழும சூழ்நிலையை உருவாக்கி கொள்வது அவசியம் அல்லது அனைவரிடமும் மனம்விட்டு பேசி பழகி , சிரித்து சந்தோசமாக  இருப்பது நிச்சயம் ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல  முன்னேற்றங்களை  தரும் , இந்த லக்கினத்தை சார்ந்தவர்கள் பாதக ஸ்தான  அமைப்புடன் தொடர்பு பெற்று பாதிக்க பட்டு இருப்பின் , இவர்களது பெற்றோர்கள்  அல்லது வாழ்க்கை துணை ஜாதகருக்கு ஆதரவாக இருப்பது அவசியம் , இந்த ஒத்துழைப்பு மட்டும் இருப்பின் ஜாதகரின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்து விடும் , இவர்களின் குறைகளை மறந்து நன்மை  செய்வது இவர்களை சார்ந்தவர்களின் கடமை, ஜாதக ரீதியாக சர இலக்கின அமைப்பில் கடுமையாக பாதிக்க படும் அன்பர்கள் இவர்களே என்பது குறிப்பிட தக்கது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


2 கருத்துகள்:

  1. Hi,

    Nice informative post

    Paathaga Sthanam and its effect should be calculated in respect to rasi Chakram or Bhava Chakram Becaue some it changes in horoscope .

    Regards,

    Vijay

    பதிலளிநீக்கு
  2. DEAR SIR, oru jadhagathil Guru - sani serkkai yin vilaivukal enna? i request you for the answer

    பதிலளிநீக்கு