சனி, 25 அக்டோபர், 2014

சுய ஜாதக ரீதியாக ஒருவர் செய்யும் பரிகாரம் பலன் தருமா ? பரிகாரம் செய்வதால் ஒருவர் யோக பலன்களை அனுபவிக்க முடியுமா ?

  


பரிகாரம் தேடுதல் என்பது, ஒருவரின் சுய ஜாதக அமைப்பை வைத்தும் கிரகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலையை வைத்தும் ஜோதிடர்களால் பரிந்துரை செய்வதை ஜாதகர் முறையாக செய்து அதன்வழியில் இருந்து நன்மை பெறட்டும் என்பதாகவே இருக்கிறது, இதில் பலதரப்பட்ட வித்தியாசங்களும், முரண்பட்ட கருத்துகளும் வருவது உண்டு, இந்த கருத்து வேறுபாடுகள் ஏன் வருகிறது, உண்மையில் ஜாதகர் தேடும் பரிகாரங்கள் ஜாதகருக்கு பலன் தருகின்றதா? கேவில் வழிபாடுகள் மூலம் ஜாதகர் மேற்கொள்ளும் வழிபாடுகள் பலன் தருகின்றதா? பரிகாரம் ஒருவரின் வாழ்க்கையில் தரும் மாற்றங்கள் என்ன? என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே !

சுய ஜாதக பாதிப்பு நிலை :

 ஒருவரின் சுய ஜாதகம் என்பது அந்த ஜாதகர் செய்த வினை பதிவிற்கு ஏற்ப இறை அருளால் நிர்ணயம் செய்யபடுகிறது, உதாரணமாக ஒருவரின் சுய ஜாதக வலிமை நிர்ணயம் செய்வது 12 பாவகங்களே என்றால் அது மிகையாகாது அன்பர்களே ! குறிப்பாக ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் வலிமை அற்று காணப்படுகிறது என்று வைத்துகொள்ளுங்கள், அந்த ஜாதகர் எந்த வகையில் இருந்து பரிகாரங்கள் தேடுவது ? அல்லது 12 பாவகங்களில் ஏதாவது ஒரு பாவகமோ அல்லது சில பாவகங்களோ பாதிக்க படும் பொழுது, ஜாதகர் எவ்வித பரிகாரங்களை செய்து நலம் பெறுவது என்பதை ஜோதிடர்களே நிர்ணயம் செய்கின்றனர், ஒரு தலை சிறந்த மருத்துவர் ஒருவரின் உடல் நிலை பாதிப்பை பார்த்த கணத்திலேயே முடிவு செய்ய இயலும், மேலும் பரிசோதனைகள் மூலம் சம்பந்தபட்டவருக்கு வந்திருக்கும் உடல் நல குறைபாட்டினை உறுதி படுத்தி அதற்க்கு தகுந்த சிகிச்சையை பரிந்துரைக்க முடியும், சம்பந்த பட்ட நபரை உடல் நல பாதிப்பில் இருந்து மீட்டு எடுக்க முடியும்.

இதை போன்றதே ஜோதிட பரிகாரங்களும், ஒருவரின் சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்கள் எது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு, அந்த பாவகத்திர்க்கு அதிபதியான கிரகங்களுக்கு முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொள்ளும் பொழுது, ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து சுய ஜாதகத்திற்கு உற்ப்பட்டு யோக பலன்களை அனுபவிக்க இயலும், மேலும் பாதிக்க பட்ட பாவக அமைப்பு எவ்வித தத்துவ  நிலையை கொண்டு உள்ளதோ அது சார்ந்த பரிகாரங்களை மேற்கொள்வது ஜாதகருக்கு உடனடியான நன்மைகளை வாரி வழங்கும்.

குறிப்பாக பஞ்ச பூத தத்துவ அமைப்பை அடிப்படையாக கொண்டு பல திருத்தலங்கள் நமது தமிழகத்தில் இறை அருளின் கருணையினால் பல சித்தர்களாலும், ஆன்மீக பெரியோர்களாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, கோவில் வழிபாட்டில் மனிதனின் செயலற்ற கருமையம் உற்பட 7 ஆதாரங்களும் செயல்நிலை தூண்டப்பட்டு இயக்க நிலையை பெறுகிறது, மேலும் கிரகங்களின் ஜீவ காந்த அலைகளை உடலும் மனமும் கிரகிக்க ஆரம்பிக்கிறது, இந்த மாற்றங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் பல அபரிவிதமான முன்னேற்றத்தையும், இறை அருளுடன் ஒன்று கலக்கும் வாய்ப்பை வாரி வழங்குகிறது, மேலும் இந்த சூட்சம விஷயங்கள் யாவும் சரியான சில நொடிகளில் நடைபெறும் என்பதால் எவராலும் விளக்கம் தர முடியாது, அப்படியே தந்தாலும் அது கற்பனையாகவே இருக்கும், ஒவ்வொரு ஜீவன்களின் கிரகிக்கும் சக்தியை பொறுத்து கிரகங்களின் ஜீவ சக்தி கலப்பு என்பது நிகழும், உதாரணம் சொல்ல வேண்டும் எனில் நாம்  ஒரு இனிப்பு பதார்த்தை உண்கிறோம் என்று வைத்து கொள்ளுங்கள், இதை மற்றவருக்கு வார்த்தையால் விவரிக்க இயலாது, சம்பந்த பட்டவரே அந்த இனிப்பு பாதார்த்தை உண்டால் மட்டுமே அவருக்கு அது புரியவரும், இனிப்பின் தன்மை தெரிய வரும்.

கோவில் வழிபாட்டில் ஒரு ஜாதகர் நவகிரகங்களின் கிரக சக்தியுடன் உயிர் கலப்பு பெறுவது மேற்கண்ட அமைப்பிலேயே, சில நபர்களுக்கு பரிகாரங்கள் செய்தும் பலன் தராதது ஏன் ? என்ற கேள்வி வர வாய்ப்புள்ளது, இதை இந்த இடத்தில் ஜோதிடதீபம் விளக்க கடமை பட்டுள்ளேன், அதாவது மேற்கண்ட இனிப்பு பதார்த்தை வைத்தே தெளிவு படுத்துவோம்,  அன்பர்களே ! ஒரு நோய்வாய்பட்ட ஒரு நபருக்கு ( அளவுக்கு அதிகமான காய்ச்சல் ) நாம் இதே இனிப்பு பதார்த்தை கொடுக்கும் பொழுது அந்த நபரின் நாக்கு சுவை அறியும் தன்மையை பெற்று இருக்காது, அப்பொழுது அந்த நபருக்கு இனிப்பு பதார்த்தை கொடுப்பதால் எவ்வித பயனும் இல்லை, இதை போன்றதே சில நபர்களின் பரிகாரங்கள்  நிவர்த்தி பெறாத அமைப்பிற்கும், யோக பலன்கள் நடைமுறையில் பலன் தராத அமைப்பிற்கும் காரணமாகும்.

 உதாரணமாக ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவகங்கள் கடுமையான பாதிப்பிற்கு ( எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெறுவது மிகுந்த பாதிப்பை தரும் ) உள்ளாகி இருக்குமெனில் ஜாதகர் தொடர்ந்து பரிகாரங்களை  சில காலம் செய்வதால் அந்த பாதிப்பின் கடுமை குறைந்து நன்மைகளை பெறலாம், சில ஜாதகர்களை கோவில் வழிபாடு செய்ய பரிந்துரை சொல்வோம் அவர்கள், அந்த வழிபாட்டை ஒருமுறை செய்த உடனேயே யோக பலன்கள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமாக படவில்லை, தொடர்ந்த இறை வழிபாட்டில் ஈடுபடும் பொழுது ஜாதகர் பாதிக்க பட்ட பாவக வழியில் இருந்து விரைவில் மீண்டு அதே பாவக வழியில் இருந்து யோக பலன்களை அனுபவிக்க ஆரம்பிப்பார், இதுவே பரிகாரத்தின் உண்மை நிலை, பொதுவாக பரிகாரம் என்பது சம்பந்தபட்ட ஜாதகர் யாரோ அவரே ஜோதிடர்களின் வழிகாட்டுதலின் படி தேடிகொள்வது நல்லது இதை தவிர்த்து ஜோதிடர் பரிகாரம் செய்கிறார் என்பது ஏற்புடையாதாக இல்லை.

ஒருவர் சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவக வழியில் இருந்து பரிகாரம் தேடிக்கொண்டு நன்மை பெற வேண்டும் என்றாலும் கூட, அவரது ஜாதகத்தில் அந்த விதி இருக்க வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே அந்த ஜாதகருக்கு சரியான ஜோதிடரை நாடி சரியான பரிகாரங்களை தேடிக்கொள்ள முடியும், ஆக ஒருவரின் சுய ஜாதகத்தில் பரிகார வழியில் ஜாதகர் யோக வாழ்க்கையை பெற வேண்டும் என்றாலும் கூட  அவரது சுய ஜாதகத்தில்,  பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமும், பாக்கியம் எனும் ஒன்பதாம் பாவகமும் சிறிதாவது நல்ல நிலையில் இருப்பது அவசியம். ஒருவர் தான் செய்யும் பரிகாரத்தில் கோவில் வழிபாடுகளுக்கு இணையான நன்மைகளையும் யோகங்களையும் பெற மாற்று வழிகளும் உண்டு, உதாரணமாக ஒருவருக்கு நான்காம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கிறது என்று வைத்துகொள்ளுங்கள், அந்த ஜாதகருக்கு நல்ல வீடு அமையாது, சிறப்பான வாகனம் அமையாது சொத்து சுகங்கள் கிடைக்காது, நல்ல குணநலன்களுடன் ஜாதகர் இருக்க மாட்டார், முரண்பட்ட பழக்க வழக்கங்களையும், குணநலன்களையும் பெற்று இருப்பார், ஜாதகரின் பெயரில் இருக்கும் சொத்து சுகங்கள் யாவும் விரையம் அடையும்.

இந்த நிலையில் ஜாதகர் கோவில் வழிபாடுகளுக்கு நிகரான பரிகார நிவர்த்தியும், நன்மை மிகுந்த யோக பலன்களையும் பெறுவது எப்படி? ஆண்கள் ஜாதகத்தில் நான்காம் பாவகம் அன்னையை குறிக்கும் ( பெண்கள் ஜாதகத்தில் நான்காம் பாவகம் தகப்பனாரை குறிக்கும் ) ஜாதகர் தனது அன்னைக்கு தேவையான பணிவிடைகளை தவறாது செய்வதும், அவரின் பேச்சை கேட்டு தட்டாமல் நடந்து கொள்வதும் ஜாதகருக்கு நான்காம் பாவக வழியில் இருந்து வரும் அவயோக பலன்களை தடுத்து நிறுத்தி, யோக பலன்களை வாரி வழங்கும், ஜாதகர் தனது அன்னையின் உடல் நலத்தில் அக்கறை கொள்வதும், அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதும், அவரின் மனம் நோகாவண்ணம் நடந்து கொள்வதும் ஜாதகரின் வாழ்க்கையில், நல்ல வீடு, வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்கி விடும், நான்காம் பாவகம் பதிக்க பட்டு இருக்கும் ஜாதகர் அனைவருக்கும் தனது தாயின் அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை தரும், இருப்பினும் ஜாதகர் அப்படி வரும் இன்னல்களை மனமுவந்து ஏற்றுக்கொண்டு, தனது அன்னைக்கு நன்மையை செய்யும் பொழுது சில காலம் சிரமபட்ட போதும், அதன் பிறகு வரும் காலங்கள் ஜாதகருக்கு நான்காம் பாவக வழியில் இருந்து யோகங்களை 100 சதவிகிதம் வாரி வழங்கும்.

எனவே ஒருவரது சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகம் எதுவோ அந்த பாவக வழியில் உள்ள உறவுகளிடம், நாம் நமது பாவக வலிமையை வலுபடுத்திகொள்ள இயலும், 3ம் பாதிக்க படும் பொழுது சகோதர வழியில் இருந்தும், 5ம் பாவகம் பாதிக்க படும் பொழுது தனது குழந்தைகள் வழியில் இருந்தும், 7ம் பாவகம் பாதிக்க படும் பொழுது தனது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், 9ம் பாவகம் பாதிக்க படும் பொழுது தனது பித்ருக்கள் வழியில் இருந்தும், 10ம்  பாவகம் பாதிக்க படும் பொழுது தனது தந்தை வழியில் இருந்தும் வரும் இன்னல்களை ஏற்றுகொள்ளும் தன்மையை ஜாதகர் பெரும் பொழுது மேற்கண்ட பாவக வழியில் இருந்து நன்மைகளை 100 சதவிகிதம் பெறலாம், இது தான் செய்த கர்ம வினை பதிவை கழித்து கொண்டு, அதன் வழியில் இருந்து யோக பலன்களை அனுபவிக்கும் சரியான மாற்று வழி எனலாம்.

முதலில் சுய ஜாதக ரீதியாக பாதிக்க பட்ட பாவகம் எதுவென்று தெளிவாக தெரிந்து கொள்வதும், அந்த பாவகத்திர்க்கு அதிபதியான கிரகம் எதுவென்று உணர்வதும் சம்பந்த பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகரை மீட்டு எடுக்க சரியான வழியை கடைபிடிக்க உதவும்.




 உதாரணமாக மேற்கண்ட ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்கள் 6,9,12 இந்த பாவகங்களுக்கு அதிபதியாக முறையே 6க்கு செவ்வாயும், 9க்கு புதனும், 12க்கு சந்திரனும் வருகின்றனர், எனவே ஜாதகர் 6ம் பாவகம் சர ராசியாக இருப்பதால் 6ம் பாவக வழியில் இருந்து 100% இன்னல்களும், 12ம் பாவகம் சர ராசியாக இருப்பதால் 12ம் பாவக வழியில் இருந்து 100% இன்னல்களும், 9ம் பாவகம் பாதக ஸ்தானமாக வருவதால் 9ம் பாவக வழியில் இருந்து 200% இன்னல்களும் அனுபவிக்கும் தன்மையை தரும் எனவே மேற்கண்ட பாவகங்கள் என்ன தத்துவ அமைப்பை பெறுகிறது, இதற்க்கு உண்டான பரிகாரம் என்ன ? என்பதை முறையாக சிறந்த ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று பரிகாரங்களை மேற்கொள்ளும் பொழுது ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்த்து, அதன் வழியில் இருந்து வரும் யோகங்களை அனுபவிக்க இயலும் அன்பர்களே! எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில் பாதிக்கபட்ட பாவகம் எது? அதன் அதிபதி யார்? பாதிக்க பட்ட பாவகத்தின் தத்துவம் என்ன ? என்ற விஷயங்கள் தெளிவாக தெரிந்தால் மட்டுமே ஜாதகர் மேற்கண்ட இன்னல்களில் இருந்து விடுபட்டு, யோக பலன்களை அனுபவிக்க முடியும், இல்லை எனில் ஒருவருக்கு பிரச்சனை ஒன்று, அவர் செய்த பரிகாரம் வேறொன்று என்ற நிலையை தந்துவிடும், பரிகாரம் பலன் தராமல் போகக்கூடிய வாய்ப்பு அதிகம் உண்டு.

இதையே திருவள்ளுவர் :

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

குறள் விளக்கம் :

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

எனும் குறள் வடிவில் தெளிவாக தந்திருக்கிறார்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக