சனி, 9 ஏப்ரல், 2016

அவயோக ( தீமையான ) பலன்களில் இருந்து விடுபட ஜாதகர் செய்ய வேண்டிய பரிகாரங்கள் ​- ( இலக்கின பாவகம் )


லக்கினம் 

கண்ணாடி நமது உருவத்தை பற்றி அறிந்துகொள்ள உதவுவது போல், சுய ஜாதகம் நமது அகம் புறம் ஆகியவற்றை தெளிவாக உணர்ந்துகொள்ள உதவும், சுய ஜாதகம் என்பது லக்கினத்தை அடிப்படையாக கொண்டே இயங்குகிறது, எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் பாதிக்கபடும் பொழுது ஜாதகர் அந்த பாதிப்பில் இருந்து விடுபட எவ்வித பரிகாரங்களை தேடிகொள்வது என்பது பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! 

சுய ஜாதகத்தில் உயிர் உடலாகிய லக்கினம் எனும் முதல் பாவகம் வலிமை இழப்பின், ஜாதகர் இலக்கின பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலை தரும், குறிப்பாக சுய ஜாதகங்களில் லக்கினம் எனும் முதல் பாவகம் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு அதிக அளவிலான பாதிப்பை தரும், மேலும்  லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை வாரி வழங்கும்.

 சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாழ்க்கை பாதிக்க படுவதற்கு "ஜாதகரின் செயல்பாடுகளே" காரணமாக அமையும், மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை, ஜாதகரே தவிர்த்து உதறும் சூழ்நிலையை தரும், ஜாதகர் தனது உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துகொள்ளாமல், தனது படைப்பின் ரகசியம் அறியாமல் சுக போகங்களிலும், கேளிக்கைகளிலும் தனது உடல் மற்றும் மனம் சார்ந்த ஜீவ சக்திகளை வீண் விரையம் செய்வார், ஜாதகர் எடுக்கும் முடிவுகளே சரியானது என வாதம் செய்வார், ஆனால் நடைமுறையில் ஜாதகர் எடுக்கும் முடிவுகள் யாவும், மிகப்பெரிய பின்னடைவை தரும், சரியென்று நினைத்து ஜாதகர் செய்யும் காரியங்கள் யாவும் மிகப்பெரிய இன்னல்களையும், துன்பத்தையும் வாரி வழங்கும், சுய சிந்தனையும், அறிவும் ஜாதகருக்கு பலன் தாராது, ஜாதகரின் மன நிலையை உணர்ந்த மற்றவர்கள் தமது சுய தேவைகளுக்காக ஜாதகரை மிக  சுலபமாக பயன்படுத்தி கொள்வார்கள், இந்த விஷயத்தை ஜாதகர் உணர்ந்துகொல்வதற்கே வெகு காலம் பிடிக்கும்.

மேலும் லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது, ஜாதகரின் உடல் மனம் மற்றும் வளரும் சூழ்நிலை ஆகியவற்றிற்க்கு உகந்ததது அல்ல, சுயமாக ஒரு முடிவு செய்வதற்கும் உகந்தது அல்ல, எதிர்பார்ப்புகள் யாவும் ஒரு காலகட்டத்தில் பொய்த்து போகும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல  எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், அவசர கதியில் செய்யும் தனது நிலைப்பாட்டால், தனிமையில் கலங்கி நிற்கும் சூழ்நிலையை தரும், தனக்கு சரியான நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் ஜாதகரின் கணிப்பு 100%  சதவிகிதம் தவறிவிடும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை ஜாதகரே உருவாக்கி கொள்வார்கள், வறட்டு பிடிவாதமும், முரன்பட்ட கருத்து வேறுபாடுகளும் சமுதாயத்தில் ஜாதகரை வேறு கோணத்தில் பார்வைக்கு ஆளாக்கி விடும், எந்த ஒரு விஷயமும் ஜாதகருக்கு மிக எளிதில் கிடைக்காது, ஒருவேளை கிடைத்தால், அந்த விஷயங்கள் வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த இன்னல்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், அடிப்படையில் "மானுட பிறவி பயனின்" பலனை அனுபவிக்க இயலாமலே ஜாதகர் தனது வாழ்க்கையை போராட்டத்துடன் வாழ்ந்து முடிக்கும் தன்மையை தரும், எதிர்ப்புகளும், உதவி இன்மையும் ஜாதகரின் மன நிலை மற்றும் உடல் நிலையை கடுமையாக பாதிக்கும்.

 இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : உத்திரட்டாதி 1ம் பாதம் 

ஜாதகருக்கு லக்கினம் மகரம், மகரம் சர ராசியில் இயங்குவதால், ஜாதகருக்கு பாதகஸ்தானம் லாபம் மற்றும் அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படும் 11ம் பாவகமே பாதக ஸ்தானமாக வருகின்றது, மேலும் ஜாதகருக்கு லக்கினம் எனும் 1ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுகின்றது, ( லக்கினம் மட்டுமல்ல, 1,2,3,7ம் வீடுகளும் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெருன்கினறது ) மேலும் ஜாதகரின் பாதக ஸ்தானம் என்பது தனசு ராசியில் வியாபித்து இருக்கின்றது, தனுசு ராசி என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக, உபய நெருப்பு தத்வத்தில் அமைகின்றது, எனவே ஜாதகர் தனது பித்ருக்களின் கர்ம வினை பதிவினை, தனது இலக்கின பாவகம் பாதக ஸ்தான தொடர்பு வழியில் இருந்து அனுபவிக்கும் சூழ்நிலையை தருகின்றது, ஜாதகர் செய்யும் அவசர கதியிலான செயல்கள் அனைத்தும், ஜாதகரின் வாழ்க்கையில் வீண் அவ பெயரையும், இன்னல்களையும் வாரி வழங்கி கொண்டு உள்ளது, ஜாதகரின் அறிவு திறன் எவ்விதத்திலும் ஜாதகருக்கும், ஜாதகரை சார்ந்தவருக்கும் பலன் தரவில்லை, இயற்கையாக ஜாதகர் சுய கட்டுப்பாடு இன்றி செய்யும் காரியங்களால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை தற்பொழுது அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்.

தன்னை விட வயதில் அதிக உள்ள பெரியவர்களின் சாபத்திற்கும், கோபத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை ஜாதகரே உருவாக்கிக்கொண்டு, அதன் வழியில் இருந்து வரும் இன்னல்களையும் சந்திக்கும் நிலைக்கு தள்ளபடுகின்றார், செய்யும் காரியங்கள் அனைத்திலும் தோல்வி, தடைகள், ஜாதகர் எடுக்கும் முயற்சிகள் யாவும் ஜாதகருக்கே பாதகமாக திரும்பும் சூழ்நிலை, தனது முன்னேற்றத்தை பற்றி சிந்திக்காமல் மற்றவர்கள் விஷயங்களில் கவனம் செலுத்தி வீண் அவபெயரை சந்திக்கும் சூழ்நிலை, முற்றிலும் அதிர்ஷ்டமற்ற ஜாதக நிலை, எதிலும் ஆர்வமின்மை, செய்யும் தொழில் வழியில் இருந்து வரும் வருமானத்தை மற்றவர்கள் அனுபவிக்கும் தன்மை, தமது எதிர்காலம் பற்றிய சிந்தனை அற்ற நிலை, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆர்ப்பட்டு தனது உடலையும் மனதையும் வெகுவாக கெடுத்து கொள்ளும் அமைப்பு என, ஜாதகர் தமது வாழ்க்கைக்கு தாமே முடிவுரை எழுதிக்கொண்டு இருக்கின்றார்.

ஜாதகம் என்பது தம்மை பற்றி ஒரு தெளிவு பெறுவதற்கும், எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்வதற்கும் சரியான வழிகாட்டுதல்களை வழங்குவதை அறிந்துகொள்ளாமல், தமக்கு அனைத்தும் தெரியும் என்ற மிதமிஞ்சிய அசட்டு தைரியத்துடன், ஜாதகரின் செயல்பாடுகள் அமைந்து இருப்பது வருத்தத்திற்கு உரியதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஜாதகருக்கு இதற்க்கு முன் பெரியோர்கள் வழங்கிய அறிவுரைகளையும், ஜாதக பலாபலன்களையும், பரிந்துரை செய்த பரிகாரங்களையும்  இம்மியளவும் ஜாதகர் ஏற்றுகொள்வதாக தெரியவில்லை "விதி வலியது" ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் கேது திசையும், அடுத்து வரும் சுக்கிரன் திசையும் பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்துவது ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை மிக பெரிய கேள்விக்குறியாக மாற்றும் என்பது மட்டும் உறுதி, இதற்கு முன் நடைபெற்ற புதன் திசை ஜீவன வழியில் இருந்து யோக பலன்களை வழங்கியது, ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல பொருளாதார முன்னேற்றத்தை தந்தது, கேது திசை ஆரம்பித்ததும், பொருளாதாரம் ஆதால பாதாளத்துக்கு சென்று கொண்டு இருப்பதை ஜாதகர் இன்னும் உணரவில்லை என்றே தோன்றுகிறது.

இலக்கின பாவக வழியில் இருந்து ஜாதகர் நலம் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் :

1) தாம் எடுக்கும் முடிவுகள் சரியானது என்ற எண்ணத்தை ஜாதகர் முதலில் விட வேண்டும்.
2) பாதக ஸ்தானம் என்பது ஜாதகருக்கு நெருப்பு தத்துவ ராசி என்பதால், சுய கட்டுப்பாடும், பொறுமையும் அவசியம் தேவை.
3) தம்மை விட வயதில் அதிகம் உள்ள பெரியோர்களின் ஆலோசனையை பெற்று வாழ்க்கை நடத்துவது சகல நலன்களையும் தரும்.
4) பித்ரு வழிபாடு சகல நலன்களையும் வாரி வழங்கும்.
5) சுய ஒழுக்கமும், உடல் மன நலனில் அதிக அக்கறையும் கொள்வது ஜாதகருக்கு நல்லது.
6) தம்மிடம் உள்ள தீய பழக்க வழக்கங்களில் இருந்து ஜாதகர் அறவே விடுபடுவது சகல விதங்களில் இருந்தும் நலம் தரும்.
7) எந்த காரணத்தை கொண்டும் மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது நல்லதல்ல.
8) முறையாக ஆன்மீக தீட்சை நல்ல குருவிடம் பெற்று, தனது நிலையை பற்றி தெளிவு பெறுவது நல்லது. ( வாய்ப்பு குறைவு இருப்பினும் விடா முயற்ச்சி நன்மையை தரும் )
9) பணிவு,அன்பு,ஸ்திரமான மன நிலை, சுய ஒழுக்கம், விட்டு கொடுத்து செல்லும் மன நிலை ஆகியவை ஜாதகரின் வாழ்க்கையில் பாதக ஸ்தான தீமைகளில் இருந்து மீட்டு எடுக்கும்.

குறிப்பு :

பரிகாரம் என்பது சுய ஜாதகத்தில் எந்த பாவகங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதோ, அந்த பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்று கொண்டு, கர்ம வினையினை கழித்து கொள்வதே சிறப்பானது, மேலும் சுய ஜாதக அடிப்படையில் தமக்கு உகந்த கோவில் வழிபாடு, ரத்தின ஆகர்ஷ்ணம், ஹோமம், தான தர்மங்கள் மூலம் சரியான நிவர்த்திகளை தேடி வாழ்க்கையில் சகல நலன்களையும், யோகங்களையும் சிறப்பாக பெறலாம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக