வெள்ளி, 4 நவம்பர், 2016

கிரக சேர்க்கை மற்றும் பார்வை மூலம் ஜாதகத்தில் சுபயோகங்களை நிர்ணயம் செய்வதும், அதன் வழியில் யோக பலன்களை எதிர்பார்ப்பதும் உகந்ததா ?



பெரும்பாலும் சுய ஜாதகங்களில், சுப கிரகங்கள் சேர்க்கை மற்றும் பார்வையை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோகங்கள் இருப்பின், யோகங்களை தரும் கிரகமும், அந்த கிரகங்களின் திசா புத்திகளும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான அணுகுமுறை என்றே "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் சில பாவகங்களின் சுப கிரகங்கள் அமர்வதை கருத்தில் கொண்டு யோக பெற்ற ஜாதகம் என்றும், அசுப கிரகங்கள் அமர்வதை கருத்தில் கொண்டு அவயோகம் பெற்ற ஜாதகம் என்றும் நிர்ணயம் செய்வதில் உண்மை இல்லை என்பதை தெளிவு படுத்தவும் விருப்பம் கொள்கிறது.

உதாரணமாக ஒரு நிமிட வித்தியாசத்தில் பிறக்கும் இரட்டையர் ஜாதகங்களில் ஒரேமாதிரியான கிரக அமர்வு இருப்பினும், இருவரின் வாழ்க்கை முறை ஒரேமாதிரியான அமைப்பில் இருப்பதில்லை, இருவருக்கும் அவரவர் ஜாதகங்களில் ஒரே மாதிரியான கிரக சேர்க்கை, கிரகங்களின் பார்வை, கிரகங்களின் யோக அமைப்புகள் இருப்பினும், நடைமுறையில் அவரவர் வாழ்க்கையில் முற்றிலும் வித்தியாசனமான பலாபலன்களே நடைமுறைக்கு வருகிறது, எனவே சுய ஜாதகங்களில் உள்ள கிரக சேர்க்கையையும், பார்வையும் வைத்து இது யோக ஜாதகம் என்று முடிவு செய்வதும், அவயோக ஜாதகம் என்று முடிவு செய்வதும் முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு முரணான தவறான அணுகுமுறை என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே!

அடிப்படையில் மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கு தனிப்பட்ட சுய ஜாதகம் உண்டு என்பதனையும், அந்த ஜாதகம் ஒருவருக்கு இருப்பதுபோல் மற்றவருக்கு இருக்காது என்பதும் மாற்ற இயலாத விதி மேலும் இதை ஒவ்வொருவரின் கைரேகைக்கு ஒப்பிடலாம், ஒருவருக்கு உள்ளதுபோல் மற்றவர்க்கு கைரேகை அமைய வாய்ப்பில்லை என்பதுபோல், ஒருவரது ஜாதகம் போல் மற்றோருவருக்கு இருக்க வாய்ப்பே இல்லை எனலாம், மேலோட்ட்மாக கிரகங்களின் அமர்வு நிலை மற்றும் பார்வையை வைத்து காணும் பொழுது இந்த விஷயங்கள் பிடிபட வாய்ப்பு இல்லை, சுய ஜாதக பாவக வலிமைக்கு முக்கியத்துவம் தந்து ஜாதகத்தை ஆய்வு செய்யும் பொழுது நிச்சயம் நம்மால் உணர இயலும்.

கிரக அமர்வு நிலை, கிரக சேர்க்கை நிலை, கிரகங்களின் பார்வை நிலை, மற்றும் நவ கிரகங்கள் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பெரும் ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ஆகியவைகளை கொண்டு சுய ஜாதகத்திற்கு பலன் நிர்ணயம் செய்வது மண் குதிரையை நம்பி நடு ஆற்றில் இறங்குவதற்கு பொருத்தமானது, மேலும் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையை பற்றியும், நவகிரகங்கள் தனது திசையில் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை பற்றியும், அது தரும் பலாபலன்கள் பற்றியும் கருத்தில் கொள்ளாமல் பலன் கூறுவது என்பதும் முற்றிலும் தவறான அணுகுமுறையே, இதனால் நிச்சயம் தவறான பலாபலன்களை கூற அதிக வாய்ப்பு உண்டு, சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு பலன்காண முற்படுவதே வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சிறப்பான நல்வழியை காட்டும், அதுவே நமது வாழ்க்கையில் விழிப்புணர்வை தந்து வெற்றிகரமான யோக வாழ்க்கையை நல்கும்.

சுய ஜாதகத்தில் பாவக வலிமையையும், நவகிரகங்கள் தனது திசையில் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையையும், அது தரும் பலன்கள் பற்றியும், தெளிவான விளக்கம் ஒரு ஜாதகருக்கு கிடைக்குமெனில், அந்த ஜாதகர் நிச்சயம் தமது வாழ்க்கையை சிறப்பாக முன்னேற்ற பாதையில் அமைத்துக்கொள்ள இயலும் உதாரணமாக, ஒருவருக்கு எதிர்வரும் திசை ஏற்று நடத்தும் பாவக பலனை பற்றி தெளிவாக தெரிந்து இருப்பின் நன்மை நடைபெறும்  பொழுது ஜாதகர் அதை பரிபூர்ணமாக ஏற்றுக்கொள்ளவும், தீமை நடைபெறும் பொழுது ஜாதகர் விழிப்புணர்வுடன் செயல்பட்டு திட்டமிட்ட வாழ்க்கையை பெறுவதற்கும் உதவும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், இதற்க்கு ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


ஜாதகருக்கு லக்கினம் : மீனம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 3ம் பாதம்

ஜாதகரின் கேள்வி :

1) நடைபெறும் ராகு திசையில் சந்திரன் புத்தி தரும் பலன்கள் யாது? அடுத்து வரும் குரு திசை தரும் பலன்கள் என்ன?

நடைபெறும் ராகு திசையில் சந்திரன் புத்தி 7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது தங்களுக்கு உகந்தது அல்ல, எனவே சந்திரன் புத்தி நடைபெறும் காலத்தில் தங்கள் களத்திர ஸ்தான வழியில் இருந்து தாமத திருமணம், எதிர்ப்பால் அமைப்பினரிடம் இருந்து இன்னல்கள், நண்பர்கள் வழியில் இருந்து துன்பங்கள் என மனநிம்மதி இழப்பையும், மனபோராட்டத்தையும் வாரி வழங்கும், மேலும் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வீண் விரையங்களும், துன்பங்களும், மருத்துவ செலவினங்களும் ஏற்பட்ட வாய்ப்பு உண்டாகும் என்பதால் சந்திரன் புத்தியில் தங்கள் 7,12ம் பாவக வழியில் இருந்து எச்சரிக்கை உடன் நடந்து கொள்வது நல்லது.

எதிர் வரும் குரு திசை தங்களுக்கு உடல் உயிராகிய 1ம் வீடு லக்கினத்துடன் சம்பந்தம் பெற்று முதல் பாவக பலனையே ஏற்று நடத்துவது வரவேற்க தக்கது, குரு திசை 16 வருடங்களும் தங்களுக்கு லக்கின வழியில் இருந்து புகழ்,வெற்றி,கீர்த்தி என அனைத்து நன்மைகளும் நடைமுறைக்கு வரும், தங்களது லக்கினம் மீனத்தில் 340:45:13 பாகையில் ஆரம்பித்தது மேஷத்தில் 014:16:57 பாகையில் முடிவு பெறுவதால் உபய நீர் தத்துவத்திற்கு உண்டான பரந்த மனபக்குவத்தையும், மனதில் நினைக்கும் காரியங்களில் வெற்றிகளையும், சர நெருப்பு தத்துவத்திற்க்கான வீரியம் மிக்க செயல்பாடுகளையும், சுய கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்க நெறியையும் பேணும் வல்லமையை வாரி வழங்கும், மேலும் சுறு சுறுப்புடன் செயல்பட்டு நினைத்த  காரியத்தை வெற்றி கொள்ளும் வல்லமையை வாரி வழங்கும், லட்சியங்கள் யாவும் நிறைவேறும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும், திருப்தியையும் போதும் என்ற மன நிறைவையும் நல்கும், எனவே குரு திசை தங்களுக்கு யோகம் மிகுந்த நல்வாழ்க்கையை லக்கின வழியில் இருந்து வாரி வழங்கும்.

மேற்கண்ட ஜாதகருக்கு உண்டான பலன்கள் பாவக வலிமையை அடிப்படையாக கொண்டும், திசை,புத்தி ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை அடிப்படையாக கொண்டு தெளிவாக விளக்கம் தர சுய ஜாதக கணிதம் நமக்கு மிகவும் உதவியாக அமைந்தது, இதன் அடிப்படையில் ஜாதகர் துல்லியமாக தமது வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள இயலும்,

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக