Monday, July 18, 2016

வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் முன் அவர்களது ஜாதகத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள் !


திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வது, தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே அன்றி வேறு எதுவும் இல்லை அன்பர்களே, இன்றைய சூழ்நிலையில் திருமண பந்தம் பற்றிய தெளிவும் புரிதலும் வெகுவாக குறைந்துள்ளது என்பது, பொருத்தம் காண வரும் அன்பர்களின் கேள்விகளில் இருந்தே தெளிவாக தெரிய வருகிறது, மேலும் ஒருவருக்கு திருமணம் என்பது எவ்வித நன்மைகளையும் யோகங்களையும் வாழங்குகிறது என்ற விழிப்புணர்வும் வெகுவாக குறைந்துள்ளது, இல்லற வாழ்க்கையில் இணையும் பொழுது கட்டுப்பாடின்றி இயங்கி கொண்டு இருந்த இளைஞன், பொறுப்பு மிக்க குடும்ப தலைவனாக பிரகாசிக்கிறார், தம்மை நம்பி வந்த  தனது வாழ்க்கை துணையையும், தமக்கு அமையும் வாரிசுகளையும், தம்மை ஈன்ற பெற்றோர்களையும் காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளதை, சொந்த பந்தங்கள் மற்றும் உறவுகள் ஒன்று கலந்த தனது திருமண விழாவில் அனைவர் முன்னிலையிலும் உணரும் அருமையான வாய்ப்பை பெறுகின்றார், ஒரு பெண்ணை வாழ்க்கையை துணையாக ஏற்றுக்கொண்ட பிறகு ஜாதகனின் இயக்கமும் செயல்பாடுகளும் வெகுவாக, குறுகிய காலத்தில் பல மாற்றங்களை சந்திக்கிறது, சமுதாயத்தில் இதுவரை சாதாரணமாக இயங்கிக்கொண்டு இருந்த இளைஞன், பொறுப்பு மிக்க மாமனிதனாக செயல்படும் யோகத்தை நல்குவதே திருமணம் எனும் சுப நிகழ்வே, இவ்வளவு பெருமை வாய்ந்த திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்ய நட்ச்சத்திர பொருத்தங்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும் என்ற கூற்று நிச்சயம் பொருத்தமற்றதாகவே  இருக்கும் என்று "ஜோதிடதீபம்" கருதுகிறது.

திருமண வாழ்க்கையில் ஓர் ஆண் மகனுக்கு வாழ்க்கை துணையாக அமையும் வதுவின் ஜாதக வலிமையை பற்றியே, நமது சாஸ்திரங்களும், புராணங்களும் சிலாகித்து பேசிக்கொண்டு இருக்கின்றது என்றால் அதுமிகையில்லை, காரணம் இல்லற வாழ்க்கையின் இனிமையையும், தனது கணவனின் கவுரவம், அந்தஸ்து மற்றும் முன்னேற்றகரமான யோக வாழ்க்கைக்கும் ஆதாரமாக விளங்குவது பெண்களின் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் மற்றும் ஜாதக வலிமையே, அடிப்படையில் ஜீவனத்திற்க்கே சிரமப்பட்டு கொண்டு இருக்கும் சில அன்பர்களின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை வாரி வழங்கும் வல்லமை அவருக்கு அமையும் மனைவியின் ஜாதக வலிமைக்கு நிச்சயம் உண்டு, இதை போன்றே பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேடியதின் விளைவாக மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை கூட இழந்து, ஒரு வேலை உணவிற்க்காக சிரமகதியில் ஜீவித்திக்கொண்டு இருக்கும் சில அன்பர்களை நாம் கண்டு இருக்கின்றோம், எனவே திருமண பந்தம் என்பது ஒரு குறுகிய வட்டத்தில் நின்றுவிடும் விஷயம் அல்ல என்பதில் தெளிவு பெற்று திருமண பொருத்தம்  காண்பதும், அதன் அடிப்படையில் இல்லற வாழ்க்கையில் இணைவதும் தம்பதியர் வாழ்க்கையில் 16 வகை செல்வங்களையும் பரிபூர்ணமாக வாரி வழங்கும்.

இறை அருளின் கருணையினால் இயற்கையாகவே பொருத்தமான தேர்வை செய்து  இல்லறவாழ்க்கையில் இணைந்து வெற்றிகண்ட ஒரு தம்பதியரின் ஜாதகத்தை இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!


ஜாதகர் 
லக்கினம் : தனுசு 
ராசி : கும்பம் 
நட்ஷத்திரம் : சதயம் 4ம் பாதம் 

ஜாதகி 
லக்கினம் : மேஷம் 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : உத்திரம் 4ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகத்திற்கு உரிய தம்பதியர் இருவரின் ஜாதக வலிமையும் மிகவும் சிறப்பாக அமைந்திருப்பது இறையருள் கொடுத்த நன்கொடையாகும், குறிப்பாக ஜாதகியின் சுய ஜாதக வலிமை போற்றுதலுக்கு உரியது, தம்பதியர் இருவரும் விருப்ப மணம் செய்துகொண்டவர்கள், திருமணத்திற்கு முன்பு வரை ஜாதகர் ஜீவன ரீதியாக அதிக சிரமங்களை அனுபவித்துக்கொண்டு இருந்தவர், திருமணத்திற்கு பிறகு ஜாதகரின் தொழில் விருத்தி என்பது பன்மடங்கு உயர்ந்தது, குறுகிய காலத்தில் பொருளாதார தன்னிறைவை தங்கு தடையின்றி அனுபவிக்கும் யோகத்தை தந்தது, தன்னம்பிக்கை மற்றும் சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை தம்பதியர் இருவரும் பெற்றனர், இல்லற வாழ்க்கையில் குறைவில்லா நிலை, நல்ல பெண் குழந்தைகள், அவர்கள்  வழியில் இருந்து யோகம், புதிய சொத்து சுக சேர்க்கை, வியாபாரத்தில் விருத்தி உலகம் முழுவதும் பிரபல்யம், செல்லும் இடங்களில் எல்லாம்  நல்ல வரவேற்பு என ஒரு முழுமை பெற்ற யோக வாழ்க்கையை தம்பதியர் பெறுவதற்கு அவர்களது சுய ஜாதக வலிமையே  காரணமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை.

தம்பதியரின் யோக வாழ்க்கையை நிர்ணயம் செய்த சுய ஜாதக வலிமையை பற்றி இனி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

இல்லற வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்யும் பாவகங்களின் வலிமையை பற்றி பார்ப்போம், சுய ஜாதகத்தில் 1,2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெறுவது தம்பதியரின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும்  முன்னேற்றம் தரும், மேலும் இந்த அமைப்பு வாழ்க்கை துணையாக வரும் வதுவின் ஜாதகத்தில் சிறப்பாக அமைந்து இருப்பது, தமது கணவனின் வாழ்க்கையில் மிகப்பெரிய யோகங்களையும், முன்னேற்றங்களையும் பரிபூரணமாக வாரி வழங்கும், கணவனின் ஜாதகம் வலிமை அற்று இருந்த போதிலும் மனைவியின் ஜாதக வழியில் இருந்து ஜாதகர் தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தையும், வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்க இயலும், மேலும் நேற்றுவரை மிக சாதாரணமாக இருந்த மனிதனை கூட ஒரு பெண்ணின் ஜாதக வலிமை, அவரை வெற்றி பெற்ற மனிதனாக சமூகத்திற்கு வழங்கும்  வல்லமை பெற்றது, அதே போல் பெண்ணின் ஜாதகம் வலிமை இன்றி இருப்பின் மிகப்பெரிய தனவந்தனையும், கடைநிலைக்கு தள்ளிவிடும் வாய்ப்புண்டு.

மேற்கண்ட தம்பதியரின் ஜாதகத்தில் :

லக்கினம் இருவரது ஜாதகத்திலும் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தமது முயற்ச்சியில் சற்றும் தளர்வடையாமல் போராடும் குணத்தையும், அதன் வழிகளில் இருந்து வெற்றி வாகையை சூடும் யோகத்தையும் நல்குகிறது, மேலும் தமது லட்ச்சியங்களை முழு முயற்சசியுடன் வென்று எடுக்கும் சூட்ஷம அறிவு திறனையும், அதற்கு உண்டான உடல் மற்றும் மன வலிமையையும் வாரி வழங்குகிறது, தம்பதியரின் ஒருமித்த கருத்து இவர்களின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை வாரி வழங்குகிறது, இதற்கு ஆதாரமாக இருவரது ஜாதகத்திலும் லக்கினம் என்பது முறையே உபய நெருப்பாகவும், சர நெருப்பாகவும் ஒரே தத்துவத்தில் பொருத்தம் பெற்று வலிமை சேர்க்கிறது.

குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் குடும்ப வாழ்க்கைக்கு சரியான  பொருத்தமான தேர்வை குல தேவதையின் அருளாலும், இறை நிலையின் கருணையினாலும் சரியான நேரத்தில் கண்டுணர்ந்து தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்கியது, ஜாதகியின் 2ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம்  பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பித்ருக்களின் நல்லாசியினாலும், பெரியோர் செய்த புண்ணியத்தினாலும் தமக்கு பொருத்தமான கணவனை தேர்வு செய்யும், யோகத்தை ஜாதகிக்கு வழங்கியது, இருவரின் ஜாதகத்திலும் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை பெறுவது வருமானத்திற்கும், பொருளாதார  முன்னேற்றத்திற்கும் குறைவில்லா யோகத்தை தந்தது, தம்பதியருக்குள் வாக்குவாதம் இல்லாத இனிமையான பேச்சு இல்லற வாழ்க்கையில் இனிமையை வாரி வழங்கியது, தம்பதியருக்குள் உண்டான புரிதலும் ஆறுதல் வார்த்தைகளும், தேறுதல்களும் இல்லறவாழ்க்கையில் நல்ல  நம்பிக்கையும், மன நிம்மதி மற்றும் மன தைரியத்தையும் வழங்கியது, எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமையை தம்பதியருக்கு தந்தது, இதற்கு இருவரின் ஜாதகத்திலும் 2ம் பாவகம் வலிமையாக இருப்பது காரணமாக அமைந்தது.

புத்திர ஸ்தானம் எனும் 5ம் பாவகம் இருவரின் ஜாதகத்திலும் முறையே பூர்வ  புண்ணியம் எனும் 5ம் பாவகத்துடனும், பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்றது, நல்ல குழந்தை பாக்கியத்தை வாரி வழங்கியது, இருப்பினும் ஆண் வாரிசு இல்லை இதற்கு என்ன காரணம் என்று இறுதியில் விளக்கம் தரப்படும், சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் வாழ்க்கையில் நல்லோர் ஆதரவையும், இறை அருளின் கருணையையும் பரிபூரணமாக பெரும் யோகத்தை தந்தது, மேலும் தம்பதியரின் அறிவு திறனும் சமயோசித புத்திசாலித்தனமும் சிறப்பாக பிரகாசிக்கும் வல்லமையை தந்தது, வருமுன் காக்கும் சிறப்பு சக்தியும், வரும் இன்னல்களில் இருந்து மீண்டுவரும் யோகத்தையும் வாரி வழங்கியது, குறிப்பாக ஜாதகர் தனது அறிவு திறன் மூலம் பல வெற்றிகளை பெற்றார், அதற்கு ஜாதகியின் முன்யோசனைகள் ஆதாரமாக விளங்கியது.

களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் இருவரது ஜாதகத்திலும் முறையே ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்துடனும், வீரிய ஸ்தானம் எனும் 3ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு திருமணத்திற்கு பிறகு நல்ல  தொழில் வாய்ப்புகளையும், தொழில் விருத்தியையும் நல்கியது, ஜாதகருக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்த்து, கவுரவம், செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வெற்றிகளை வாரி வழங்கியது, ஜாதகரின் தொழில் வெற்றிகளை நிர்ணயம் செய்ய, அவரது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையே  காரணமாக அமைந்தது, மேலும் ஜாதகிக்கு தான் கொண்ட லட்ச்சியங்களையும் கனவுகளையும் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் யோகத்தை தந்தது, திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை தம்பதியருக்கு மிகப்பெரிய யோகங்களை வாரி வழங்கியது, பிரிவில்லா தாம்பத்திய வாழ்க்கையை இருவரும் சுவீகரிக்கும் யோகம் உண்டாக இருவரின் ஜாதகத்திலும் களத்திர ஸ்தான வலிமை ஆதாரமாக விளங்கியது.

ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் இருவரது ஜாதகத்திலும் முறையே, ஆயுள்  பாவகமான 8ம் பாவகத்துடனும், பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெறுவது, நீண்ட ஆயுளையும், மனைவி வழியில் இருந்து யோகங்களையும் ஜாதகருக்கு வழங்கியது, இருவரும் பூர்ண ஆயுள் பலத்துடன் ஜீவிக்கும் யோகத்தை வழங்கியது, தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் பெரும் வருமான வாய்ப்புகளையும் ஆயுள் பாவகமே நிர்ணயம் செய்தது.

அயன சயன ஸ்தானமான 12ம் பாவகம் இருவரது ஜாதகத்திலும் முறையே, பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடனும், களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெறுவது, தம்பதியருக்குள் பிரியமான யோக வாழ்க்கையை வாரி வழங்கியது, நல்ல மன நிம்மதியையும், நிறைவான மன நிலையையும், கவலைகள் இல்லா ஏகாந்த வாழ்க்கையையும் வாரி வழங்கியது, அயன சயன ஸ்தானம் வலிமை பெறுவது தம்பதியருக்குள் உள்ளன மன நிறைவையும், மன ஓற்றுமையையும் வாரி வழங்கும்.

மேற்கண்ட ஜாதகங்களில் பெரும்பாலான பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்க தக்க அமசமாகும், மேலும்   நடைபெற்ற திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்தியதும், நடத்திக்கொண்டு இருப்பதும் யோக வாழ்க்கைக்கு  குறைவில்லா நிலையையே தந்துகொண்டு இருக்கின்றது, மேலும் சரியான திசை வாயிற்படி கொண்ட வீட்டில் ஜாதகர் குடியிருப்பதும் ஒரு நல்ல விஷயமாகும்.

குறிப்பு :

தம்பதியர் இருவருக்கும் சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் எனும் 5ம் பாவகம் வலிமை பெற்றும் "ஆண்" வாரிசு இல்லை என்ற நிலைமைக்கு தம்பதியர் தமது பூர்வீகத்தை விட்டு வெளிநாட்டில் குடியிருப்பதே காரணமாக அமைந்துவிட்டது, சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெறுவது நல்ல ஆண் வாரிசை நல்கும், பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று வசித்தால், இந்த பாக்கியம் பலன் தாராமல் போக வாய்ப்புண்டு.

 எனவே திருமண வாழ்க்கையில் வெற்றியை நிர்ணயம் செய்வது சுய ஜாதக பாவக வலிமையே அன்றி வேறு எதுவும் இல்லை அன்பர்களே! நட்ச்சத்திர பொருத்தம் ஓர் சிறிய அளவில் மட்டுமே ( 5%விகிதம் ) பலன் தரும், லக்கினம் முதல் 12 பாவக வலிமையே இல்லற வாழ்க்கையில் இனிமை சேர்க்கும் என்பதில் அனைவருக்கும் விழிப்புணர்வு தேவை, இனிவரும் காலங்களில் சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு முக்கியதுவம் தந்து திருமண பொருத்தம் கண்டால் நிச்சயம் தாம்பத்திய வாழ்க்கை 100% விகித வெற்றியை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை அன்பர்களே, மேலும் திருமணம் என்பது தம்பதியரின் நல்வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் என்பதால், சரியான பொறுத்த நிர்ணயம் மிக மிக அவசியமான ஒன்று என்பதை கவனத்தில் கொள்க.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

No comments:

Post a Comment