வியாழன், 22 பிப்ரவரி, 2018

ஜாதக பொருத்தம் எப்படி உள்ளது? எனது மகளுக்கு ஏற்ற வரனா ? இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையுமா ?


கேள்வி :
கீழ்கண்ட வரனின் ஜாதகம் எனது மகளுக்கு பொருந்துமா ? திருமண வாழ்க்கை சிறப்பாக அமையுமா ? ஜாதக பொருத்தம் சார்ந்த விஷயங்களை தெளிவு படுத்தவும்,

பதில் :

 திருமண பொருத்தம் காண்பதில் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் :

1) வரன் வது இருவரது சுய ஜாதகத்திலும் 2,5,7,8,12ம் வீடுகளின் வலிமை பற்றி தெளிவு பெறுவது இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும்.

2) வரன் வது இருவரது ஜாதகத்திலும் தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள், எதிர்வரும் திசாபுத்திகள் ( ஏக திசை என்ற போதிலும் ) சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா ? என்பதில் தெளிவு பெறுவது இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும்.

3) வரன் வது இருவரது ஜாதகத்திலும் தற்போழுது  கோட்சார கிரகங்கள் தரும் பலாபலன் பற்றி தெளிவு பெறுவது இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும்.

4) மேற்கண்ட விஷயங்களை தவிர ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகுகேது ஜாதகம், களத்திர தோஷம் போன்ற மூட நம்பிக்கைகளை, புறம் தள்ளிவிட்டு, வரன் வது இருவரது சுய ஜாதகத்திலும் பாவக வலிமையின் அடிப்படையில் திருமணம் செய்வதே தாம்பத்திய வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

இனி அன்பரின் கேள்விக்குண்டான பதிலை பார்ப்போம்.

வரனின் பிறந்த தேதி : 26/09/1990
                                நேரம் : 08:45 AM 
                                இடம் : கோவை 


லக்கினம் : துலாம் 
ராசி : விருச்சிகம் 
நட்ஷத்திரம் : கேட்டை 4ம் பாதம்.

மேற்கண்ட வரனின் ஜாதகத்தில் திருமண வாழ்க்கை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, குறிப்பாக 2,8ம் வீடுகள்  திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் இன்னல்களை தரும் அமைப்பாகும், 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் குடும்பம், வருமானம், வாக்கு வழியில் இருந்து கடுமையான இன்னல்களை சந்திப்பார், 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பூர்ண ஆயுள் என்ற போதிலும், வாழ்க்கை துணைக்கு பொருளாதார ரீதியான பேரிழப்புகளை தருவார்.

5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் 5ம் பாவக வழியில் கடுமையான புத்திர தோஷத்தையும், சமயோசித அறிவு  திறனில் குறைகளையும், கற்ற கல்வி வழியிலான நன்மை அற்ற தன்மையையும் அனுபவிப்பார், குறிப்பாக ஜாதகரின் சிந்தனை திறனும், பூர்வீகமும் கடுமையாக பாதிக்கப்படும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணைக்கு கடுமையான தோஷத்தை தரும் அமைப்பாகும், ஜாதகரின் மணந்துகொள்ளும் ஜாதகியின் சுய ஜாதகம் வலிமை இன்றி இருப்பின், இல்லற வாழ்க்கை வெகு விரைவில் முடிவுக்கு வந்துவிடும், வாழ்க்கை துணையுடனான நெருக்கத்தை வெகுவாக குறைக்கும், மேலும் சுய ஜாதகத்தில் ஜாதகரின் லக்கினமும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியில் அமைந்து பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது இல்லற வாழ்க்கையில் ஜாதகர் கடுமையான பாதிப்பை சந்திக்கும் நிலையை தரும், ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபமும் வலிமையற்று உள்ளது, 7ம் ராசியான துலாமும் வலிமையற்று உள்ளது  என்பதுடன் சுய ஜாதகத்திலும் 2,7ம் வீடுகள் வலிமையற்று காணப்படுகிறது என்பதால் ஜாதகரின் இல்லற வாழ்க்கை மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகும்.

அயன சயன ஸ்தானத்தை குறிக்கும் 12ம் வீடு பூர்வ புண்ணியமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு அனைத்திலும் நஷ்டத்தை தரும், மேலும் புத்திரம் யோகம் சார்ந்த கடுமையான பாதிப்புகளை தரும், தாம்பத்திய வாழ்க்கையில் முரண்பட்ட பாதிப்புகளை ஜாதகர் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவர் என்பதால், தங்களது அருமை மகளுக்கு ஏற்ற வரன் இந்த  ஜாதகர் இல்லை என்பதை மட்டும் மிக தெளிவாக கூறி, வேறு நல்ல வரனாக தேடி திருமணம் நடத்தி வைக்க " ஜோதிடதீபம் " ஆலோசனை வழங்குகிறது.

குறிப்பு :

தங்களது மகளின் சுய ஜாதகத்தில் 2,12ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு  இருப்பதால், தாங்கள் பார்க்கும் வரனின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் மிக மிக வலிமையுடன் இருப்பதுடன், நடைமுறையில் உள்ள திசா புத்திகள், எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெற்ற பிறகே திருமணம் செய்து வைப்பது சகல நலன்களையும் தரும் என்பதை கருத்தில் கொள்க.
 
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக