வெள்ளி, 14 நவம்பர், 2014

ஜாதகத்தில் 5ல் ராகு இருப்பதால் புத்திரபாக்கியம் இல்லை என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர் இது உண்மையா ?



அண்ணா எனது ஜாதகத்தில் 5ல் ராகு இருப்பதால் புத்திரபாக்கியம் இல்லை என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர் இது உண்மையா ? 

தம்பி பொதுவாக பாரம்பரிய முறையில் மேலோட்டமாக உனது ஜாதகத்தை பார்க்கும் பொழுது விருச்சிக லக்கினத்திற்கு, 5ம் வீடான மீனத்தில் ராகு அமர்ந்து இருப்பதை கருத்தில் கொண்டு 5ல் அமர்ந்த ராகு புத்திர பாக்கியத்தை  தாராது என்ற பொது கருத்தை ஜாதக பலனாக தங்களுக்கு ஜோதிடர்கள் கூறியிருக்க கூடும்,  மேலும் 5ல் ராகு என்றவுடன் புத்திர பாக்கியத்தை தராது என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான ஜாதக கணிதம், எப்பொழுதுமே ஒருவரின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்ளும் பொழுது லக்கினம் ஆரம்பிக்கும் பாகையின் அடிப்படையில் 12 பாவகங்களை நிர்ணயம் செய்து, எந்த எந்த பாவகத்தில் நவ கிரகங்கள் அமர்ந்து இருக்கின்றது என்பதை துல்லியமாக கணிதம் செய்து பலன் காண்பது, சரியான ஜாதக பலனை காண வழிவகுக்கும்.




 உனது ஜாதகத்தில் லக்கினம் விருச்சிக ராசியில் 16:42:29 பாகையில் ஆரம்பித்து, தனுசு ராசியில் 15:41:31 பாகையில் முடிவடைகிறது, அதாவது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியான விருச்சிகத்தில் 226:42:29 பாகையில் ஆரம்பித்து கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியான தனுசு ராசியில் 255:41:31 பாகையில் முடிவடைகிறது, ஆக உனது லக்கினம் விருச்சிகமாக இருந்தாலும் பாகை கணித அடிப்படையில் லக்கினமான முதல் பாவகம் விருச்சிக ராசியிலும், தனுசு ராசியிலும் வியாபித்து இருக்கிறது உனது லக்கினம் இரண்டு ராசிகளுடன் சம்பந்தம் பெறுகிறது.

ராகு 5ல் என்பது ஜோதிடர்களின் கணிப்பு என்பதால் உனது ஜாதகத்தில் 5ம் பாவக நிலையை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம், பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் உனக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான மீனத்தில் 20:39:01 பாகையில் ஆரம்பித்து, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தில் 20:05:32 பாகையில் முடிவடைகிறது, ஆக உனது லக்கினத்திற்கு 5ம் பாவகம் மீனமாக இருந்தாலும் பாகை கணித அடிப்படையில் லக்கினத்திற்கு 5ம் பாவகம் மீன ராசியில் 350:39:01 பாகையில் ஆரம்பித்து, மேஷ ராசியில் 20:05:32 பாகையில் முடிவு பெறுகிறது.

மேற்கண்ட அமைப்பில் 5ம் பாவகம் வியாபித்து இருக்கும் 350:39:01 முதல் 20:05:32 வரையிலான 5ம் பாவகத்தில் ராகு அமர்ந்து இருகின்றார ? என்பதை கவனிக்கும் பொழுது ராகு தங்களது ஜாதகத்தில் மீனத்தில் 341:56:49 பாகையில் அமர்ந்து இருக்கிறார், தங்களுக்கு ஐந்தாம் பாவகம் மீனமாக இருந்த போதிலும், மீன ராசியில் உள்ள நான்காம் பாவகத்தில் அமர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது, தங்களின் 4ம் பாவகம் கும்பத்தில் 318:30:50 பாகையில் ஆரம்பித்து மீனத்தில் 350:39:01 பாகையில் முடிவடைகிறது, 4ம் பாவகத்திர்க்கு உற்பட்ட பாகைக்குள் ( 341:56:49 ) ராகு அமர்ந்து இருப்பதால் தங்களின் ஜாதகத்தில் ராகு பகவான் 4ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கிறார் என்பதே சரியான ஜோதிட பாவக கணிதம்.

தங்களின் ஜாதகத்தில் ராகு 5ல் உள்ளார் என்ற கணிப்பு முற்றிலும் தவறானது, உண்மையில் ஜாதக பாவக கணிதம் கொண்டு ஆய்வு செய்யும் பொழுது 4ம் பாவகத்திலேயே ராகு பகவான் அமர்ந்திருப்பது தெளிவாகிறது, எனவே தம்பி தாங்கள் ராகு 5ல் இருப்பதால் புத்திர பாக்கியம் இல்லை என்ற கவலையை விட்டு விடுங்கள் , மேலும் தங்களின் ஜாதகத்தில் 5ம் பாவகம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடனே இருக்கிறது , எனவே தங்களுக்கு முதல் குழந்தையே ஆண் வாரிசாக அமையும் என்பதால், 5ல் ராகு புத்திர பாக்கியம் இல்லை என்று தவறாக கணித்த ஜோதிடர்களின் கருத்தை முற்றிலுமாக மறந்துவிடுங்கள்.

மேலும் தங்களின் 5ம் வீடு  தொடர்பு பெறுவது லாப ஸ்தானமான 11ம் பாவகம், இந்த லாப ஸ்தானம் தங்களுக்கு கன்னி மற்றும் துலாம் ராசியில் வியாபித்து இருக்கிறது , 11ம் பாவக வலிமையையும் 100% நல்ல நிலையில் இருப்பதால் , தங்களுக்கு பிறக்கும் ஆண் வாரிசு ஜாதக அமைப்பு தங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், தொழில் விருத்தியையும், பொதுமக்களின் ஏகோபித்த நல்லாதரவையும் வாரி வழங்கும், குறுகிய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்தை வாரி வழங்கும், மேலும் 11ம் பாவகம் உபய மண் தத்துவம், சர காற்று தத்துவம் என்ற அமைப்பில் இயங்குவதால், தங்களுக்கும் தங்களது வாரிசுக்கும் நல்ல உடல் நலத்தையும், சிறந்த அறிவு திறனையும் பரிபூர்ணமாக வாரி வழங்கும்.

குறிப்பு :

ஒருவரின் சுய ஜாதக அடிப்படையில் 5ம் பாவகத்திர்க்கு உற்பட்ட பாகைக்குள் ராகு அமர்ந்து 5ம் பாவகத்தை 100% பாதிப்பிற்கு உள்ளாக்கினால் மட்டுமே, ஜாதகருக்கு புத்திர பாக்கியம் ( ஆண் வாரிசு ) இல்லாமல் போகும், ஒருவேளை 5ம் பாவகத்தில் அமரும் ராகு பகவான் 5ம் பாவகத்தை 100% வலிமை  படுத்தினால், ஜாதகருக்கு ஆண் குழந்தைகளே அமையும், பெண் குழந்தை  கிடைக்காது, மேற்கண்ட அமைப்பை நிர்ணயம் செய்யும் பொழுது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவக நிலையை கருத்தில் கொள்வது புத்திர பாக்கியத்தை பற்றிய தெளிவான விளக்கம் தர இயலும், ராகு 5ல் அமர்ந்தாலே புத்திர பாக்கியம் இல்லை என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான கருத்து  தம்பி.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


1 கருத்து: