புதன், 4 மே, 2016

தொழில் ஸ்தானம் - ஜாதக ரீதியாக தமக்கு உகந்த தொழில் அல்லது வேலையை தேர்வு செய்வது எப்படி ?


" உத்தியோகம் புருஷ லட்சணம் " என்ற பழமொழிக்கு உதாரணமாக வாழும் மனிதர்களுக்கே இந்த சமுதாயமும், உறவுகளும் கௌரவம், அந்தஸ்து மற்றும் மரியாதைகளை நிச்சயம் வாரி வழங்குகிறது, கல்வி காலங்களுக்கு பிறகு சரியான ஜீவனத்தை தேடுவதில் அதிக ஆர்வம் இன்றைய இளைஞர்களுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை, இருப்பினும் சுய ஜாதக ரீதியாக தமக்கு உகந்த தொழில் அல்லது பணியை தேர்வு செய்யாத பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கை திசைமாறி செல்வதற்கு அதிக வாய்ப்புண்டு, எந்தவிதத்திலும் தமக்கு சம்பந்தம் இல்லாத துறையை தேர்வு செய்து, கடனுக்காக அந்த தொழிலை செய்வதை விட, தமக்கு உகந்த ஆர்வமுள்ள தொழில்களில் ஜாதகர் ஈடுபடும்  பொழுது, ஜாதகரின் முன்னேற்றமும் சிறப்பாக அமையும். 

மேலும் ஜாதகர் தனது வாழ்க்கையில் முழு ஈடுபாட்டுடன் செய்யும் தொழில் மற்றும் வேலை உலக புகழையும், தன்னிறைவான வசதி வாய்ப்புகளையும் வாரி வழங்கும், நல்ல ஜீவனம் அமைவது என்பது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் என்று அழைக்கப்படும் 10ம் பாவக வலிமையின் அடிப்படையிலேயே அமைகிறது, மேலும் 10ம் பாவக வலிமை சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில், கௌரவம் மற்றும் அந்தஸ்த்தை தாம் செய்யும் தொழில் வழியில் இருந்தே நிர்ணயம் செய்வதால், ஜாதகர் சமூகத்துடன் கொண்டுள்ள தொடர்புகளையும், அதன் வழியில் இருந்து பெரும் யோக நிலையையும் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவக வழியில் இருந்தே 100% விகிதம் பெறுகின்றார்.

எந்த ஒரு ஜாதகரும் தமது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமைக்கு ஏற்ப ஜீவனத்தை அமைத்துகொள்வது ஜாதகரின் வாழ்க்கையில் தன்னிறைவான முன்னேற்றங்களை வாரி வழங்கும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சர ராசி, ஸ்திர ராசி மற்றும் உபய ராசி என்றும் நெருப்பு தத்துவம், நில தத்துவம், காற்று  தத்துவம் மற்றும் நீர் தத்துவம் என்றும் இயற்கையால்  வகைபடுத்தபட்டுள்ளது, எந்த ஒரு ஜாதகருக்கும் மேற்கண்ட ராசி மற்றும் தத்துவ அமைப்பிலேயே ஜீவன ஸ்தானம் அமையும், அப்படி அமையும் ஜீவன ஸ்தான வலிமையை முதலில் அறிந்துகொள்வது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு உகந்த வெற்றியை தரும்  தொழில் அல்லது வேலையை துல்லியமாக தேர்வு செய்ய உதவி  புரியும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பின், ஜாதகர் ஜீவன ஸ்தானம் அமைந்த ராசி, ஜீவன ஸ்தானம் பெற்றுள்ள தத்துவம், ஜீவன ஸ்தானம் தொடர்பு பெற்றுள்ள பாவகம் ஆகியவற்றை கணிதம் செய்து மிக துல்லியமாக ஒருவரின் தொழில் அல்லது வேலையை நிச்சயம் நிர்ணயம் செய்ய இயலும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் ஜாதகருக்கு சாதகமாக அமைந்தால் ( வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ) தாம் தேர்வு செய்த தொழில் அல்லது பணியில் ஜாதகர் கொடிகட்டி பறக்கும் யோகத்தை தரும், நடைபெறும் திசா புத்திகள் சாதகமாக அமையவில்லை என்றாலும் ஜாதகருக்கு சிறப்பான ஜீவனத்தை வழங்குவதில் தவறுவது இல்லை, ஜீவன வெற்றி என்பது சாதகமான  திசா புத்திகள் நடைமுறைக்கு வரும்பொழுது மிக அபரிவிதமாக வாரி வழங்கிவிடும், இதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

ஜீவன பாவகம் தரும் பலனை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : தனுசு 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : சதயம் 4ம் பாதம் 

ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவக வலிமை  நிலையை ஆய்வு செய்வோம் அன்பர்களே! ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியாக அமைகிறது, மேலும் உபய ராசி நில தத்துவம், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெறுவது தமது பாவகத்துடனே என்பது வரவேற்க தக்கது, மேலும் ஜீவன ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் மற்ற வீடுகள் 7,10 ஆகும், எனவே ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையாக இருப்பது உறுதியாகிறது. 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகருக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள் வழியில் இருந்து நன்மைகளை வாரி வழங்கும், இந்த இடத்தில் வாழ்க்கை துணை பற்றி குறிப்பிடுவதற்கு  காரணம், பெண்கள் நினைத்தால் தமது வாழ்க்கை துணையை மிகசிறந்த இடத்திற்கு எடுத்துசெல்லும் வல்லமை பெற்றவர்கள் என்பதை தெரிவிப்பதற்கே, மேலும் ஜாதகர் தமது திருமணத்திற்கு பிறகே வாழ்க்கையில் சகல முன்னேற்றங்களையும் பெற்றார் என்பது கவனிக்க தக்கது, வீட்டில் நிம்மதி இருந்தால் மட்டுமே எந்த ஒரு ஆண்மகனும் தாம் செய்யும் தொழிலில் சிறந்து விளங்க முடியும்.

இயற்கையாகவே இந்த ஜாதகருக்கு 7ம் பாவகம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜீவன  உதவிகளையும் ஆதரவையும் பெற்று தந்தது, மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன  ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் இரண்டு, 
1) களத்திரம் என்று அழைக்கப்படும் 7ம் வீடு. 2) ஜீவனம் ஸ்தானம் என்று அழைக்கப்படும் 10ம் வீடு, ஜாதகரின் களத்திர ஸ்தானம் காலபுருஷ தத்துவத்திற்கு வீர்ய ஸ்தானமாகவும், ஜீவன ஸ்தானம் காலபுருஷ தத்துவத்திற்கு சத்ரு ஸ்தானமாகவும் அமைந்து மிகவும் வலிமை பெற்றுள்ளது.

 மேலும் ஜாதகரின் களத்திர ஸ்தானம் உபய காற்று தத்துவத்திலும், சர நீர் தத்துவத்திலும் சம்பந்தம் பெறுகின்றது ( 7ம் பாவகம் மிதுன ராசியில் 072:16:00 பாகையில் ஆரம்பித்து, கடக ராசியில் 101:49:01 பாகையில் முடிவடைகிறது )  ஜாதகரின் ஜீவன ஸ்தானம் உபய நில தத்துவத்திலும், சர கற்று தத்துவத்திலும் சம்பந்தம் பெறுகின்றது ( 10ம் பாவகம் கன்னி ராசியில் 166:34:14 பாகையில் ஆரம்பித்து, துலாம் ராசியில் 197:34:04 பாகையில் முடிவடைகிறது ) எனவே ஜாதகருக்கு மேற்கண்ட தத்துவ அமைப்பில்தான் ஜீவனம் அமைய வாய்ப்புள்ளது, இயற்கையாகவே மிதுனம் உபய காற்று தத்துவம் என்பதால் ஜாதகரின் வியாபர அறிவை குறிக்கும், மிதுனம் ஜாதகருக்கு  7ம் பாவகமாக அமைவது வியாபாரம் மற்றும் வியாபாரத்தில் தமக்குள்ள அறிவு திறனை குறிக்கும், கன்னி உபய நில தத்துவம் என்பதால் பூமியில் விளையும் உணவு சார்ந்த பொருட்களை குறிக்கும், கன்னி ஜாதகருக்கு 10ம் பாவகமாக அமைவது, ஜாதகர் மண்ணில் விளைந்து மக்கள் உபயோகிக்கும் உணவு பொருட்களை வியாபாரமாக செய்வதை குறிக்கிறது, எனவே ஜாதகர் 7ம் பாவக வழியில் இருந்து அறிவார்ந்த வியாபாரத்தையும், 10ம் பாவக வழியில் இருந்து மண் தத்துவம் சார்ந்த உணவு பொருட்களை வைத்து வியாபாரம் செய்வதை தெளிவு படுத்துகிறது, மேலும்  மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள் சார்ந்த வியாபாரத்தில், ஜீவன ஸ்தான வழியில் இருந்து தன்னிறைவான முன்னேற்றத்தை  பெறுவார் என்பதை அவரது சுய ஜாதகம் தெளிவு படுத்துகிறது.

1,3ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர்  நல்ல வியாபர திறன் கொண்டவர் என்பதையும், 3ம் பாவக வழியில் இருந்து செய்கின்ற வியாபரத்தில் வெற்றிகளை தொடர்ந்து பெறுவார் என்பதையும் உறுதி செய்கிறது, இதற்க்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் ஜாதகரின் 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது  குறைந்த முதலீட்டில் பன்மடங்கு லாபத்தை பெறுவார் என்பதை சிறப்பாக சொல்லலாம், மேலும் கடந்த புதன் திசை ஜாதகருக்கு 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தியது தாம் செய்த வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் யோகத்தை தந்தது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

தற்பொழுது நடைபெறும் கேது திசை ஜாதகருக்கு 1,3ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகர்  தாம் செய்து கொண்டு இருக்கும் வியாபாரத்தில் தன்னிறைவான வளர்ச்சி பெறுவதை தெளிவு படுத்துகிறது, மேலும் அடுத்து வரும் சுக்கிரன் திசையும் ஜாதகருக்கு 4,6,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது மிகுந்த யோகத்தையே தரும் என்பதால் ஜாதகரின் வாழ்க்கை இனிவரும் காலங்களில் மிகவும் சிறப்பானதாக அமையும் என்பது மட்டும் உறுதி, இவரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மிகவும்  வலிமையுடன் அமைந்ததும், அதைவிட லாப ஸ்தானம் மிக மிக வலிமையுடன் அமைந்ததும், ஜாதகரின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் தந்தது.

 லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் உடல் மனம்  மற்றும் செயல்பாட்டினையும், 2ம் பாவகம் வலிமை பெறுவது கை நிறைவான வருமானத்தையும், வியாபாரத்தில் பேச்சு திறமையையும், 3ம் பாவகம் வலிமை பெறுவது தனிப்பட்ட வியாபர திறமைகளையும், 4ம் பாவகம் வலிமை பெறுவது சொத்து சுக சேர்க்கையையும், 5ம் பாவகம் வலிமை பெறுவது சமயோசித புத்திசாலிதனத்தையும், தொழிலில் ஜாதகர் கொண்டுள்ள நுண் அறிவையும், 6ம் பாவகம் வலிமை பெறுவது குறுகிய கால வெற்றிகளையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது பொதுமக்கள், வாழ்க்கை துணை மற்றும் கூட்டாளிகள் ஆதரவையும், 10ம் பாவகம் வலிமை பெறுவது தொழில் வழியில் கௌரவத்தையும், சுய மரியாதை மற்றும் அந்தஸ்தையும், 11ம் பாவகம் வலிமை பெறுவது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கையையும், மிகுந்த அதிர்ஷ்ட சாலி என்ற நிலையையும், தன்னம்பிக்கையியும், முற்போக்கு சிந்தனையையும் ஒருங்கே அமையபெற்றவர் என்பதனையும், 12ம் பாவக வழியில் இருந்து போதும் என்ற மன நிறைவையும், நல்ல உறக்கத்தையும், மன நிம்மதியையும், வாரி வழங்கும்.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையில், தமக்கு உகந்த தொழிலை ஒரு ஜாதகர் தேர்ந்து எடுப்பராயின், சம்பந்தப்பட்ட ஜாதகர் தொழில் ரீதியாக தன்னிறைவு பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க இயலாது என்று உறுதியாக இந்த கட்டுரையில்  "ஜோதிடதீபம்" பதிவு செய்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக