புதன், 30 அக்டோபர், 2013

லக்கினம் முதல் களத்திர ஸ்தானம் வரை கிரகங்கள் அமர்ந்து, கால சர்ப்ப தோஷம் ஏற்ப்பட்டாலும், லக்கினத்தில் அமர்ந்த ராகு அல்லது கேது நன்மையை செய்யுமா ?



கேள்வி : 

லக்கினம் முதல் களத்திர ஸ்தானம் வரை கிரகங்கள் அமர்ந்து, கால சர்ப்ப தோஷம் ஏற்ப்பட்டாலும், லக்கினத்தில் அமர்ந்த ராகு அல்லது கேது நன்மையை செய்யுமா ?

பதில் : 

சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு உற்பட்ட பாகைக்குள் அமரும் ராகுவோ அல்லது கேதுவோ , லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையை செய்வார்கள், இதில் எவ்வித சந்தேகமும் இல்லை, இதில் கால சர்ப்ப தோஷத்திற்கு இடமில்லை, இங்கே லக்கினத்தில் அமரும் ராகு கேது லக்கினத்தை 100 சதவிகித வலிமையை தந்துவிடுவார்கள், ஜாதகரின் லக்கினம் சரமாக அமைந்தால் செயல்பாடுகளில் வேகத்தையும், ஸ்திரமாக அமைந்தால் நிலையான வாழ்க்கையையும், உபயமாக அமைந்தால் தனது வாழ்க்கையை பிறருக்கு உபயோகப்படும் விதத்திலும் , ஜாதகரின் வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும்.

மேலும் லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்து, லக்கினம் நெருப்பு தத்துவ ராசி என்றால் ஜாதகர் மிகுந்த உடல் வலிமையுடன் சுறு சுறுப்பாக செயல்படும் தன்மையையும், நீண்ட ஆயுளையும், எவ்வித உடல் துன்பத்தையும் ஏற்கும் மன வலிமையை தரும், உடல் மற்றும் மனம் சிறப்பாக செயல்பட்டு நினைத்ததை அடையும் தன்மையை தரும், குறிப்பாக லட்சிய புருஷராக ஜாதகர் திகழ்வார், நெருப்பு தத்துவ ராசியில் நன்மை தரும் அமைப்பில் அமரும் ராகு கேது சிறந்த நிர்வாக திறமையை தரும்.

லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்து, லக்கினம் நில தத்துவ ராசிஎன்றால், ஜாதகரின் உடல் நிலை எப்பொழுது சீராக இருக்கும் தன்மையை பெற்று விடும், ஜாதகரின் குணம் மிகவும் பண்பாடு உடையதாகவும், பொறுமையின் சின்னமாகவும் அமைந்து விடும், தனது தெளிவான சிந்தனையாலும், திட்டமிடுதாலும் வாழ்க்கையில் மிக பெரிய சொத்து சுகங்களை நிர்வகிக்கும் யோகத்தை தரும், நில தத்துவ ராசியில் நன்மை தரும் அமைப்பில் அமரும் ராகு கேது சிறந்த உடல் நிலையையும் பொருள் ஆதாயத்தையும் தரும்.

லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்து, லக்கினம் காற்று தத்துவ ராசியாக அமைந்தால், ஜாதகரின் அறிவாற்றலே மிகுந்து நிற்கும் , தனது அறிவாற்றலால் சாதிக்க இயலாத காரியத்தை கூட எவரும் எதிர்பார்க்காத விதத்தில் சாதிக்கும் தன்மையை தரும் , சாய கிரகங்கள் காற்று தத்துவ ராசியில் சிறப்ப செயல்படும் தன்மை உண்டாகும் , எவ்வித பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வை சொல்லும் சிறந்த அறிவு ஆற்றலை தரும் அமைப்பாக இதை கருதலாம், எந்த ஒரு ஜாதகத்திலும் ராகு அல்லது கேது காற்று தத்துவ ராசியில் நல்ல நிலையில், எந்த ஒரு பாவகத்திலும்  அமர்ந்து இருப்பது, ஜாதகருக்கு வெற்றி மேல் வெற்றியை தரும் அமைப்பாகும்.

லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்து, லக்கினம் நீர் தத்துவ ராசியாக அமைந்தால் மனித வாழ்க்கையின் பரிபூரண நிலையை அனுபவிக்க வைக்கும், பூ உலக வாழ்க்கையில் சகல யோகங்களையும் வாரி வழங்கும் தன்மையை தரும் , ரத கஜ துரகதிபதிகளுடன் மேன்மைதரும் அரசியல் வெற்றியையும் தரும், சகல யோகங்களையும் தவிர்த்து , ஆன்மீக வாழ்க்கையில் எளிமையான முறையில் இறை நிலையை அடையும் யோக வாழ்க்கையை தரும் , ஆக நீர் ராசியில் ராகு கேது நல்ல நிலையில் அமர்வது மேற்கண்ட யோக பலன்களை தரும் , ஒரு வேலை நீர் ராசியில் ராகு கேது பாதிப்பான பலனை தரும் நிலையில் அமர்ந்துவிட்டால் ஜாதகர் போதை பொருட்களுக்கு அடிமையாகும் தன்மையை தரும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ராகு கேது லக்கினத்தில் ( அதாவது லக்கினம் ஆரபிக்கும் பாகையில் இருந்து, லக்கினம் முடிவடையும் பாகைக்குள் ராகு கேது  இருக்க வேண்டும் ) அமர்ந்திருக்கிறது என்றால் நிச்சயம் லக்கினத்திற்கு, 100 சதவிகித வெற்றியை தரும் , லக்கினத்திற்கு எதிர்பாவகமாக  வரும் களத்திர ஸ்தானத்தில் அமரும் ராகுவோ அல்லது கேதுவோ சிறப்பான நன்மைகளை தருவார்கள் என்று எதிர்பார்க்க இயலாது , களத்திர  பாவக அதிபதியின் தன்மையை வைத்தே களத்திர ஸ்தானம் நன்மையை தருமா ? தீமையை தருமா ? என்று நிர்ணயம் செய்ய இயலும்.

 எடுத்து  காட்டாக களத்திர ஸ்தான அதிபதி வளர் பிறை சந்திரன், குரு, சுக்கிரன், சூரியனுடன் சேராத புதன் என்றால் களத்திர ஸ்தானத்தை 100 சதவிகிதம் கெடுத்து அவயோக பலன்களை வாரி வழங்கிவிடும், மாறாக களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய்,சூரியன்,சனி, தேய்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன் என்றால் களத்திர ஸ்தானம் 100 சதவீதம் வலிமை பெற்று களத்திர ஸ்தான அமைப்பில் இருந்து 100 சதவிகித யோக வாழ்க்கையை தந்துவிடும் . 

முதலில் ராகு கேது என்ற கிரகம் சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு உற்பட்ட பாகைக்குள்தான், அமர்ந்திருக்கிறார்களா ? என்று தெளிவாக தெரிந்து கொண்ட பிறகே மேற்கண்ட முறையில் பாவக வலிமையை நிர்ணயம் செய்ய வேண்டும், ராகு கேதுவுக்குள் அனைத்து கிரகம் அடங்கி இருக்கிறது என்பதற்காக ராகு கேது சர்ப்ப தோஷத்தை தரும் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது , எது எப்படியோ லக்கினத்தில் அமரும் ராகு கேது லக்கினத்தை  100 சதவிகிதம் வலிமை பெற செய்வார்கள் என்பது மட்டும் உறுதியானது  உண்மையானது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக