Sunday, August 23, 2015

பூர்வ புண்ணிய ஸ்தான வலிமையும், ஜாதகரின் மதிநுட்பமும் !
வாழ்க்கையில் அறிவு சார்ந்த விஷயங்களில் புதுமையான அணுகுமுறையும், புதிய திட்டங்களை நடைமுறைபடுத்தி பல வியக்கத்தக்க வெற்றிகளை குவிக்க வைக்கும் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக வலிமையை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்ற வாக்கிற்கு இணங்க சுய ஜாதகத்தில் அதி புத்திசாலிதனமான நுண் அறிவுக்கும், 64 கலைகளில் தேர்ச்சிக்கும் வழிகோலுவது பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகமே என்றால் அது மிகையில்லை, 5ம் பாவகம் வலிமை பெற்ற ஜாதகருக்கு, நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் வலிமை பெற்ற 5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் அறிவு திறனுக்கும், புதிய அணுகுமுறைக்கும் பஞ்சமே இருக்காது, மேலும் ஜாதகரின் சமயோசித புத்திசாலிதனத்தால் ஆதாயம் என்பது பன்மடங்கு கூடும் என்பது கவனிக்க தக்கது, பலவிதமான புதிய விதிகளை உலகிற்கு அறிமுகம் செய்யும் வல்லமையை தந்துவிடும்.

ஜாதகரின் புதிய கண்டுபிடிப்புகள் பூமியில் உள்ள மனிதர்களின் வாழ்க்கையில் பங்கெடுக்கும், மனித குலத்திற்கு பெருமைசேர்க்கும், அனைவருக்கும் பயன்படும் விதத்தில் இவர்களின் கண்டுபிடிப்புகள் பயனுள்ளதாக அமையும், புதிய சிந்தனை மற்றும் புதிய மாற்றங்களுக்கு உரிமை கொண்டாடும் தனித்திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ள அன்பர்களின் ஜாதகங்களில், 5ம் பாவக வலிமையை நாம் உணர இயலும், இயற்கையாகவே இவர்களின் சிந்தனை மற்றும் கேள்விகளுக்கு சரியான பதில்களை இந்த பிரபஞ்சம் வாரி வழங்கும், எவ்வித பிரச்சனைகள் மற்றும் இன்னல்களுக்கும் சரியான தீர்வுகளை, சரியான நேரத்தில் வழங்கும் வல்லமை கொண்டவர்கள், சிறு வயதுமுதலே அறிவுத்திறனில் சிறந்து விளங்கும் யோகம் பெற்றவர்கள், பன்முக திறமை சாஸ்திர அறிவு, சாஸ்திரத்தில் தேர்ச்சி, கற்ற கல்வியை தனது முன்னேற்றத்திற்கும் தன்னை சார்ந்தவர்களின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தும் யோகம் பெற்றவர்கள், குறிப்பாக 5ம் பாவகம் வலிமை பெற்றுள்ள அன்பர்கள் பெரும் யோகத்தை  விட, இவரை சார்ந்தவர்கள் பெரும் யோகம் மிகவும் அளப்பரியதாக அமையும் என்பது கவனிக்க தக்கது.

குல தெய்வத்தின் பரிபூர்ண ஆசிகளின் மூலம் வாழ்க்கையில் சகல நலன்களையும் பெரும் யோகத்தை தரும், வருமுன் உணரும் சில சிறப்பு சக்திகள் இயற்கையாகவே அமையபெற்று இருப்பார்கள், வாக்கு பலிதமும், உள்மனதின் எண்ண ஓட்டங்களை தெளிவாக உணரும் யோகம் பெற்றவர்கள், யோகம்,தியானம்,தவம் மூன்றிலும் தேர்ச்சி பெறுவார்கள், சிந்தனை திறனும் செயல்திறனும் ஒருங்கே அமையபெற்றவர்கள், ஆராய்ச்சிகளில் வெற்றியும் புகழும் உண்டாகும், கலைத்துறையில் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, இயல், இசை, நாடக துறைகளில் அபரிவிதமான தேர்ச்சியை தரும், உலக புகழ் பெரும் யோகமும், சுய முயற்ச்சியிலேயே தன்னிறைவான வாழ்க்கை வசதிகளையும் அனுபவிக்கும் தன்மையும், மிகப்பெரிய நிறுவனங்களையும், சாம்ராஜ்ஜியத்தையும் உருவாகும் சிற்ப்பிகளாக திகழ்வார்கள்.

பொதுவாக பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவது குறிப்பிட்ட ஜாதகருக்கு சிறந்த புத்திர பாக்கியத்தை நல்குகிறது, தனக்கு பிறகு தனது எண்ணங்களையும் லட்சியங்களையும் நிறைவேற்றும் விதமான வாரிசு அமைப்பை ஜாதகர் பெறுகிறார், ஜாதகருக்கு பிறக்கும் குழந்தையும் நல்ல அறிவு திறனும், புத்திசாலித்தனமும் நிரம்பபெற்ற குழந்தையாகவே அமைவது சுய ஜாதகத்தில் உள்ள புத்திர ஸ்தான வலிமையே, " தோன்றின் புகழோடு தோன்றுக" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க ஜாதகரும், ஜாதகரின் வாரிசும் நல்லறிவும் நல்ல குணமும், பரந்த மனப்பக்குவமும் பெற்று இருப்பார்கள், இவர்களின் வாழ்க்கையில் 5ம் பாவக பலன்கள் நடைமுறையில் வரும் பொழுது கலைகளில் தேர்ச்சி, கல்வியில் வெற்றி, போட்டி பந்தையங்களில் சிறப்பான வெற்றிகள், சமுதாயத்தில் தனது அறிவுக்கும் ஆற்றலுக்கும் அங்கீகாரம், அரசு ஆதாயம் என மிகுந்த நன்மைகளை பெறுவார்கள்.

5ம் பாவக வலிமை என்பது தனது சந்ததிகளையும், தம்மை சார்ந்தவர்களையும் வாழ்க்கையில் தன்னிறைவான சுகபோகங்களை அனுபவிக்க வைக்கும் அறிவும், புத்திசாலித்தனமும் கொண்டவர்களாக இருப்பார்கள், குறிப்பாக பல கோடிரூபாய் செலவு செய்யுங்கள், ஆனால் ஒரு ரூபாய்கூட விரையம் செய்தீர்கள் என்ற வார்த்தைக்கு உதாரணமாக திகழ்வார்கள், இதை போன்றே  இவர்களுக்கு சம்பாத்தியம் என்பது மிக கடினமான விஷயமாகவே இருக்க வாய்ப்பில்லை, அதேசமயம் சத்தியம் வாய்மையை காப்பாற்றும் குணம் கொண்டவர்கள், இவர்களின் செயல்களினால் எந்த ஒரு சிறு இன்னல்களும் மற்றவர்களுக்கு ஏற்ப்படாவண்ணம் பார்த்துகொல்வதில் கைதேர்ந்தவர்கள், வியாபாரத்தில் பல நுணுக்கமான விஷயங்களை கையாளும் திறமை பெற்றவர்கள்.

முற்போக்கு சிந்தனையும், வருமுன் காக்கும் திட்டமிடுதல்களுடன் செயல்படும் அன்பர்கள், மன உறுதி, மனோதிடம் நிறைவாக பெற்றவர்கள் என்பதால் எந்த ஒரு காரியத்தையும் உறுதியாக தன்னம்பிக்கையுடன் செய்து வெற்றி பெரும் யோகம் கொண்டவர்கள், வாழ்க்கையில் ஏற்ப்படும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை தகர்த்தெறிந்து, தெளிவான சிந்தனையுடனும் உறுதியான மன நிலையுடன் வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ளுவார்கள், இவர்களின் ஆலோசனையின் பெயரில் நடைபோடும் அனைவருக்கும், பல வெற்றிகள் வாழ்க்கையில் வந்து குவியும் என்பது மறுக்க இயலாத உண்மை, மேலும் சிறந்த குடும்ப நல ஆலோசகர், ஆசிரியர், மருத்துவர், வழக்கறிஞர், ஜோதிடர் போன்றோர் ஒருவருக்கு சரியாக அமைவதும் 5ம் பாவக வலிமையே, சரியான கால நேரம் அறிந்து செயலாற்றுவதும், தனக்கு அமைந்த நேரத்தை சிறந்த நேரமாக மாற்றும் வல்லமை பெற்றவர்கள்.

எந்த ஒரு ஜாதகத்திலும் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் வலிமை பெற்று அமைவது, குறிப்பிட்ட ஜாதகத்தில் மற்ற பாவகங்களில் இருந்து வரும் இன்னல்களை களைந்து வாழ்க்கையில் வெற்றி நடை போடவைக்கும், ஜாதகருக்கு அறிவு திறனும், புத்திசாலித்தனமும் மிதமிஞ்சி நிற்கும், மேலும் சுய ஜாதகத்தில் எந்த லக்கினம் என்றாலும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசி ( சிம்ம ராசி எந்த பாவகமாக அமைந்தாலும் அந்த பாவகம் வலிமை பெறுவது ) வலிமை பெற்று அமைவது ஜாதகருக்கு ஒரு வரபிரசாதமே, தனக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இன்னல்களுக்கும் சுயமாகவே தீர்வு கண்டு வாழ்க்கையில் வெற்றி காண்பார்கள், பல்துறை அறிவும், ஒரே நேரத்தில் பலவிஷயங்களில் கவனம் செலுத்தும் வல்லமையை தரும், 5ம் பாவக வலிமை தனக்கு நிகராக வேறொருவரும் இல்லை என்ற நிலையை தரும், உலகில் தனித்து வெற்றிகரமாக இயங்கும் சக்தியை இறைஅருள் மற்றும் இயற்க்கை இவர்களுக்கு அளித்த கொடையாகவே கருதலாம். 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment