வியாழன், 12 அக்டோபர், 2017

சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை இழப்பதால், ஜாதகருக்கு ஏற்படும் இன்னல்கள் !



 " எண்சான் உடம்பிற்கு சிரசே பிரதானம் " என்பதற்கு இணங்க சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் உடல் என்று வர்ணிக்கப்படும் லக்கினமே பிரதானம் ஆகும், சுய ஜாதக பலன்கான சம்பந்தப்பட்ட நபரின் லக்கினமே அடிப்படையாக விளங்குகிறது,  இது சம்பந்தப்பட்ட நபரின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் என்ற குறிப்பை கொண்டு  கணிதம் செய்யப்படும், அதன் அடிப்படையில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை வலிமை அற்ற தன்மை நிர்ணயம் செய்யபடுகிறது, ஒருவரது சுய ஜாதக பலாபலன்கள் பற்றி தெளிவு பெற நிச்சயம் அவரது லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசை புத்தி மற்றும் எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டும், சுய ஜாதக பலன் காண்பது அவசியமாகிறது.

அதன் அடிப்படையில் சுய ஜாதகத்தில் முதல் பாவகமான லக்கினம் வலிமை பெறுவது மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக அவயோக பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமையை பரிபூர்ணமாக பெற்று இருக்கும், மாறாக சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை அற்று காணப்படுவது ஜாதகர் மற்ற பாவக வழியில் இருந்து வரும் நன்மை தீமைகளை ஏற்றுக்கொள்ளும் வல்லமையை இழந்து காணப்படும், லக்கினம் பாதிப்படைவது என்பது சுய ஜாதகத்தில் முதல் வீடு மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெறுவது ( லக்கினாதிபதி 6,8,12ல் மறைவது என்பதல்ல ) ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும், மேலும் லக்கினம் எனும் முதல் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையை கணிக்க இயலாத கடுமையான பாதிப்பை தரும் ( சர லக்கினத்திற்கு 11ம் வீடும், ஸ்திர லக்கினத்திற்க்கு 9ம் வீடும், உபய லக்கினத்திற்க்கு 7ம் வீடும் பாதக ஸ்தானமாகும் ) ஒருவரது ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்களுடன் சம்பந்தம் பெரும் லக்கினம் மிகவும் பாதிப்பிற்க்கு ஆளாகி, ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும்.

லக்கினம் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஜாதகரின் உடல் நிலை மற்றும் மனநிலை வெகுவாக பாதிக்கும், நோய் எதிர்ப்பு தன்மை குறையும், ஜாதகரின் சிந்தனை மற்றும் செயல்பாடுகள் ஜாதகருக்கே எதிராக திரும்பும், வளரும் காலத்தில் பல எதிர்ப்புகளுக்கு இடையில் ஜாதகர் போராடி முன்னுக்குவரும் நிலையை தரும் அல்லது முன்னேற்றம் அற்ற நிலையில் தோல்வியை தரும், ஜாதகருக்கு அதிக அளவிலான எதிரிகளும், எதிர்ப்புகளும் தொடர்ந்து வரும் இதை சமாளிக்கும் வல்லமையும் ஜாதகருக்கு மிக குறைவாகவே அமைந்து இருக்கும், அடிக்கடி உடல் நலம் பாதிப்படையும், குறுகிய காலத்தில் மருத்துவ செலவினங்களை சந்திக்கும் நிலையை தரும், எதிரியின் பலமே உயர்ந்து நிற்கும், எதிர்மறையான எண்ணங்கள் ஜாதகரின் உடல் மனம் இரண்டையும் கடுமையாக பாதிக்கும், இதுவே ஜாதகரின் முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும், சில நேரங்களில் எதிரியின் மிரட்டலுக்கு பயந்து போகும் நிலையை  தரும், அதிக பொறுப்புகளை சுமக்கும் வல்லமையற்றவராக திகழ்வார்கள், சிறு உடல் தொந்தரவுக்கே அதிக மனபயம் கொண்டு தானும் பாதித்து தன்னை சார்ந்தவர்களையும் படுத்தி எடுக்கும் தன்மையை பெற்றவர்கள் என்பதால் இவர்களை மற்றவர்கள் கையாள அதிகம் சிரமப்படுவார்கள், மேற்கண்ட அமைப்பில் உள்ள வாழ்க்கை துணையை பெற்ற அன்பர்களின் பாடுதான் ரொம்ப சிரமம்.

லக்கினம் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஜாதகருக்கு வரும் எதிர்பாராத இழப்புகள் தாங்க இயலாவண்ணம் இருக்கும், தான் செய்யும் செய்கைகள் தனக்கு இன்னல்களை தரும் என்று நன்கு தெரிந்து இருந்தும் அசட்டு தைரியத்துடன் அதில் ஈடுபட்டு இழப்புகளை சந்திப்பார்கள், விபத்து, வீண் விரையம் போன்றவற்றை ஜாதகர் தவிர்க்க இயலாது, சில நேரங்களில்  இவர்கள் எடுக்கும் முடிவுகள் பலரது வாழ்க்கையையும் பாழ்படுத்திவிடும், குறிப்பாக வாழ்க்கை துணைக்கு தாங்க இயலாத இன்னல்களை தருவார்கள், நண்பர்கள் அனைவரும் இவர்களால் அதிகம் பாதிக்கப்படுவார்கள், சுய சிந்தனை என்பது ஜாதகருக்கு இழப்புகளையே  ஏற்படுத்தும், மனம் குறுக்கியவட்டத்தில் இருந்து வெளிவர மறுக்கும், தவறான திட்டமிடுதல்கள் மூலம் கடுமையான இழப்புகளை ஜாதகரும் சந்தித்து, ஜாதகரால் மற்றவர்களும் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கும், பெரும்பாலும் ஜாதகரின் சிந்தனை எதிர்மறையான எண்ணங்களால் சூழப்பட்ட மனநிலையில் அதிக போராட்டங்களை சந்திக்கும் நிலையை தரும், ஜாதகர் பலமுறை முயற்சித்தே சிறு வெற்றிகளை பெறவேண்டியிருக்கும், தீவிரமான எண்ணங்கள் ஜாதகரின் வாழ்க்கையை பல சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கு வித்திடும், கிணற்றுத்தவளையாய் வாழ்க்கையில் விழிப்புணர்வு அற்று தனது வாழ்க்கையை தானே பாதிப்பிற்கு ஆளாக்கும் தன்மையை தரும்.

லக்கினம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஜாதகரின் மனநிம்மதி கெடும், நல்ல உறக்கம் இன்றி பரிதவிக்கும் நிலையை தரும், ஜாதகர் தீட்டும் பெரிய அளவிலான திட்டங்கள் இறுதியில் முழு தோல்வியை  தரும், ஆண் பெண் உறவுகள் வழியிலான பேரிழப்புக்களை அதிக அளவில்  சந்திக்கும் நிலையை தரும், தனக்கு உகந்த துணையை சரியாக தேர்வு செய்யாமல் அதன் வழியில் இருந்து வரும் இன்னல்களை சந்தித்து நிம்மதி இல்லாமல் வாழ்க்கையில் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டி வரும், ஆன்மீகத்தில் நாட்டம் இன்றி நாத்திக செயல்பாட்டினை தரும், தெளிவில்லாத சிந்தனை ஜாதகரின் மனநிம்மதியை பறிக்கும், முதலீடு செய்வதால் பேரிழப்புகளை சந்திக்கும் நிலையை தரும், அதிக அளவில் மனநோய் சார்ந்த தொந்தரவுகளால் பாதிப்படையும் நிலையை தரும், மற்றவர்களால் தானும், தன்னால் மற்றவர்களும் நிம்மதியற்று மனோ ரீதியாக  போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், கற்பனையே  வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொண்டு  இன்னலுறும் தன்மையை தரும், திரை துறை சார்ந்த விஷயங்களில் வீண் கற்பனை செய்துகொண்டு வாழ்க்கையை கெடுத்துக்கொள்பவர்கள் அதிக அளவில் மேற்கண்ட அமைப்பை பெற்றவர்களே, சுய அறிவு சொல்வதை கருத்தில் கொள்ளாமல் தனது மனம்போன போக்கில் தனது வாழ்க்கையை வாழ்ந்து, யாதொரு பிரயோசனம் இன்றி ஜீவிக்கும் தன்மையை தரும், சில நபர்கள் தாங்க இயலாத மனஅழுத்தத்தின் காரணமாக தற்கொலை முயற்சி செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதும் உண்டு, 12ம் பாவகம் நீர் தத்துவ ராசி எனில் ஜாதகரின் நிலை மிகவும்  பரிதாபத்திற்க்கு உரியதாக மாறிவிடும்.

லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ( சரலக்கினம் )

அடிப்படையில் தன்னம்பிக்கையே ஜாதகருக்கு இருக்காது, செய்யும் காரியங்கள் யாவும் பிற்போக்கு தனமாகவும், மூட பழக்க வழக்கங்களை ஆதரிக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும், மிக மிக பழமைவாதிகளாக தனது வாழ்க்கையை சுருக்கிக்கொண்டு போராட்டத்தை மட்டுமே ஆயுதமாக கொண்டு வாழ்க்கையில் இன்னலுறுவார்கள், இவர்களால் மற்றவர்களுக்கு சிறிதும் நன்மை உண்டாகாது என்பதுடன், தனது வாழ்க்கையையும் தானே கெடுத்துக்கொள்வார்கள், அனைத்திற்கும் எதிர்ப்புவாதமே சரியானது என்று பிடிவாதம் செய்ப்பவர்கள், தேக ஆரோக்கியம் மற்றும் அறிவார்ந்த செயல்களில் ஈடுபாடு காட்டாமல், மற்றவர்கள் செய்வதை தானும் செய்து மிகப்பெரிய தோல்விகளை சந்திப்பார்கள், பொறுப்பற்ற தன்மை அதிகம் காணப்படும், அதிர்ஷ்டத்தின் தாக்கம் சிறிதும் இருக்காது, பகுத்தறிந்து செயல்படும் தன்மை இன்றி வேதனையை விலைகொடுத்து வாங்கிக்கொள்வார்கள், மற்றவர்களால் செய்யமுடியும் காரியத்தையும் தனது செய்கையின் மூலம் பாதிப்படைய செய்வார்கள், மற்றவர்களை முன்னிறுத்தி அதன் பின்னால் தனது ஜீவனத்தை மேற்கொள்வார்கள், எதிர்ப்புகள் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும், மற்றவர்களை சார்ந்து வாழும் சூழ்நிலையை தந்துவிடும், தெய்வீக அனுக்கிரகம் சிறிதும் இருக்காது, இவருடன்  சார்ந்தவர்கள் சுய ஜாதகம் வலிமை பெறவில்லை எனில், அவர்களின்  கதி அதோ கதிதான், சர லக்கினத்திற்க்கு அடிப்படையே வேகம்தான் ஆனால் இவர்களின் செயல்திறன் சிறிதும் அதற்க்கு பொருந்தவண்ணம் இருக்கும், சுய கட்டுப்பாடு, மனவலிமை, உடல் வலிமை, அறிவின் திறன் போன்றவை ஜாதகரின் வாழ்க்கையை விட்டே விலகி சென்றுவிடும்.

லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ( ஸ்திர லக்கினம் )

 ஜாதகருக்கு சமூகத்தில் நற்பெயர் கிடைப்பது அரிது, பலரது கண்டிப்புக்கு ஆளாகும்  சூழ்நிலையை தரும், அறிவுத்திறன் என்பது ஜாதகருக்கு எதிர்மறையாக வேலை செய்யும், தொடர்ந்து பாதிப்புகளை தரும் விஷயங்களில் ஈடுபட்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்வார்கள், குறிப்பாக தனது உடலுக்கும் மனதுக்கும் ஒவ்வாத காரியங்களில் ஈடுபட்டு இன்னலுறும் தன்மையை தரும், முதியவர்கள், ஆன்மீக பெரியோர்களின் நிந்தனைக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், யாதொரு அறிவுரையும் ஜாதகருக்கு பலன்தராது, தானே அறிவாளி என்ற எண்ணத்தை மனதில் நிலை நிறுத்தி நல்லோர்களின் சாபத்திற்கு  ஆளாகும் சூழ்நிலையை தரும், கற்ற கல்வி பலன்தராது, மிக உயர்ந்த இடத்தில் இருந்த போதிலும் செயல்பாடுகள் அதற்க்கு ஈடானதாக இருக்காது, எந்த காரியத்திலும் வெற்றி பெற ஜாதகர் கடுமையாக போராடவேண்டிவரும், தீயபழக்க வழக்கங்கள் ஜாதகருக்கு மிக எளிதில் சுவீகரிக்கபடும், அதில் இருந்து விடுபட ஜாதகர் மரண போராட்டம் நடத்த வேண்டியிருக்கும், செய்யக்கூடாத காரியங்களை செய்துவிட்டு அதன் வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் எதிர்கொள்ள இயலாமல் தவிப்பர், இறையருள் ஆசிர்வாதமும் பித்ரு ஆசிர்வாதமும் ஜாதகருக்கு சிறிதும் இன்றி வாழ்க்கையில் போராட்டத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலைய தரும், உண்மையான ஆன்மீகத்தை நாடாமல் போலி வேசதாரிகளை நம்பி தமது  வாழ்க்கையை தாமே கெடுத்துகொல்வர்கள், அறிவில் விழிப்பு நிலை ஏற்ப்படாது , அறிவார்ந்த பெரியோர்கள் சொல்லும் அறிவுரையும் ஜாதகருக்கு பலன் தாராது, சில நேரங்களில் இவர்களின் செய்கைகள் என்பது விட்டில் பூச்சிகளுக்கு நிகராக அமைந்திருக்கும், தான் செய்யும் செயல்கள் யாவும் சரியென்று வீண் வாதம் செய்து, தவறான சேர்க்கையின் மூலம் தனது  வாழ்க்கை தானே பாதிப்பிற்கு ஆளாக்கி இன்னலுருவார்கள்.

லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ( உபய லக்கினம் )

ஜாதகரின் சேர்க்கையும், வெளிவட்டார பழக்க வழக்கமும், எதிர்ப்பால் இன சேர்க்கையும் ஜாதகரின் வாழ்க்கையை முழு அளவில் பாதிப்பிற்கு ஆளாக்கும் , மற்றவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு சுய சிந்தனை இன்றி செய்யும் ஒவ்வொரு  காரியங்களிலும்  மிகப்பெரிய தோல்விகளை சந்திப்பார்கள், சுய ஆளுமை இன்றி வாழ்க்கையில் தொடர்ந்து இன்னல்களை அனுபவிக்கும் நிலையை தரும், பெரும்பாலும் தனது வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையை போராட்ட களமாக மாற்றி அவதியுறும் தன்மையை தரும், மேலும் மேற்கண்ட நபர்களால் சிறிதும் நன்மையை பெற இயலாத அன்பர்கள் என்றால் அது மிகையில்லை, தனிப்பட்ட முறையில் சுய முன்னேற்றம் பெரும் யோகம் அற்றவர்கள், தனது வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை சரியாக தேர்வு செய்யும் வல்லமை அற்றவர்கள் என்பதுடன், பிரபல்ய யோகம் பெற தகுதியற்றவர்கள், பாதக ஸ்தானம் நீர் ராசிஎனில் சம்பந்தப்பட்ட ஜாதகர் எதிர்ப்பால் இன அமைப்பினரால் ஏமாற்றப்பட்டு, மன நோயாளியாக அவதியுற நேரும், குறிப்பாக அதிக அளவிலான குடி நோயாளிகள் அனைவரும் சுய ஜாதகத்தில் நீர் தத்துவ ராசி பதிக்கப்பட்ட நிலையில்  இருப்பதை கவனிக்க முடிகிறது.


குறிப்பு :

சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தான தொடர்பை பெற கூடாது, அப்படியே பெற்று இருந்தாலும் நடைபெறும் எதிவரும் திசாபுத்திகள் பாதக ஸ்தான தொடர்பை பெற்ற இலக்கின பாவக பலனை  ஏற்று நடத்தாமல் இருப்பதே ஜாதகருக்கு நன்மையை தரும், ஒருவேளை பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற இலக்கின பாவக பலனை தற்பொழுது எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கை அனலில் இட்ட மெழுகு போல் உருக வேண்டியிருக்கும், மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஒருவரின் வாழ்க்கையில் சிறப்புகளை தருவதில்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் தொடர்பு பெரும் பாவக நிலையை கருத்தில் கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவதே ஒவ்வொருவருக்கும் சுபயோகங்களை வாரி  வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக