செவ்வாய், 14 அக்டோபர், 2014

சுய ஜாதக ரீதியாக தனக்கு அமையும் திருமணம் காதல் திருமணமா? பெரியோர்களால் நிச்சயிக்கபட்ட திருமணமா? என்று எப்படி தெரிந்துகொள்வது.




திருமண வயதில் உள்ள ஆண் பெண் இருவருக்கும் இருக்கும் மிகப்பெரிய கேள்வி இது என்றால் அது மிகையில்லை, தனது திருமண வாழ்க்கை பற்றி முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொள்ளும் வண்ணம், மேற்கண்ட கேள்வி இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஏற்ப்படுகிறது, இது வரவேற்க தக்க ஒரு விஷயமே, பொதுவாக சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் எனப்படும் 2,7ம் பாவகங்கள் சுய ஜாதகத்தில் எவ்வித வலிமை பெற்று இருக்கிறது, என்பதின் அடிப்படையிலேயே ஒருவரின் திருமண வாழ்க்கை நிர்ணயம் செய்யபடுகிறது, இதில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் நல்ல வலிமையுடன் இருக்கும் ஜாதக அமைப்பை சார்ந்த ஆண் அல்லது பெண்ணுக்கு எவ்வித தடையும் இன்றி பெரியோர்களால் நிச்சயிக்கபட்டு திருமணம் சிறப்பாக நடைபெறுகிறது, ( இது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2,7ம் ராசிகளின் தன்மையும் வலிமையையும் பொறுத்தே அமையும் ) அப்படி அமையும் திருமண வாழ்க்கையும் மிகவும் சிறப்பான முன்னேற்றத்தையே தம்பதியரின் வாழ்க்கையில் தருகின்றது.


சுய ஜாதகத்தில் மேற்கண்ட 2,7ம் பாவகம் வலிமை பெற்று அமர்ந்திருக்கும் ஜாதகர் எவருக்கும் காதல் திருமணம் என்ற ஒரு வாய்ப்பை தருவதில்லை, மாறாக ஜாதகர் திருமணதிற்கு பிறகு தனது மனைவியை நேசிக்கும் யோகத்தையே பெறுகிறார், மேலும் இவர்களின் வாழ்க்கையில் குடும்பம் மாறும் களத்திர ரீதியான எவ்வித பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை, அப்படி ஏற்படும் பட்சத்தில் இவர்களுக்கு இடையிலான தாம்பத்தியம் பன்மடங்கு வலிமை பெறுகிறதே தவிர, பிரிவு என்ற பேச்சிற்கே இடம் தருவதில்லை, மேலும் இவர்களுக்கு இடையில் ஏற்ப்படும் பிரச்சனைகளை தவிர்க்க, பெரியவர்களின் ஆலோசனையும் அறிவுரையும் மிகவும் உதவிகரமாக அமைகிறது, தம்பதியரின் திருமண வாழ்க்கையின் வெற்றியை உறுதி செய்கிறது, எந்த ஒரு சூழ்நிலையிலும் தம்பதியர் தனது வாழ்க்கை துணையை பிரிந்து தனித்து இருக்க விரும்புவதில்லை.

எனவே சுய ஜாதகத்தில் மேற்கண்ட குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்கள் வலிமை பெற்ற ஜாதகர்கள் எவ்வித குழப்பமும் இன்றி நிச்சியக்கபட்ட திருமணம் செய்து கொள்வதற்கு உண்டான வாய்ப்பு 100% சதவிகிதம் உள்ளது என்பது உறுதியாகிறது, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ரிஷபம் மற்றும் துலாம் ராசிகள் வலிமை பெரும் பொழுது நிச்சயிக்கபட்ட திருமணதிற்கு உண்டான வாய்ப்பு என்பது மேலும் வலிமை பெறுகிறது, திருமண வாழ்க்கையில் எவ்வித தொய்வும் இல்லாத மணவாழ்க்கையை சிறப்பாக வாரி வழங்கிவிடுகிறது.

காதல் திருமணம் செய்துகொள்வதற்கு உண்டான வாய்ப்பை தருவது சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகமும், வீர்ய ஸ்தானம் எனும் 3ம் பாவகத்தின் வலிமையுமே, மேலும் இவர்களின் சுய ஜாதகத்தில் குடும்பம் எனும் இரண்டாம் பாவகமோ  அல்லது களத்திரம் எனும் 7ம் பாவகமோ பாதிக்கபட்டு இருப்பது கண்கூடான விஷயம், சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் மூன்றாம் பாவகம் வலிமை பெற்று அமர்ந்திருக்கும் ஜாதக அமைப்பை பெற்றவர்களுக்கு காதல் திருமணம் செய்துகொள்வதற்கு உண்டான வாய்ப்புகள் மிக அதிகம், காரணம் தான் எடுக்கும் முடிவில் பிடிவாதமாக இருந்து தான் நினைத்ததை அடையும் ஆற்றல் இவர்களுக்கு அசாத்தியமாக அமைந்துவிடுகிறது, மேலும் தனக்கு உண்டான வாழ்க்கை துணையை சரியாக தேர்ந்தெடுக்கும் வல்லமை பெற்றவர்கள், பொதுவாக சுய ஜாதகத்தில் 2ம் பாவகம் அல்லது 7ம் பாவகம் இரண்டில் ஏதாவது ஒன்று வலிமை குறைந்து, லக்கினம் மற்றும் 3ம் பாவகம் அதிக வலிமை பெற்று இருக்கும் ஜாதக அமைப்பை பெற்றவர்கள் தனது விருப்பபடி தனது வாழ்க்கை துணையை தேடிக்கொண்டு இல்லற வாழ்க்கையை இனிதே நடத்தும் யோகம் பெற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

மேலும் இவர்களின் சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபமும், 7ம் வீடான துலாமும் மிகவும் வலிமை பெற்றே அமர்ந்திருக்கிறது, ஆனால் இலக்கின அடிப்படையில் 2ம் பாவகமோ அல்லது 7ம் பாவகமோ ஏதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு இருப்பது தவிர்க்க இயலாது, எனவேதான் ஜாதாகர் காதல் திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளபடுகிறார், இருப்பினும் ஜாதகர் செய்துகொள்ளும் காதல் திருமணம் மேற்கண்ட மற்ற பாவகங்களின் வலிமையால் 100% வெற்றியை பெறுகிறது, பிரிவில்லாத இல்லற வாழ்க்கையை வாரி வழங்குகிறது, தமக்குள்ள வரும் பிரச்சனைகளை தம்பதியர் இருவருமே தீர்வு காண்பதால் பிரிவு என்ற நிலைக்கு செல்லும் வாய்ப்பை தருவதில், இல்லறவாழ்க்கையில் 100% மகிழ்ச்சியை வாரி வழங்குகிறது.

சுய ஜாதகத்தில் 2ம் பாவகமான குடும்ப ஸ்தானமும், 7ம் பாவகமான களத்திர ஸ்தானமும் பாதிக்கபட்டு, லக்கினம் மற்றும் வீரிய ஸ்தானமான 1,3ம் பாவகங்களும் பாதிக்கபட்டு, காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 2,7ம் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம் ராசியும் பாதிக்க பட்ட ஜாதகர்களின் நிலைதான் மிகுந்த இன்னல்களை அனுபவிக்கும் ஜாதகங்களாக கருதலாம், குறிப்பாக காதலில் தோல்வியை சந்திக்கும் அன்பர்கள் அனைவரின் ஜாதகத்திலும் மேற்கண்ட அமைப்பு காணப்படுகிறது, மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெறாத ஜாதகர் அனைவரும் தனது திருமண வாழ்க்கையை பற்றி முடிவு செய்யும் பொழுது அதிக கவனமுடன் இருப்பது நலம், குறிப்பாக சொல்லவேண்டும் எனில் தனது வாழ்க்கை துணையை இவர்களால் நிச்சயம் சரியாக தேர்ந்தெடுக்க முடியாது, இதுவே இவர்களின் காதல் தோல்விக்கும், காதல் திருமணத்தில் ஏற்ப்படும் மணவாழ்க்கை பிரிவுக்கும் அடிப்படை காரணமாக அமைந்துவிடும்.

மேலும் இவர்களின் சுய ஜாதகத்தில் பாதிக்கபட்ட வீடுகளான 2,7ம் பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவதோ, 1,3ம் பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவதோ நிச்சயம் காதல் தோல்வியை தரும், மனவழ்க்கையிலும் மிகப்பெரிய தோல்வியை தரும், குறிப்பாக மேற்கண்ட பாவகங்கள்  பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று, பாதக ஸ்தானம் நெருப்பு தத்துவ ராசியாக இருப்பின் ஜாதகர் தனது சுய கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் இழந்துவிடுவார், நில தத்துவ ராசியாக இருப்பின் ஜாதகர் தனது பொறுமையை இழந்து உடல் நல பாதிப்பை பெரும் சூழ்நிலைக்கு தள்ளபடுவார், காற்று தத்துவ ராசியாக இருப்பின் ஜாதகரின் அறிவாறலே வெகுவாக பாதிக்கப்படும், பல அறிவிலி  தனமான செய்கைகளுக்கு சொந்தகாரர் ஆகிவிடுவார், நீர் தத்துவ ராசியாக இருப்பின் ஜாதகரின் மன நிலை வெகுவாக பதிக்கப்படும், புத்தி போதளிக்கும் நிலைக்கு ஜாதகர் தள்ளபடுவார் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

மேற்கண்ட ராசிகள் சர தத்துவ அமைப்பை பெரும் பொழுது ஜாதகருக்கு குறுகிய காலத்தில் கடுமையான பாதிப்பை தரும், ஸ்திர தத்துவ அமைப்பை பெரும் பொழுது ஜாதகருக்கு தரும் பாதிப்பின் தன்மை நெடுநாளுக்கு பாதிப்பை தரும், இவர்கள் காதல் தோல்வியில் இருந்தோ, மணவாழ்க்கை பிரிவில் இருந்தோ மீண்டு வருவது கேள்விக்குறியே, உபய தத்துவ அமைப்பை பெரும் பொழுது ஜாதகருக்கு வரும் பாதிப்பின் தன்மை மிக குறைந்த அளவிலேயே இருக்கும் என்பதால் மேற்கண்ட விஷயங்களில் இருந்து வெகு விரைவில் தோல்விகளில் இருந்து மீண்டு வந்து சகசமான வாழ்க்கையை சிறப்பாக வாழும் யோகத்தை தந்துவிடும்.

சுய ஜாதக அமைப்பை பற்றி தெளிவாக தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் தனது திருமண வாழ்க்கையை சரியாக அமைத்து கொள்வது இன்றைய இளைஞர்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை வழங்கும், மேற்கண்ட அமைப்பில் பாதிக்கபட்ட ஜாதக அமைப்பை சார்ந்த இளைஞர்களும் இளைஞிகளும் தங்களுது கவனத்தையும், செயல்பாடுகளையும் திசை திருப்பிக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் நடைபோடுவதே சாலசிறந்தது, காதல் என்ற ஒரு விஷயமே வாழ்க்கையில் அனைத்தும் தந்துவிடுவதில்லை, திரைப்படங்களில் வேண்டுமானால் அது சாத்தியப்படுமே தவிர, நிஜவாழ்க்கையில் இது சாத்தியப்பட வாய்ப்பே இல்லை எனலாம் அன்பர்களே, இறை அருள்  ஓவ்வொரு மனித ஜீவனையும் படைத்ததின் சாரம்சத்தை  உணர்ந்து அதன் வழியில், வாழ்க்கையை சிறப்பாக வாழும் கலையை கற்றுகொள்வது இங்கே அவசியமாகிறது அன்பர்களே!

எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில் 11ம் பாவகத்தின் தன்மையை உணர்ந்து அதன் வழியில், தனது வாழ்க்கையை செம்மையாக வாழ கற்றுகொள்வது நம் அனைவருக்கும் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக