உன் ஜாதகம்...
1) உன்னை நீ கெடுத்துக் கொண்டால்
ராகு திசை...
2)பிறரை நீ கெடுக்க நினைத்தால்
கேது திசை...
3)பிறரை நீ பழிவாங்க நினைத்தால்
சனி திசை...
4)உன் செல்வாக்கு உயர்ந்திட்டால்
செவ்வாய் திசை...
5)உனக்கு நல்புத்தி வந்துவிட்டால்
புதன் திசை...
6) நிலையான முயற்சி செய்தால்
சூரிய திசை...
7) நிலையற்ற செயல்களென்றால் அங்கே
சந்திர திசை...
8)உனக்காக நீ புண்ணியம் செய்தால்
சுக்ர திசை...
9)உலகிலுள்ள அனைவருக்காகவும் நீ புண்ணியம் செய்தால் உனக்கு குரு திசை...
நேர்மையாக வாழ்பவருக்கு அனைத்தும் சாதகம்,
பாவம் செய்தவருக்கே ஜாதகம்.
மேற்கண்ட தகவல் வாட்ஸ் அப்பில் வந்ததது, இதை பகிர்ந்த அன்பருக்கு உண்மையில் ஜோதிடம் என்றால் என்னவென்றே புரியவில்லை என்பதை தவிர வேறு என்னவென்று சொல்வது, இறுதியில் " நேர்மையாக வாழ்பவருக்கு அனைத்தும் சாதகம் " " பாவம் செய்தவருக்கே ஜாதகம் " என்ற தத்துவ வாசகம் வேறு, இதற்க்கு விளக்கம் தார " ஜோதிடதீபம் " கடமைப்பட்டுள்ளது.
" அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது " என்பது இறைநிலையின் வலிமையை உணர நமக்கு பெரியோர் சொன்ன தத்துவ வார்த்தை, அதைப்போன்றே சுய ஜாதக வலிமை இன்றி சிறு அசைவையும் ஒருவர் நிகழ்த்த இயலாது என்பதனை " ஜோதிட சாஸ்திரம்" பற்றி தெளிவாக உணர்ந்த அறிவார்ந்த சான்றோர் பெருமக்கள் ஏற்றுக்கொள்வார்கள், ஏனெனில் ஒருவர் நேர்மையாளனாக திகழ்வதும், அநீதி இழைப்பவனாக இருப்பதும் சுய ஜாதகத்தின் வலிமை நிலையே என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறாமல் ஒருவன் நேர்மையாளனாக வாழ இயலாது, சுய ஜாதக வலிமை பெறாமல் ஓர் சிறு துரும்பை கூட அசைக்க இயலாது என்ற உண்மையை தெளிவாக தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
தத்துவங்களும் வாய் வார்த்தைகளும் ஒருவருக்கு சிறப்பான வாழ்க்கையை தந்துவிடாது, சுய ஜாதக வலிமையே ஒருவரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தரும், மேலும் அன்பர் பதிவு செய்த கருத்துக்கள் அணைத்தும் உண்மைக்கு புறம்பானது, ராகு, கேது, சனி, சந்திரன் திசைகள் ஒருவருக்கு இன்னல்களை தரும் என்ற விதத்திலும், செவ்வாய்,புதன்,சூரியன், குரு, சுக்கிரன் திசைகள் ஒருவருக்கு நன்மைகளை தரும் என்ற விதத்திலும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது, இது அடிப்படையிலே உண்மை அற்ற கருத்து, ஜோதிட சாஸ்த்திரம் பற்றிய ஓர் தெளிவில்லாமல் விரக்தியின் வெளிப்பாடாக, குத்து மதிப்பாக வாயில் வந்த வார்த்தையாக " ஜோதிடதீபம் " கருதுகிறது, இவர்கள் முதலில் சுய ஜாதகம் என்றால் என்ன? அதன் வலிமை நிலை என்றால் என்ன ? என்பதில் தெளிவு பெறுவது மிக்க நலம் தரும்.
உன்னை நீ கெடுத்துக் கொண்டால்
ராகு திசை...
அப்படியெனில் ராகு திசை நடைபெறும் அன்பர்கள் அனைவரும் அவரவர்களே தம்மை கெடுத்து கொள்வார்கள் என்ற விதத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற லக்கினத்தின் பலனை ராகு திசை ஏற்று நடத்தினால், ஜாதகர் தம்மை வாழ்க்கையில் மிக சிறந்தவனாக நிலை நிறுத்திக்கொள்வார், ஒழுக்க சீலராக திகழ்வார் என்பது தெரியுமா ?
பிறரை நீ கெடுக்க நினைத்தால்
கேது திசை...
வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை கேது திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், ஜாதகர் பிறருக்கு பலவிதங்களில் உபகார வாழ்க்கையை வழங்குவார் என்பது தெரியுமா ?
பிறரை நீ பழிவாங்க நினைத்தால்
சனி திசை...
வலிமை பெற்ற சத்ரு ஸ்தான பலனை சனி திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், எதிரியையும் நேசிக்கும் வல்லமை கொண்டவராகவும், மக்கள் செல்வாக்கை பெற்று உயர் பதவியை பெறுவார் என்பதும் தெரியுமா?
உன் செல்வாக்கு உயர்ந்திட்டால்
செவ்வாய் திசை...
வலிமை அற்ற ஆயுள் ஸ்தான பலனை செவ்வாய் திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், அனைத்தையும் இழந்து நிர்கதியாக நிற்பர் என்பது தெரியுமா ?
உனக்கு நல்புத்தி வந்துவிட்டால்
புதன் திசை...
வலிமை அற்ற பூர்வ புண்ணிய ஸ்தான பலனை புதன் திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், ஜாதகர் சுய அறிவு அற்ற ஓர் அறிவிளியாக இருப்பர் என்பது தெரியுமா?
நிலையான முயற்சி செய்தால்
சூரிய திசை...
வலிமை அற்ற சகோதர ஸ்தான பலனை சூரியன் திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், ஜாதகர் எடுக்கும் முயற்சிகள் யாவும் படுதோல்வி அடையும் என்பது தெரியுமா ?
நிலையற்ற செயல்களென்றால் அங்கே
சந்திர திசை...
வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை சந்திரன் திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், ஜாதகர் தன்னம்பிக்கை மிக்கவராகவும், முற்போக்கு சிந்தனையும் உறுதியான மனபக்குவத்துடன் அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் வல்லமை பெற்றவராக திகழ்வார் என்பது தெரியுமா?
உனக்காக நீ புண்ணியம் செய்தால்
சுக்ர திசை...
வலிமை அற்ற பாதக ஸ்தான பலனை சுக்கிரன் திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், ஜாதகர் தானும் புண்ணியம் செய்யாமல், மற்றவர்கள் செய்யும் புண்ணிய காரியத்தையும் கெடுப்பார் என்பது தெரியுமா ?
உலகிலுள்ள அனைவருக்காகவும் நீ புண்ணியம் செய்தால் உனக்கு குரு திசை...
பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற 1,5,9ம் ஸ்தான பலனை குரு திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், ஜாதகர் பாவ காரியங்களுக்கான மொத்த உருவமாக திகழ்வார் என்பது தெரியுமா ?
சுய ஜாதக நிலையை பற்றியும், ஜோதிட சாஸ்திரம் பற்றியும் சிறிதும் அறியாமல், சுப கிரகங்கள் திசை நன்மையை செய்யும் என்றும், அசுப கிரகங்களின் திசை தீமையை செய்யும் என்றும் சொல்வது முற்றிலும் ஜோதிட சாஸ்திர உண்மைக்கு புறம்பானது, சுய ஜாதக வலிமை உணர்ந்தும், ஜோதிட சாஸ்திரம் பற்றிய தெளிவுடன் சுய ஜாதக பலாபலன் காண்பதே அனைவருக்கும் உகந்தது.
ஒருவர் புண்ணியம் செய்வதும், பாவம் செய்வதும் அவரவர் சுய ஜாதக வலிமையே அன்றி வேறு இல்லை, இதற்க்கு அடிப்படை காரணமாக திகழ்வதே சுய ஜாதக வலிமைதான் என்பதை உணர்வது அவசியமாகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக