வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

நவ கிரகங்கள் ஜெனன ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பது யோகத்தை தருமா ? தனது திசாபுத்திகளில் சுபயோகங்களை வாரி வழங்குமா?



கேள்வி : 

 நவ கிரகங்கள் ஜெனன ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பது நமக்கு யோகத்தை தருமா ? தனது திசாபுத்திகளில் சுபயோகங்களை வாரி வழங்குமா?

பதில் :

 தங்களது கேள்வி " சிகப்பாக இருப்பவர் பொய் சொல்லமாட்டார் " என்ற வடிவேலின் திரைப்பட நகைச்சுவைக்கு இணையானதாக இருக்கின்றது, தாங்கள் மட்டுமல்ல பெரும்பாலானோர் தமது ஜாதகத்தில் ராசியிலோ அல்லது அம்சத்திலோ நவகிரகங்கள் ஆட்சி உச்ச நிலையில் இருப்பது சிறப்பு மிக்க சுபயோகங்களை வாரி வழங்கும் என்றும், அதன் திசா புத்தி காலத்தில் சுபயோக நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும் என்றும் ஓர் தவறான கண்ணோட்டத்தை பெற்று இருக்கின்றனர், மேலும் பகை நீசம் பெற்ற கிரகம் தமக்கு இன்னல்களை தரும் என்றும், அதன் திசா புத்தி காலங்கள் மிகுந்த துன்பத்தையும் அவயோக பலாபலன்களை தரும் என்றும் கருதிக்கொண்டு இருக்கின்றனர்.

இது முற்றிலும் தவறான கருத்தாகும் ஏனெனில் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பெரும் ஆட்சி,உச்சம்,நட்பு,சமம், பகை, நீசம் போன்றவை சுய ஜாதகத்திற்கு யோக அமைப்பையோ, அவயோக அமைப்பையோ வழங்குவதில்லை, மாறாக பிறந்த தேதி நேரம் மற்றும் இடம் ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு கணிதம் செய்யப்படும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையே ஜாதகருக்கு யோக அவயோக பலாபலன்களை வாரி வழங்குகிறது, எடுத்துக்காட்டாக சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஜாதகருக்கு யோக பலனையும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகள் ஜாதகருக்கு தான் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையும் தருகின்றது என்பதே உண்மை நிலை, இதை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலாபலன் காண முற்படுவதே நமது வாழ்க்கையில் ஜாதக ரீதியான நன்மைகளையும், சுபயோகங்களையும் சுவீகரிக்கும் தன்மையை தரும், கீழ்கண்ட உதாரண ஜாதகத்தை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம்
ராசி : விருச்சிகம்
நட்ஷத்திரம் : அனுஷம் 1ம் பாதம்

ஜாதகருக்கு தற்போழுது கேது திசை ( 05/11/2017 முதல் 05/11/2024 வரை )  நடைமுறையில் உள்ளது, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு கேது பகவான் மேலோட்டமாக பார்க்கும் பொழுது 9ல் அமர்ந்து இருப்பதை போன்று தெரிந்தாலும் பாவக கணிதத்தின் அடிப்படையில் விருச்சிக ராசியில் உள்ள 8ம் பாவகத்தில் அமர்ந்து உள்ளது, ஜாதகருக்கு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகம் துலாம்  ராசியில் 205:09:09 பாகையில் ஆரம்பித்து விருச்சிக ராசியில் உள்ள 233:05:10 பாகையில் முடிவடைகிறது, இதற்க்கு உற்ப்பட்ட பாகையான 222:16:35 பாகையில் கேது பகவான் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு உச்சம் பெற்று அமர்ந்து இருக்கிறார், எனவே ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் கேது திசை யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்ற தவறான புரிதல் ஜாதகருக்கு இருப்பது அவரது அறியாமையை காட்டுகிறது.

தற்போழுது நடைபெறும் கேது திசை ஜாதகருக்கு விருச்சிக ராசியில் உச்சம் பெற்று தனது திசையினை நடத்தினாலும், சுய ஜாதகத்தில் அவர் ஏற்று நடத்தும் பாவக தொடர்பு என்பது கவனிக்கத்தக்க விஷயமாக அமைகிறது, ஜாதகருக்கு  தற்போழுது நடைபெறும் கேது திசை 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று ஆயுள் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு திடீர் பொருள் இழப்பு, வீண் மருத்துவ செலவுகள், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் மனஅழுத்தம், மனப்போராட்டம் மற்றும் விபத்து, திடீர் செலவினங்கள், எதிர்பாராத இன்னல்கள் என்ற வகையில் பாதிப்பை தந்துகொண்டு இருக்கின்றது, சுய ஜாதகத்தில் கேது உச்சம் பெற்று இருப்பினும் தனது திசையில் வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு உகந்ததல்ல.

அடுத்து வரும் சுக்கிரன் திசை ரிஷபத்தில் உள்ள 3ம் பாவகத்தில் ஆட்சி பெற்று, தனது திசையில் 9ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு தனது அறிவு திறன், பயணம், உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தின் வழியில் இருந்து சுபயோக வாழ்க்கையை சுக்கிரன் திசை முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரும், ஜாதகருக்கு சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமர்வதும், தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், எனவே சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  ஆட்சி,உச்சம்,நட்பு,சமம், பகை, நீசம் போன்ற நிலையை பெறுவது யோக வாழ்க்கையை வாரி வழங்காது, நவ கிரகங்கள் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு எப்படிப்பட்ட நிலையில் அமர்ந்தாலும், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதே ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் சுபயோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதை கருத்தில் கொள்வது  அவசியமாகிறது.

குறிப்பு :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நவகிரகங்கள் பெரும் வலிமையை கருத்தில் கொண்டு பலன் காண முற்படுவது முற்றிலும் தவறான அணுகுமுறையாக " ஜோதிடதீபம் " கருதுகிறது, சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் வலிமை பெற்ற பாவக பலனை தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் ஏற்று நடத்துகிறதா ? வலிமை அற்ற பாவக பலனை  தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் ஏற்று நடத்துகிறதா ? என்பதில் தெளிவு பெற்று இருப்பதே சுய ஜாதக பலாபலனை தெளிவாக  அறிந்துகொள்ள வழிவகுக்கும், " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக