சுய ஜாதகத்தில் லக்கினம் முதற்கொண்டு 2,4,7,8,12ல் பாவகங்களின் செவ்வாய் அமர்ந்து இருப்பது கடுமையான செவ்வாய் தோஷம் என்றும் இந்த அமைப்பை பெற்ற ஆண் அல்லது பெண் ஜாதகத்திற்கு இதை போன்றே செவ்வாய் தோஷம் உள்ள வது அல்லது வரனை தேர்வு செய்து மணவாழ்க்கையில் இணைப்பதே பொருத்தமானது என்று காலம் காலமாக கூறப்பட்டுவரும் ஜோதிட விதி, இதில் சிலர் சந்திரன் நின்ற ராசிக்கு செவ்வாய் தோஷம் காண்பதும் உண்டு, எப்படி இருப்பினும் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்திற்கு செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகமே பொருந்தும் என்பது அடிப்படை வாதமாக உள்ளது, கீழ்கண்ட ஜாதகிக்கு திருமணம் தாமதம் ஆக மிக முக்கிய காரணமாக பெரும்பாலான ஜோதிடர்கள் அனைவரும் " செவ்வாய் தோஷம் " என்பதையே அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கின்றனர், செவ்வாய் ஜாதகிக்கு லக்கினத்தில் இருந்து 7ல் ஆட்சி பெற்று இருப்பதால் செவ்வாய் ஜாதகிக்கு கடுமையான தோஷத்தை நல்கி திருமண வாழ்க்கைக்கு தடை போடுகிறது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.
எனவே ஜாதகிக்கு திருமணம் தாமதம் ஆக செவ்வாய் தோஷம்தான் காரணமா? அல்லது ஜாதக ரீதியாக வேறு ஏதாவது காரணமா ? என்பதைப்பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !
லக்கினம் : துலாம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சுவாதி 2ம் பாதம்.
ஜாதகிக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் துலாம் ராசியில் ( 195:51:51 பாகையில் ) ஆரம்பித்து விருச்சிக ராசியில் ( 225:07:30 பாகையில் ) முடிவடைகிறது , அதாவது ஜாதகியின் லக்கினம் எனும் முதல் பாவகம் துலாம் ராசியில் 15 பாகைகளும், விருச்சிக ராசியில் 15 பாகைகளும் கொண்டுள்ளது, இதை போன்றே ஜாதகியின் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மேஷ ராசியில் ( 15:51:51 பாகையில் ) ஆரம்பித்து ரிஷப ராசியில் ( 45:07:30 பாகையில் ) முடிவடைகிறது, அதாவது ஜாதகியின் களத்திர ஸ்தானம் மேஷத்தில் 15பாகைகளும், ரிஷபத்தில் 15 பாகைகளும் கொண்டுள்ளது.
ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் என்பது மேஷ ராசியில் 15:51:51 பாகையில் ஆரம்பம் ஆகும் பொழுது, செவ்வாய் பகவான் மேஷத்தில் 03:51:49 பாகையில் ஆட்சி பெற்று அமர்ந்து இருப்பது மேஷத்தில் உள்ள 6ம் பாவகத்திற்கு உற்ப்பட்ட இடமாகும், எனவே அடிப்படையிலேயே செவ்வாய் ஜாதகிக்கு செவ்வாய் தோஷத்தை தரும் அமைப்பான 7ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கவில்லை, மேஷத்தில் உள்ள 6ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கிறார் என்பதே உண்மை நிலையாகும், எனவே மேற்கண்ட ஜாதகிக்கு செவ்வாய் தோஷம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை நன்கு ஜோதிட கணிதம் உணர்ந்தவர்கள் அறிந்துகொள்ள இயலும், மேலும் செவ்வாய் தோஷம் என்பதே கட்டுக்கதை என்பதை இந்த இடத்தில் பதிவு செய்ய " ஜோதிடதீபம் " கடமைபட்டுள்ளது, ஜாதகிக்கு திருமணம் தாமதம் ஆக உண்மையான காரணம் என்ன ? என்பதனை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !
ஒருவரது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு, புத்திர ஸ்தானம் எனும் 5ம் வீடு, களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு, ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் வீடு, அயன சயன ஸ்தானம் எனும் 12ம் வீடுகள் வலிமை பெற்று, பருவ வயதில் நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் யாதொரு தடையும் ஏற்படாமல் சரியான வயதில் திருமணம் அமையும், மாறாக மேற்கண்ட வீடுகள் ஏதாவது ஒன்று இரண்டோ அல்லது அனைத்துமோ பாதிக்கப்பட்டு இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திருமண தடை என்பது தவிர்க்க இயலாத விஷயமாக மாறிவிடும், மேற்கண்ட வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியை வைத்துவிடும்.
மேற்கண்ட ஜாதகத்தில் திருமண வாழ்க்கைக்கு தடைகளை ஏற்படுத்தும் காரணிகள் :
1) ஜாதகிக்கு 1,3,5,11ம் வீடுகள் அனைத்தும் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகி தெளிவான முடிவு எடுக்கும் வல்லமை அற்றவர் என்பதனை காட்டுகிறது, வீரிய ஸ்தான வலிமை இன்மை காரணமாக ஜாதகி எடுக்கும் முயற்சிகளோ அல்லது ஜாதகிக்காக மற்றவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளோ தோல்வியை தரும், 5ம் பாவக வலிமை இன்மை ஜாதகியின் குல தேவதையின் ஆசி இன்மையால் சுப நிகழ்வுகள் தடை மற்றும் தாமதங்களை வழங்குவதுடன் ஜாதகிக்கு சமயோசித புத்திசாலித்தனத்தில் குறைகளை தருகிறது , 11ம் பாவக வலிமை இன்மை ஜாதகிக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை தட்டி பறிக்கிறது, மேலும் ஓர் நம்பிக்கை இன்மையை ஜாதகிக்கு பலாபலனாகவும், பிற்போக்கு தனமான நம்பிக்கையில் அதீத ஈடுபட்டினையும் தருகிறது.
2) ஜாதகிக்கு 2,4,8ம் வீடுகள் அனைத்தும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெறுவது 2ம் பாவக வழியில் இருந்து குடும்ப வாழ்க்கை அமைவதில் சிக்கல்களையும் தாமதங்களும் தருகின்றது, குடும்பத்தில் ஜாதகியின் கருத்துக்கு மதிப்பில்லா தன்மையை ஏற்படுத்துகிறது, மேலும் இனிமையான பேச்சு திறன் இல்லாத காரணத்தால் ஜாதகியை விரும்பும் வரன்கள் அமைவது குதிரை கொம்பாக அமைகிறது, 4ம் பாவக வழியில் இருந்து ஜாதகியின் தகப்பனாரின் தலையீடு மிக அதிக அளவில் இருப்பதால் ஜாதகிக்கு வரும் வரன்கள் அனைத்தும் தட்டி கழிக்கப்படுகிறது, ஜாதகியின் தகப்பனார் எடுக்கும் முடிவுகளும் ஜாதகிக்கு சாதகம் இன்றி இருப்பதால் திருமணம் மிகவும் தாமதம் ஆகிறது, 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகி நீண்ட ஆயுளை பெற்ற போதிலும் அனைவராலும் ஏமாற்றம், இன்னல்கள், துன்பங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தருகிறது , மேலும் ஜாதகியின் லக்கினம் வலிமை இழந்து காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாக வருவதும், 8ம் பாவகம் வலிமை இழந்து கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானமாக அமைவதும் ஜாதகியின் திருமண தாமதத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.
3) நடைபெறும் குரு திசையும் ஜாதகிக்கு 1,3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது அதிமுக்கிய காரணியாக திகழ்கிறது, மேற்கண்ட ஜாதகிக்கு திருமணம் தாமதம் ஆக செவ்வாய் தோஷம் ( இல்லாத செவ்வாய் தோஷம் ) காரணம் இல்லை அன்பர்களே, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை இன்மையும், நடைபெறும் திசை சாதகம் இன்மையுமே காரணம் என்பதை சம்பந்தப்பட்டோர் உணர்வது அவசியமாகிறது, மேலும் ஜாதகிக்கு வரும் வரனின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது ஏனெனில் ஜாதகிக்கு எதிர்வரும் சனி திசையும் சிறப்பான நன்மைகளை தரவில்லை என்பதை கருத்தில் கொள்வது நல்லது .
குறிப்பு :
செவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம், களத்திர தோஷம் போன்றவை எல்லாம் சுய ஜாதக வலிமை உணராமல் கூறப்படும் கட்டுக்கதை என்பதை உணர்ந்து, விழிப்புணர்வுடன் சுய ஜாதக வலிமை பற்றிய தெளிவுடன் இல்லற வாழ்க்கையில் இணைவதே சிறப்பான தாம்பத்திய வாழ்க்கையை அமைத்து தரும் என்பதனை " ஜோதிடதீபம் " பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக