சனி, 15 ஜூலை, 2017

சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள், ஜாதகருக்கு பலன்தாராமல் போவதற்கு காரணம் என்ன ?

 
 
ஒருவரது சுய ஜாதகத்தில் யோக அவயோகங்களை நிர்ணயம் செய்யும் பொழுது கிரக சேர்க்கைகளை கொண்டோ, சில கிரகங்கள் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பெரும் பலத்தை ( ஆட்சி, உச்சம், நட்பு, சமம், பகை, நீசம் ) கருத்தில் கொண்டோ, லக்கினம் மற்றும் ராசி அமைப்பிற்கு கிரகங்கள் ஜெனன ஜாதகத்தில் நின்ற நிலையை கருத்தில் கொண்டோ, யோகம் அவயோகம் என்று நிர்ணயம் செய்யும் பொழுது பலாபலன்கள் முற்றிலும் முன்னுக்கு பின் முரணாக அமைந்துவிடும், மேலும் சுய ஜாதகத்தில் சுப கிரகங்கள் திசாபுத்திகள் ஜாதகருக்கு யோகத்தை தரும் என்று முடிவு செய்வதும், அசுப கிரகங்களின் திசாபுத்திகள் ஜாதகருக்கு அவயோகத்தை தரும் என்று முடிவு செய்வது சிறிதும் சுய ஜாதக ஜோதிடகணிதத்திற்க்கு பொருந்தாத விஷயமாக " ஜோதிடதீபம்" கருதுகிறது.

எனில் ஒருவரது ஜாதகத்தில் யோக நிலை அல்லது அவயோக நிலையை எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்வது மிக துல்லியமாக அமையும் என்ற கேள்வி எழுவது இயற்கையே, இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது அவரவர் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வலிமையை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசாபுத்திகள் சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டும், திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதக பலாபலன் காண்பதே சரியான அணுகுமுறை என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் யோக பலன்களையும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் அவயோக பலன்களையும் அனுபவிக்கும் நிலையை தரும், இதில் கோட்சார கிரகங்களின் தாக்கமும் ஜாதகருக்கு நன்மை தீமையை வழங்கும் வல்லமை உண்டு என்பதை கருத்தில் கொள்வது, துல்லியமான ஜாதக யோக அவயோக பலாபலன்களை பற்றி கூற உதவும்.

சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பது ( பாவக வலிமை ) பெரிய விஷயமல்ல நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசா புத்திகள் யோக பலனை ( வலிமை பெற்ற பாவக பலனை ) ஏற்று நடத்தினால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகர் சுய ஜாதகத்தில்  உள்ள யோக அமைப்பின் மூலம் நன்மைகளையும் சுபயோக வாழ்க்கையையும் பெற இயலும், யோகம் என்பது இங்கே சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையும், அதனால் ஜாதகர்  பெரும் நன்மைகளையும் குறிக்கும், சுய ஜாதகத்தில் யோகங்கள் உண்டு, நடைபெறும் அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் யோக பலன்களை ஏற்று நடத்துகிறது, இருப்பினும்  ஜாதகர்  சம்பந்தப்பட்ட பாவக வழியில் நன்மைகளை அனுபவிக்க வில்லை எனில் அதற்க்கு காரணம் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகர்  தேர்வு செய்த  வாழ்க்கை துணை ( அவயோக ஜாதகம் கொண்ட இல்லற துணை ) நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ( அவயோக ஜாதகம் கொண்ட நண்பர்கள், தொழில் முறை கூட்டாளிகள் ) அமைப்பில் இருந்து ஜாதகர் அதிக அளவிலான இன்னல்களை  சந்திக்கும் சூழ்நிலையை தரும், ஜாதகருக்கு சுப யோகங்கள் ( பாவக வலிமை ) பல இருந்தாலும் அதனால் யாதொரு நன்மையையும் ஜாதகர் பரிபூர்ணமாக அனுபவிக்க இயலாது என்பதனை மிக தெளிவாக பதிவு செய்கிறோம், மேலும் இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !



லக்கினம் : கன்னி 
ராசி : துலாம் 
நட்ஷத்திரம் : சித்திரை 3ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகியை திருமணம் செய்துகொண்ட அன்பருக்கு சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் சனி திசை ( 12/02/2014 முதல் 12/02/2033 வரை ) 1,4,7,10ம் வீடுகள் லாப ஸ்தானமான  11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மாத்ரு ஸ்தானமாக விளங்கும் கடக ராசியில் அமைவது ஜாதகரின் சுக போக வாழ்க்கையின் உன்னத தன்மையை எடுத்து உறைக்கிறது, ஜாதகருக்கு திருமணம் 2014 செப்டம்பர் மாதம் நடைபெற்றது, நடைபெற்ற சில மாதங்களிலே ஜாதகரின் வாழ்க்கையில்  புயல் வீச துவங்கிவிட்டது, குறிப்பாக ஜாதகர் வாழ்க்கை துணை வழியில் இருந்து கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளானார், சற்றும் தனது  குணத்திற்கு பொருந்தாத வாழ்க்கை துணையை தேர்வு செய்தது ஜாதகருக்கு போக போக நன்றாக புரிய ஆரம்பித்தது, இதன் தாக்கம் ஜாதகர் சிறப்பாக செய்துகொண்டு இருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஜாதகருக்கு பாதிப்பை தந்து சொந்த ஊருக்கு செல்லும் நிலையை தந்தது, கைநிறைவாய் பெற்று கொண்டு இருந்த வருமானமும் முற்றிலும் நின்றது, இதுவரை இருந்த ஜாதகரின் நம்பிக்கைகள் முற்றிலும் உடைந்தது, வாழ்க்கை துணை வழியில் இருந்து மேலும் இன்னல்கள் ஜாதகருக்கு வர ஆரம்பித்தது, ஜாதகர் ஒரு நிலைக்குமேல் தாங்க இயலாமல் அதிக அளவிலான மனப்போராட்டம், மனஅழுத்தத்திற்கு ஆளானார், குறிப்பாக ஜாதகர் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆனது ஜாதகரின் கவுரவ வாழ்க்கையே புரட்டி போட்டது, நிறைந்த குடி நோயாளியாக ஜாதகர் மாறி வாழ்க்கையில் மிகுந்த இன்னல்களை சந்திக்கும்  சூழ்நிலை ஏற்பட்டது, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் இந்த நிலை இல்லை என்ற போதிலும் தனது வாழ்க்கை துணையின் ஜாதகம் ஜாதகரை கடுமையாக வாட்டி எடுக்க  ஆரம்பித்து விட்டது, இதற்க்கு காரணமான வாழ்க்கை துணையின் ஜாதகத்தை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

மேற்கண்ட கன்னி லக்கின ஜாதகிக்கு, சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை குறிக்கும் 2,7ம் வீடுகள் முறையே விரைய ஸ்தானமான பனிரெண்டாம் பாவகத்துடனும், பாதக ஸ்தானத்துடனும் சம்பந்தம் பெறுவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையில் வரும் இடர்பாடுகளை கட்டியம் கூறுகிறது, குறிப்பாக பெண்களின் சுய ஜாதகத்தில் 1,2,4,5,7,8,12ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று இருப்பது யோகம் மிக்க இல்லற வாழ்க்கையை நல்கும், ஜாதகி லக்கின வழியில் இருந்து நல்ல உடல் நலம் மற்றும் மனநலம், 2ம் பாவக வழியில் இருந்து கணவருடன் சச்சரவு அற்ற இனிமையான குடும்ப வாழ்க்கை மற்றும் வருமான யோகத்தையும், 4ம் பாவக வழியில் இருந்து நல்ல குணம் மற்றும் சுக போகங்களை வாழ்க்கை துணையுடன் அனுபவிக்கும் யோகத்தையும், 5ம் பாவக வழியில் இருந்து நல்ல ஆண்வாரிசுடன் கூடிய  சமயோசித அதிபுத்திசாலித்தனத்தையும், 7ம் பாவக வழியில் இருந்து பரஸ்பர அன்பு நிறைந்த இல்லறத்தையும், 8ம் பாவக  வழியில் இருந்து நல்ல ஆயுளுடன் கூடிய திடீர் அதிர்ஷ்டங்களை கணவருக்கு வழங்கும் அமைப்பையும், 12ம் பாவக வழியில் இருந்து இல்லற சுக போகங்களை  தம்பதியர் இருவரும் லக்கிக்கும் தன்மையையும்  தரும்.

ஆனால் ஜாதகிக்கு 2,4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடனும், 5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்று முழு அளவில் இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிறது, லக்கினம் எனும் 1ம் வீடு மட்டும் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு நன்மையை தருகின்றது , பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் பாதிக்கப்படுவது நல்லதல்ல, குறிப்பாக எந்த ஒரு பாவகமும் மறைவு ஸ்தானமான 2,6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பானதல்ல, பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதக ஜாதகியின் வாழ்க்கை நரகத்திற்கு இணையான இன்னல்களை  வாரி வழங்கும், ஜாதகிக்கு மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்டது ஒரு பக்கம்  இருப்பினும், தற்போழுது நடைமுறையில்  உள்ள  குரு திசை ஜாதகிக்கு 11ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது ஜாதகியின் வாழ்க்கையை  நெருப்பில் இட்ட புழு போல் துவண்டு போக வைக்கும், மேலும் பாதக ஸ்தானத்தின்  தாக்கத்தை  தனது  கணவர்  அனுபவிக்கும் நிலையை  தரும் என்பது கவனிக்க தக்கது, குரு திசையில் தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் புத்தியும் ஜாதகிக்கு சாதகம் இன்றி  11ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது ஜாதகியையும், ஜாதகியின் கணவரையும் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்கும் என்பதனை தெளிவு படுத்த "ஜோதிடதீபம்" கடமை பட்டுள்ளது.

குறிப்பு : 

எனவே சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பினும், நமக்கு வரும்  வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்தால் சிறப்பான எதிர்காலம் அமையும், நட்சத்திர பொருத்தத்திற்கு மட்டும் முக்கிய துவம் தந்து, சுய ஜாதக வலிமையை கருத்தில் கொள்ளாமல் பொருத்தம் உண்டு என்று திருமணம் செய்ததின் விளைவை ஜாதகர் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர், சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பினும், அதற்க்கு பொருத்தமற்ற அவயோகம் நிறைந்த வாழ்க்கை துணை மற்றும் நண்பர்களின் சேர்க்கையை நாம் பெற்றால், அதன் காரணமாக நமது சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் " யோக பங்கம் " என்ற நிலையை அடைந்து  நமக்கு சுபயோகங்களை நல்காது என்பதனை, மேற்கண்ட உதாரண ஜாதகம் மூலம் நாம் தெளிவு பெறலாம்.
 
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக