வெள்ளி, 9 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மேஷம்)


 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மேஷம்

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 1ம் ராசியாகவும், சர நெருப்பு தத்துவ தன்மையை பெற்றதுமான மேஷ ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மேஷ லக்கினத்திற்க்கு, அஷ்டமாதிபதி மற்றும் விரைய ஸ்தான அதிபதி என்ற நிலையை பெறுவது கவனிக்கத்தக்கது, மேலும் குருபகவான் அஷ்டம ஸ்தானமான 8ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது மேஷ லக்கின அன்பர்களுக்கு சிறப்பை தரும் விஷயமல்ல, மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகளில் அதீத எச்சரிக்கை தேவை, பயணங்களில் மிகுந்த பாதுகாப்பும், உடல் நலனில் அதிக அக்கறையும் கொள்வது நல்லது, தெய்வீக வழிபாடுகளில் ஈடுபாடு காட்டுவது சிறப்பை தரும், திடீரென எடுக்கும் முடிவுகள் யாவும் தங்களுக்கு மிகப்பெரிய தோல்வியை தரக்கூடும், தன்னம்பிக்கை குறையும், இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் இறக்குமதி பொருள் சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம் உண்டு, தனது வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு அதிகம் என்பதால் வரும் இன்னல்களை மிக சிறப்பாக கையாண்டு வெற்றிகொள்ளும் வாய்ப்பை நல்கும், வண்டி வாகனங்களில் மட்டும் மிகுந்த பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வது அவசியமாகிறது, மேலும் முதலீடு செய்யுமுன் மிகுந்த கவனமுடன் இருப்பதும் மேஷ லக்கின அன்பர்களுக்கு நன்மை பயக்கும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் மேஷ லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தை வசீகரிப்பது, நிம்மதியின்மையை உருவாக்கும், மனம் ஒரு நிலைப்படுவது என்பது சற்று கடினமான காரியமாக அமையும், தெளிவில்லாத நிலை, எடுக்கும் காரியங்களில் தொய்வு, மன உறுதியின்மை, துவங்கும் காரியங்களில் திருப்தி இன்மை, பொழுதுபோக்கு விஷயங்களில் அதீத ஆர்வம், தன்னம்பிக்கை வெகுவாக குறையும் தன்மை, எந்த ஓர் காரியத்தையும் ஆர்வத்துடன் செய்ய இயலாமை, கடமைக்கு செய்து இன்னலுறும் தன்மை, பணியில் நிம்மதியின்மை, தொழில் வழியில் பாதிப்பு, மனதிருப்திக்காக செய்யும் காரியங்கள் யாவும் கடும் தோல்வியை சந்திக்கும் நிலை, வீண் விரையங்கள், முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் வழியில்  இருந்து வரும் தொந்தரவுகள், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதால் வரும் பாதிப்பு என்ற வகையில் கடுமையான இன்னல்களை தரும், சிறிது கவனமின்றி செயல்பட்டால் கூட வாழ்க்கையில் வெகுவான பாதிப்புகளை சந்திக்கும் நிலையை தரும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் மேஷ லக்கின அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகத்தை வசீகரிப்பது, குடும்ப வாழ்க்கையில் சற்று இன்னல்களை தரக்கூடும், குறிப்பாக வருமானம் சார்ந்த இன்னல்கள் என்பது அதிக அளவில் இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது, வீண் வாக்குவாதம் குடும்பத்தில் நிம்மதியிழப்பை தரும், செலவினங்களை கட்டுப்படுத்துவது இயலாத காரியமாக அமையும், தனம் சார்ந்த விஷயங்களிலேயே அதீத இன்னல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு, திட்டமிட்டு செயல்படுவதும், நிதி சார்ந்த விஷயங்களில் முறையான மேலாண்மையை கடைபிடிப்பது மட்டுமே சற்று நிம்மதியை தரக்கூடும், போதிய நிதி இன்மை காரணமாக மற்றவர்களிடம் கடன் பெரும் சூழ்நிலை உருவாகலாம், வக்கிரக காலங்களில் மட்டும் தங்களுக்கு எதிர்பாராத சுபயோகங்கள் தேடி வரக்கூடும், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேற வாய்ப்பு உண்டு என்பதால் சரியான நேரமறிந்து செயல்பட்டு வெற்றிகாணலாம்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் மேஷ லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் தேய்பிறை காலங்களில் நன்மையை தரும், திடீர் வண்டிவாகன யோகம், வீடு நிலம் சொத்து சுக சேர்க்கை உருவாக கூடும், மற்றவர்கள் தனம் தனது கையிருப்பாக உயரும், மனதில் உள்ள ஆசைகள் யாவும் நிறைவேறும் நேரமிது, எதிர்பாராத அதிர்ஷ்ட வாழ்க்கையை சுவீகரிக்கும் யோகத்தை தரும், வண்டி வாகன தொழில் அல்லது கட்டுமான துறை சார்ந்த அன்பர்களுக்கு புதிய வாய்ப்புகளும், புதிய தொழில் முன்னேற்றமும் உண்டாகும், வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரம் செய்யும் அன்பர்களின் வாழ்க்கையில் புதுவித தொழில் விருத்தி உண்டாகும், கலைத்துறையில் உள்ள அன்பர்களுக்கு திடீரென முன்னேற்றமும், நிறைவான வாய்ப்புகளும், பிரபல்ய யோகமும் உண்டாகும், தங்களின் முயற்சிகளில் எதிர்பாராத வெற்றியை சுக ஸ்தான அமைப்பில் இருந்து இந்த  குரு பகவானின் வசீகர பார்வை வாரி வழங்கும்.

குறிப்பு :

மேஷ  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 8,12,2,4ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 8,12,2,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக