செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

தொழில் முன்னேற்றமும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையையும்!


 ஒருவரின் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்தை வைத்து தொழில் நிர்ணயம் செய்யும் முன் சம்பந்தபட்ட ஜாதகரின் ஜீவன ஸ்தானத்தின் வலிமையை கருத்தில் கொண்டு பலன்கான முற்படுவதே சரியான விஷயமாக இருக்கும், பெரும்பாலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே சம்பந்தபட்ட ஜாதகருக்கு சுய தொழில் அல்லது கூட்டு தொழில் செய்ய பரிந்துறை செய்வது, ஜாதகரை தொழில் ரீதியான வெற்றிகளையும் நன்மைகளை பெறுவதற்கு வாய்ப்பளிக்கும், மாறாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை அற்று காணப்படும் பொழுது ( உதாரணமாக ஜீவன ஸ்தானம் 2,6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெற்றோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருப்பின் ) ஜாதகரை சுய தொழில் அல்லது கூட்டு தொழில் செய்ய பரிந்துரை செய்வது நீச்சல் தெரியாதவரை கிணற்றில் கல்லைகட்டிகொண்டு தள்ளிவிடுவதற்கு சமமான பலனை வழங்கி விடும்.

மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் ஒன்று மட்டுமே தொழில் முன்னேற்றத்தை நிர்ணயம் செய்துவிடுவதில்லை, ஏனெனில் பெரும்பாலான பன்முக தொழில்கள் அனைத்தும் அங்கு வேலை செய்யும் பணியாட்களை சார்ந்தும் நடைபெறுவதால், ஜீவன ஸ்தானம் ஒன்று மட்டுமே தொழில் வெற்றிகளை வாரி வழங்கி விடுவதில்லை, ஒரு வேலை ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று, ஜாதகர் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொழிலை செய்வதாக இருந்தால் மட்டுமே, சுய ஜாதகத்தில் உள்ள தொழில் ஸ்தான வலிமை ஜாதகருக்கு நன்மைகளை வாரி வழங்கும், அதற்கும் ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை அல்லது எதிர்வரும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தவேண்டும்.

அடிப்படையில் ஒருவரின் தொழில் அமைப்பை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்தபட்ட  ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமையை முதலில் ஆய்வுக்கு எடுத்துகொள்வது நல்லது, 1) சுய ஜாதகப்படி 10ம் பாவக வலிமை பெற்று இருக்கின்றதா ? அல்லது வலிமை அற்ற நிலையில் இருக்கின்றதா ? என்பதில் தெளிவு வேண்டும், 2) சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பின் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெற்றுள்ள பாவகத்தின் தன்மையை கருத்தில் கொள்வது ( சர,ஸ்திர,உபய இயக்கமா? நெருப்பு,மண்,காற்று,நீர் தத்துவமா? ) இது ஜாதகர் செய்யும் தொழில் நிலையை தெளிவு படுத்தும். 3) ஜாதகரின் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெற்ற பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு என்ன வீடாக வருகிறது என்பதையும் கருத்தில் கொள்வது நல்லது. 4) ஜீவன ஸ்தான அதிபதியையும், ஜீவன ஸ்தானம் தொடர்பு பெற்ற பாவகத்தின் அதிபதியையும் கருத்தில் கொள்வது சம்பந்தபட்ட ஜாதகர்  ஈடுபடவேண்டிய தொழில் மற்றும் வேலையை உறுதி செய்ய 100% விகிதம் உதவி புரியும்.

 பொதுவாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் சுய தேடுதல்களுடன் நல்ல தொழிலை ஜாதகரே அமைத்துக்கொள்ள வழிவகுக்கும், லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரை செய்யும் தொழில் விருத்தியில் ஆர்வமுடன் செயலப்டவைக்கும், 2ம் பாவகம் வலிமை பெறுவது செய்யும் தொழில் வழியில் இருந்து வருமான வாய்ப்புகளை வாரி வழங்கும் அல்லது ஜாதகருக்கு வருமானம் வரும் வழிகளை தெளிவுபடுத்தும், 3ம் பாவகம் வலிமை பெறுவது தொழில் அமைப்புகளில் ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகளையும், பெரும் வருவாயினையும் தொடர் லாபங்களையும், தரகு சார்ந்த வரவுகளையும் நிர்ணயம் செய்யும், 4ம் பாவகம் வலிமை பெறுவது தொழில் ரீதியான அசையும் அசையா சொத்துகளையும், தொழில் மூலம் ஈட்டிய வருமானத்தை இடம்,பொருள்,வண்டி வாகனம், சொத்து முதலியவற்றில் முதலீடு செய்யும் விஷயங்களை குறிப்பிடும், 5ம் பாவகம் வலிமை பெறுவது தொழில் அறிவு திறனையும், சமயோசித புத்திசாலிதனத்தையும் செய்யும் தொழிலில்  பயன்படுத்தி வெற்றிகாணும் தன்மையை குறிப்பிடும், 6ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரின் கடன் நிலை, ஜாதகருக்கு அமையும் நல்ல விசுவாசமான வேலையாட்கள், வேலையாட்கள் மூலம் ஜாதகர் பெரும் யோகங்களையும், சிறு சிறு வருமான வாய்ப்புகளையும் குறிப்பிடும்.

7ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் ஏற்றுமதி இறக்குமதி தொழில் விருத்திகளையும், பொதுமக்களுடன் தனது தொழிலில் உள்ள உறவு நிலைகளையும், உலகலவியா வியாபர விருத்திகளையும், ஜாதகரின் கூட்டாளிகள் மற்றும் அவர்களுடன் உண்டான தொழில் விருத்தி மட்டும் லாபங்களை குறிக்கும், 8ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் செய்த தொழில் கிடைக்கும் குறுகிய கால வெற்றிகளையும் லாபங்களையும், இழப்புகள் மூலம் பெரும் காப்பீடுகலையும், திடீர் அதிர்ஷ்டங்களையும் தெளிவுபடுத்தும், 9ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் தான் செய்த தொழில் கிடைக்கும் நர்ப்பெயரினையும், பாரம்பரிய வளர்ச்சியையும், பல தலைமுறைகளாக செய்துவரும் தொழில் விருத்தியையும் உறுதி படுத்தும், 10ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் தான் செய்யும் தொழிலில் அடையும் வெற்றியையும், லட்சியங்களை நோக்கி எடுத்துவைக்கும் பாதையையும் தெளிவு படுத்தும், தொழிலில் ஜாதகரின் கௌரவம், அந்தஸ்து, புகழ் மற்றும் சுய மரியாதையும் பன்மடங்கு பெருக வைக்கும், ஜாதகர் செய்யும் தொழில் என்ன ? என்பதையும் தெள்ள தெளிவாக அறிவுறுத்தும், 11ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் செய்யும் தொழில் வழியில் இருந்து அனுபவிக்கும் லாப விஷயங்களையும், அதிர்ஷ்டம் மற்றும் திடீர் மற்றும் நிரந்த முன்னேற்றங்களையும், தொழில் ரீதியாக ஜாதகர் கொண்டு இருக்கும் தன்னம்பிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனை, திட்டமிடுதல்கள் பற்றியும் அறிவுறுத்தும். 12ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரின் அதிகபடியான முதலீடுகளையும், முதலீடுகளால் ஜாதகர் பெரும் தொழில் விருத்தி மற்றும் பெருத்த லாபங்களை பற்றியும் குறிப்பிடும், மேலும் ஜாதகருக்கு செய்யும் தொழில் உள்ள மன நிறைவையும், மன நிறைவான வருமானத்தையும் தெளிவுபடுத்தும்.


சுய ஜாதக ரீதியாக ஒருவர் தொழில் செய்ய முற்படும் முன் ஜீவன ஸ்தான வலிமையை கொண்டு தொழில் நிர்ணயம் செய்த பின்பு, நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசை,புத்திகள் ஏற்று நடத்தும் பாவக பலன்களை கருத்தில் கொண்டு தொழில் துவங்க சொல்வதும், செய்து கொண்டு இருக்கும் தொழிலை விஸ்தரிக்க சொல்வதும், தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும், தங்கு தடையில்லாத தொழில் முன்னேற்றத்தை நிரந்தரமாக பெறவும், கை நிறைவான வருமானத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும்.

எந்த ஒரு ஜாதகத்திலும் ஜீவன ஸ்தானம் மட்டும் வலிமை பெறுவது தொழில் வெற்றிகளை உறுதி செய்யாது, லாப ஸ்தானமும் வலிமை பெறுவது சிறப்பான அதிர்ஷ்டங்களை பெற வாய்ப்பளிக்கும், சுய ஜாதகங்களில் 12 பாவகங்களும் வலிமை பெரும் பொழுதோ, அல்லது வலிமை பெற்ற பாவகங்களின் பலனை மட்டும் திசை,புத்திகள் ஏற்று நடத்தினாலோ ஜாதகர் ஜீவன ரீதியான நன்மைகளை தொடர்ந்து பெற இயலும், மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியன்களை நிறுவி வெற்றிகரமாக நடத்தும் வாய்ப்பை வழங்கும்.

ஒருவரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று, லாப ஸ்தானம் வலிமை அற்ற நிலையில் இருப்பின் ( 2,6,8,12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருப்பின் ) ஜாதகரின் உழைப்பு மற்றும் திறமைகள் அனைத்தும் வீணாகிவிட வாய்ப்புண்டு, இந்த அமைப்பை பெற்றவர்கள் மட்டும் சற்று கவனமுடன் தொழில் விஷயங்களை கையாள்வது சம்பந்தபட்ட ஜாதகருக்கு நன்மையை தரும்.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானம் எவ்வளவு வலிமை பெற்று இருந்தாலும், தற்பொழுது அல்லது எதிர்வரும் திசை மேற்கண்ட ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றியும் லாபங்களும் உண்டாகும், மாறாக நடைபெறும் திசை அல்லது எதிர்வரும் திசை ஜீவன மற்றும் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருந்தாலும் எவ்வித பயனும் இல்லை என்ற நிலையை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக