சனி, 27 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - கும்பம் )



 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : கும்பம்

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியாகவும், ஸ்திர வாயு தத்துவ தன்மையை பெற்றதுமான கும்ப ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சுய வர்க்க கிரகத்தின் வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் கும்ப லக்கினத்திற்க்கு குடும்பம் மற்றும் லாப ஸ்தான அதிபதியாகிறார், கும்ப லக்கினத்திற்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்திற்க்கு பெயர்ச்சி ஆகும் குரு பகவான் கேந்திர ஆதிபத்திய தோஷம் என்ற நிலையை பெறுவது கும்ப லக்கின அன்பர்களுக்கு உகந்தது அல்ல, ஒரு வகையில் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் ( சுய வர்க்கம் ) என்பதால் தொழில் வழியில் இருந்து நன்மைகளை வழங்கிய போதிலும், கும்ப லக்கின  அன்பர்கள் தனது மனம் சொன்னபடி நடந்தால் இன்னல்கள் ஏற்படும், கவுரவ குறைவு உண்டாக வாய்ப்பு உண்டு, பொது காரியங்களில் மிகுந்த கவனம் தேவை, தொழில் வழியிலான புதிய முயற்சிகள் அல்லது முன்னேற்றம் சார்ந்த விஷயங்களில் சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே ஈடுபடவும், இல்லையெனில் அமைதி காப்பதே சாலச்சிறந்தது, ஏமாற்றத்தை தவிர்க்க அதுவே சிறந்த வழி, தனது வாழ்க்கை துணை வழியிலான ஆதரவும், பொருளாதர உதவிகளும் கும்ப லக்கின அன்பர்களுக்கு அபரிவிதமாக வந்து சேரும், குறிப்பாக தனது வாழ்க்கை துணையின் பெயரில் செய்யும் தொழில் வழியிலான விருத்தி மிகவும் சிறப்பாக அமையும், தனது பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிக மிக அவசியமானதாகிறது, சுய தொழில் புரிவோர் அனைவரும் மிகுந்த கவனமுடன் இயங்குவது பேரிழப்பை தவிர்க்க உதவும், குறிப்பாக சுய ஒழுக்கமும், மனக்கட்டுப்பாடும் அதிக அளவில் தேவைப்படும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் கும்ப லக்கின அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகத்தை வசீகரிப்பது, வருமானம் சார்ந்த விஷயங்களில் இன்னல்களையும் துன்பங்களையும் அதிக அளவில் தரக்கூடும், குடும்ப வாழ்க்கையில் துன்பங்களும், இல்லற வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்களும் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு, முறையான நிதி மேலாண்மை செய்யவில்லை எனில் கடுமையான நிதி நெருக்கடிகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படலாம், தனது பேச்சு திறமையை சிறப்பாக கையாண்டு நன்மைகளை பெரும் நேரமிது, உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலை உருவாகும் என்பதால் நிதி கையிருப்பை உறுதிசெய்துகொள்வது நல்லது, வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் வழியில் வீண் வாக்குவாதங்களை வளர்த்துக்கொள்வதும், உறவுகள் வழியில் பகைமை பாராட்டுவதும் மிகுந்த துன்பங்களை தரக்கூடும், சேமிப்பின் மூலம் நலம்  பெற வேண்டிய நேரமிது, வாழ்த்துக்கள்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் கும்ப லக்கின அன்பர்களுக்கு மாத்ரு ஸ்தானம் எனும் நான்காம் பாவகத்தை வசீகரிப்பது ஆண்கள் எனில் பெற்ற தாய்க்கும், பெண்கள் எனில் பெற்ற தகப்பாவுக்கும் இன்னல்களை தரக்கூடும், உடல் நலம் மற்றும் மருத்துவ செலவினங்களை தவிர்க்க இயலாது, வண்டி வாகனங்களில் செல்வோர் மிகுந்த பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வது சகல நலன்களையும் தரும், போக்குவரத்து மற்றும் சரக்கு உந்து சார்ந்த தொழில் செய்வோர் வருமானம் சார்ந்த இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை உருவாகக்கூடும், சுகபோக வாழ்க்கைக்கு யாதொரு குந்தகமும் வாராமல் பார்த்துக்கொள்வது நல்லது, தன்னிறைவான பொருளாதார மேம்பாடு, நிதி மேலாண்மை, சரியான திட்டமிடுதல்கள், எதிர்ப்புகளை சிறப்பாக கையாளும் தன்மை என சில நன்மைகள் நடைமுறைக்கு வந்த போதிலும், பாதிப்புகளை தவிர்க்க இயலாது, கேளிக்கை, பொழுது போக்கு அம்சங்களில் அதீத கவனம் செலுத்தினால் வாழ்க்கையே சூனியமாகிவிட வாய்ப்பு உண்டு என்பதை கருத்தில் கொள்க.

 குரு பகவான் தனது 9ம் பார்வையால் கும்ப லக்கின அன்பர்களுக்கு சத்ரு ஸ்தானம் எனும் ஆறாம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் வளர்பிறை காலங்களில் நன்மையை தரும், இருப்பினும் தேய் பிறை காலங்கள் வெகுவான இன்னல்களை தரும், உடல் நலம், கடன் தொந்தரவு, எதிரி தொந்தரவு, எதிர்ப்புகளை சமாளிக்க இயலாத சூழ்நிலை, போதிய வருமானம் இன்மை, வீண் செலவினங்கள், வட்டி வரவு செலவு சார்ந்த பிரச்சனைகள் என்ற வகையில் துன்பங்களை தரும், புதிய முயற்சிகள் வழியிலான வெற்றிகள் பாதிக்கப்படும் அல்லது தடை ஏற்படும், உறவுகள் வழியில் மனக்கசப்பு, பொருளாதார சிக்கல்கள், சரியான வாழ்க்கை பாதையை நிர்ணயம் செய்ய இயலாத நிலை, வயிறு சார்ந்த இன்னல்கள் என்ற வகையில் அதிக அளவிலான துன்பங்களை வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்கது, எந்த காரணத்தை கொண்டு மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பது உகந்தது அல்ல, அவர்களால் வரும் இன்னல்கள் தங்களின் வாழ்க்கையில் வெகுவான பாதிப்பை தரும், வாழ்க்கை முன்னேற்றத்தை கடுமையாக பாதிக்கும்.

குறிப்பு :

கும்ப லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 10,2,4,6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 10,2,4,6ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக