ஜாதகத்தில் ஒரு கிரகம் வலிமை பெறுவதை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குழப்பங்கள் நடைமுறையில் உள்ளது, பொதுவாக ஜெனன ஜாதகத்தில் ராசியிலோ, அமசத்திலோ ஒரு கிரகம் அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட கிரகங்ககள், ஆட்சி,உச்சம் பெற்று இருப்பது, ஆட்சி,உச்சம் பெற்ற கிரகங்களின் பார்வையை பெரும் பாவகம் மற்றும் கிரகங்கள் சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்றதாக கருதப்படுகிறது, மேலும் வலிமை பெற்ற கிரகங்கள் தனது திசா புத்தி காலங்களில் யோக பலன்களை, ஜாதகருக்கு நிச்சயம் வழங்கும் என்ற கருத்தும் உள்ளது, இது பெரும்பாலும் அனைவருக்கும் பொருந்துவதில்லை, ஏனெனில் சுய ஜாதகத்தில் ஆட்சி,உச்சம் பெற்ற கிரகத்தின் திசாபுத்திகள் பல ஜாதகர்களுக்கு அவயோக பலன்களை வழங்கி இருக்கிறது, பகை,நீச்சம் பெற்ற கிரகத்தின் திசாபுத்திகள் நிறைய அன்பர்களுக்கு யோக பலன்களை தங்கு தடையின்றி வழங்கி இருக்கின்றது, இந்த முரண்பாடுகள் ஏன் ? என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!
சுய ஜாதகத்தில் ஒரு கிரகம் வலிமை பெறுவதை வைத்தோ, அல்லது வலிமை இழப்பதை வைத்தோ அந்த கிரகத்தின் திசாபுத்திகள் நன்மை தீமையை வழங்கும் என்று கருதுவது முற்றிலும் சுய ஜாதக கணிதத்திற்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஒரு குறிப்பிட்ட கிரகம் ஆட்சி உச்சம் பெறுவது அந்த நாளில் பிறந்த பல அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் பொருந்தி வரும், ஆனால் குறிப்பிட்ட சில நபர்களே யோக பலன்களை அனுபவிக்கின்றனர், பல அன்பர்கள் அவயோக பலன்களை ( கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும் கூட ) அனுபவிக்கின்றனர், எனவே ஒருவரது சுய ஜாதகத்தில் நடைபெறும் நன்மை தீமை பலாபலன்களுக்கு காரணமாக அமைவது, நவகிரகங்களின் ஜீவ சக்தியை பெற்று சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே, சுய ஜாதகத்தில் பாவக வலிமையை நிர்ணயம் செய்வது சம்பந்தபட்ட ஜாதகரின் பிறந்த நேரமும்,இடமும் மிக முக்கியமாக அமைகிறது, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெரும் அல்லது வலிமை இழக்கும் பாவகங்களின் பலனையே நடைபெறும் நவகிரகங்களின் திசாபுத்திகள் ஏற்று நடத்துகிறது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் கிரகத்தின் திசாபுத்திகள் யோக பலன்களையும், சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் கிரகத்தின் திசாபுத்திகள் அவயோக பலன்களையும், ஜாதகருக்கு தங்கு தடையின்றி வழங்குகிறது, இதில் கோட்சார கிரகங்களின் சஞ்சாரம் சம்பந்தபட்ட பாவகங்களுக்கு தமது கோட்சார பலன்களையும் சேர்த்து வழங்குகிறது, எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெறுவது ஜாதகருக்கு வாழ்நாளில் யோக பலன்களையும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை இழப்பது அவயோக பலன்களையும் தருகின்றது.
இனி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு, பாவக வலிமை, வலிமை அற்ற நிலையை பற்றியும், நவகிரகங்கள் தனது திசாபுத்தி காலங்களில் ஜாதகருக்கு தரும் பலாபலன்கள் பற்றியும் சிந்திப்போம் அன்பர்களே!
ஜாதகிக்கு லக்கினம் : தனுசு
ராசி : மேஷம்
நட்சத்திரம் : அஷ்வினி 3ம் பாதம்
சுய ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவகங்கள் :
2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 100% யோகத்தை 11ம் பாவக வழியில் இருந்து தரும்.
3,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான யோக பலன்களை 4ம் பாவக வழியில் இருந்து தரும்.
9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த நன்மைகளை 9ம் பாவக வழியில் இருந்து தரும்.
6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜீவன வழியில் சிறப்பான நன்மைகளை தரும்.
சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள் :
1,7,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 12ம் பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை தரும்.
8ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெறுவது 6ம் பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை தரும்.
மேற்கண்ட விஷயங்கள் ஜெனன ஜாதகத்தில், ஜாதகிக்கு 12 பாவகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலையாகும், இனி ஜாதகிக்கு நவ கிரகங்கள் தனது திசாபுத்தி காலங்களில் எந்த பாவகங்களின் தொடர்பை பெற்று பலன்களை தருகிறது என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே !
ஜாதகிக்கு ஜெனன காலத்தில் கேது திசை 2வருடம், 7மாதம், 2நாள் நடைமுறையில் இருந்துள்ளது ( 21/03/1969 முதல் 24/10/1971 வரை ) இந்த கேது திசை ஜாதகிக்கு வலிமை பெற்ற 4,9,10 பாவக பலனை தந்து தனது பெற்றோரும், தானும் நன்மைகளையும் யோகத்தையும் பெற்றனர்.
( 24/10/1971 முதல் 24/10/1991 வரை ) நடைபெற்ற சுக்கிரன் திசை வலிமை பெற்ற 10,11ம் பாவக பலனை ஏற்று நடத்தி ஜாதகியின் கல்வி காலங்கள், வளரும் சூழ்நிலைகள், ஜீவன வெற்றிகள், அதிர்ஷ்டம் நிறைந்த யோக வாழ்க்கை, இனிமையான திருமண வாழ்க்கை என சகல அமைப்புகளில் இருந்தும் நன்மைகளை தங்கு தடையின்றி 100% விகிதம் பெற்றார்.
( 24/10/1991 முதல் 24/10/1997 வரை ) நடைபெற்ற சூரியன் திசையும் வலிமை பெற்ற 10,11ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகியின் யோக வாழ்க்கையை உறுதி செய்தது.
( 24/10/1997 முதல் 24/10/2007 வரை ) நடைபெற்ற சந்திரன் திசை ஜாதகிக்கு வலிமை பெற்ற 11ம் பாவக வழியில் இருந்து யோகத்தையும், வலிமை அற்ற 12ம் பாவக வழியில் இருந்து மன நிம்மதி இழப்பு, மன அழுத்தம், மன போராட்டம், வாழ்க்கை துணை வழியில் இருந்து மன உளைச்சல்களையும் வாரி வழங்க ஆரம்பித்தது.
(24/10/2007 முதல் 23/10/2014 வரை) நடைபெற்ற செவ்வாய் திசை ( ஜாதகிக்கு ராசியில் செவ்வாய் 11ம் பாவகத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கின்றது ) வலிமை அற்ற 12ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகி சுயமாகவும், தனது வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் வழியில் இருந்து வீண் விரையங்களையும், மன போராட்டத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தந்து மிகுந்த துயரத்திற்கும் துன்பத்திற்கும் ஆளாக்கியது.
( 23/10/2014 முதல் 23/10/2032 வரை ) தற்பொழுது நடைபெறும் ராகு திசை வலிமை அற்ற 12ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது ஜாதகியின் வாழ்க்கையில் அளவில்லா துன்பங்களையும், வீண் விரையங்களையும், மன நிம்மதி இழப்பையும் தொடர்ந்து வழங்கி வருவது வருத்தத்திற்கு உரிய விஷயம் மேலும், இதன் தாக்கம் ஜாதகியின் குடும்பத்தாருக்கும் அதிக அளவில் பாதிப்புகளை வாரி வழங்குவது சற்று சிரமமே.
எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது முக்கியமல்ல, வலிமை பெற்ற பாவகத்தின் பலனை நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு யோக பலன்கள் நடைமுறைக்கு வரும், மாறாக வலிமை அற்ற பாவக பலனை மட்டுமே திசாபுத்திகள் ஏற்று நடத்தினால், சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும் " குடத்தில் இட்ட விளக்கு போல் " ஜாதகருக்கு பலனற்று போகும்.
மேலும் சுய ஜாதகத்தில் நவ கிரகங்கள் ராசி,அம்சத்தில் ஆட்சி,உச்சம் பெறுவதால் ஜாதகருக்கு மிகப்பெரிய யோக பலன்கள் நடைபெறுவதும் இல்லை, பகை, நீசம் பெறுவதால் அவயோக பலன்கள் நடைபெறுவதும் இல்லை, அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள பாவகத்தின் வலிமைக்கு உண்டான பலாபலன்களையே நடைபெறும் நவகிரகத்தின் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் என்ற உண்மையை உணர்வது அவசியமாகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக