இழப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இழப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க, சுய ஜாதகத்தில் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள் !


 சுய ஜாதகம் நமது வாழ்க்கையில் வரும் நன்மை தீமைகளை மட்டும் கோடிட்டு காட்டுவதல்ல, பாவக வலிமையின் அடிப்படையில் நமது வாழ்க்கையை திட்டமிடுதல்களுடன் சிறப்பாக அமைத்துக்கொள்ள நல்வழிகாட்டுதல்களையும் வழங்கும் வல்லமை பெற்றது, இன்றை சூழ்நிலையில் உயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை என்றே சொல்லலாம், வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் பாதுகாப்பாக பயணிக்க வேண்டியது அவசியம் என்பதை உணரவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் " சுவரில்லாமல் சித்திரம் எழுத முடியாது " எனவே நமது சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை அனுபவிக்க வேண்டுமெனில் நமது " ஜீவனை கருத்துடன் காப்பது " அவசியமாகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : கன்னி 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : உத்ராடம் 4ம் பாதம் 

 ஜாதகரின் இழப்பு அவரது குடும்பத்தை மட்டுமல்ல, நமது மனதையும் கடுமையாக பாதிப்பை  தந்து மீள இயலாத துன்பத்தை தந்துவிட்டது, ஜாதகருக்கு  சுய ஜாதகத்தில் 4,12ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் பாரம்பரியத்தையும் ஜாதகர் செய்த புண்ணியகாரியங்களையும் நமக்கு மிக எளிதாக தெளிவுபடுத்தும், ஜாதகரின் தொழில் திறமை, அதிர்ஷ்டம், குடும்ப வாழ்க்கையில்  மகிழ்ச்சி, இறை அருளின் ஆசிர்வாதம் என அனைத்தும் சிறப்பாக அமைந்த போதிலும், ஜாதகரின் பாதுகாப்பற்ற பயணம் ஜாதகரின் உயிரை பறித்தது, இதற்க்கு முன் ஜாதகர் மூன்று விபத்துகளை சந்தித்த போதிலும், ஜாதகரின் உயிருக்கு யாதொரு பாதிப்பும் இல்லை, உடலுக்கும் பெரிய இன்னல்களை தரவில்லை, ஏனெனில் ஜாதகர் சந்தித்த விபத்துகள் யாவும் நான்கு சக்கர வாகனத்தில் என்பதால், வாகனங்களுக்கு மட்டுமே கடுமையான பாதிப்பை தந்தது, இறை அருளால் ஜாதகருக்கு எந்த வித பாதிப்பை சந்திக்கவில்லை, இறுதியில் ஜாதகரின் உயிரை பறித்த விபத்து என்பது இருசக்கர வாகனத்தில் நிகழ்ந்தது, அதுவும் ஜாதகரின் அஜாக்கரதையால் தலை கவசம் அணிந்து செல்லாத காரணத்தால் ஏற்பட்டது என்பது நாம் கூர்ந்து கவனிக்கவேண்டிய விஷயமாகும்.

 நம்மிடம் ஜாதக ஆலோசனை பெரும் பொழுது ஜாதகருக்கு இந்த விஷயம் மிகவும் தெளிவாக விளக்கம் தந்து அறிவுறுத்தப்பட்டது, இருப்பினும் ஜாதகரின் கவனக்குறைவு உயிரிழப்பு வரை அழைத்து சென்றது, ஜாதகருக்கு தற்போழுது நடைபெற்று கொண்டு இருக்கும் குரு திசை வலிமை பெற்ற ஜீவன ஸ்தான  பலனையும், குரு திசை சனி புத்தி வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனையும் தந்த போதிலும், சனி புத்தியில் ராகு அந்தரம் 4,12ம் வீடுகள் பேரிழப்பை தரும் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை நடத்திக்கொண்டு இருக்கும் பொழுது சிறு விபத்திலேயே ஜாதகர் மரணத்தை சந்திக்கும் சூழ்நிலையை தந்துவிட்டது, ஜாதகரின் 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வபுண்ணியம் என்று அழைக்கப்படும் சிம்ம ராசியில் அமைந்து ஜாதகருக்கு அசட்டு தைரியத்தை வழங்கி, குல தெய்வத்தின் கருணையை பெற முடியாத சந்தர்ப்பத்தில் உயிரிழப்பை சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.

 ஜாதகர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசத்துடன் பயணித்து இருப்பின் இந்த மரணம் நிகழ்ந்து இருக்கவே வாய்ப்பில்லை, அனைவரும் பாதுகாப்பாக வண்டி வாகனங்களில் பயணிப்பது அவசியம் என்ற போதிலும், சுய ஜாதகத்தில் 1,4,6,8,12ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருப்பின் அவர்கள் அனைவரும், இறை அருள் தந்த தனது உடலையும் உயிரையும் பேணிப்பாதுகாப்பது மிக மிக அவசியமாகிறது, இதை சுய ஜாதகம் கொண்டு நாம் மிக தெளிவாக உணர இயலும், மேற்கண்ட ஜாதகரின் இழப்பு என்பதே இறுதியாக இருக்க இறை அருள் கருணை புரியட்டும், அனைவரும் ஓர் நாளில் இறப்பது உறுதியென்ற போதிலும் நமது கர்மவினை பதிவினை இந்த பூ உலகில் கழித்துக்கொண்டு இறைநிலையை அடைவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும், விபத்துகளால் வரும் இழப்புகளில் இருந்து மகரிஷி அய்யா வழங்கிய  " அருட்க்காப்பு " எனும் வேத மந்திரம் நம் அனைவரையும் காக்கும், என்பதனை ஒவ்வொரு பயணத்திலும் நாம் நினைவில் கொள்வதுடன், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசமும், நான்கு சக்கர வாகனத்தில் இருக்கை பாதுகை பட்டையையும் அணிந்து செல்வதை நமது கடமையாக ஏற்பது அவசியமாகிறது.

குறிப்பு :

 மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பெரும்பாலன பாவகங்கள் மிக மிக வலிமையுடன் இருந்தது சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் யோகத்தை தரும் அமைப்பாகும், இருப்பினும் ஜாதகரின் கவனமின்மையும், பாதுகாப்பற்ற பயணமும், சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் அனைத்தையும் அவருடன் மண்ணோடு மண்ணாக மறைந்ததுடன், அவரை சார்ந்த அனைவரையும் மீளாத்துயரத்தில் அழுத்திவிட்டு சென்றுவிட்டது.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

துர் ஸ்தானம் எனப்படும் 6 ,8 ,12ம் வீடுகள் ஒரு ஜாதகருக்கு தீமையான பலனை மட்டும்தான் தருமா ? நன்மை செய்யாதா ?



பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் 6 ,8 ,12ம் வீடுகள் துர் ஸ்தானம் என்று பல ஜோதிடர்களால் வர்ணிக்க படுகிறது , மேலும் இந்த வீடுகளுக்கு அதிபதிகளுடன் எந்த கிரகமும் சேரக்கூடாது என்றும் , இந்த வீடுகளில் எந்த கிரகமும் இருக்க கூடாது என்று சொல்பவர்களும் உண்டு , குறிப்பாக இந்த வீடுகளின் திசை புத்தி ஜாதகருக்கு நன்மை தர வாய்ப்பில்லை தீமையான பலனே நடைபெறும்  என்று வயிற்றில் புளியை கரைப்பவர்களும்  உண்டு , ஒரு ஜோதிடரால்  இந்த புளி கரைசலுக்கு ஆளான ஒரு நபர் , செய்வது அறியாமல் நன்றாக ஓடிக்கொண்டு இருந்த வண்டி வாகனத்தை விற்று விட்டு , ஈமு கோழியில் முதலீடு செய்து உள்ளதும் போச்சு ....... கண்ணா என்று , எங்களிடம் ஆலோசனை பெற வந்தார் , அவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது . 


ஒருவருடைய ஜாதக அமைப்பிற்கு ஏற்ற தொழில் எதுவோ அதை தெளிவாக தெரிந்து கொண்டு , சிறப்பாக செய்வதே அதிக நன்மை தரும் , மேலும் ஜாதகருக்கு ஏற்ற தொழில் எதுவென்பதை ஜாதகருக்கு இயற்க்கை , நிச்சயம் ஏதாவது ஒரு வகையில் உணர்த்தி விடும் , மேலும் ஜீவன ஸ்தானத்தையும் , களத்திர ஸ்தானத்தையும் வைத்து ஜாதகரின் ஜீவனம் எப்படி அமையும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , குறிப்பாக பண்ணை தொழில் , விவசாயம், உணவு பொருட்கள் உற்பத்தி தொழில்கள் செய்வோருக்கு நான்காம் பாவகம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றிருக்கும் , இந்த அமைப்பை பெற்றவர்கள் மேற்கண்ட தொழில்களில் சிறப்பான முன்னேற்றமும் , அதிக வருமானமும் பெற முடியும் .

எம்மை பார்க்க வந்தவரின் ஜாதக அமைப்பில் ஜீவன ஸ்தானம் களத்திர ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று , சர மண் ராசியாக அமைந்து இருந்தது , மேலும் பனிரெண்டாம் வீடு பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருந்தது , இந்த அமைப்பை பொறுத்த வரை வண்டி வாகன தொழில் ஜாதகர் கூட்டாக செய்து வந்த பொழுது ஜாதகருக்கு எவ்வித சிக்கல்களும் தரவில்லை, காரணம்  ஜாதகரின் தொழில் ஸ்தானம் களத்திர ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றதே காரணம் , ஆனால் நான்காம் பாவகம் ஜாதகருக்கு விரைய ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருந்தது , ஜாதகரை தேவையில்லாமல் சம்பந்தம் இல்லாத தொழில் செய்ய வைத்து , கையிருப்பு அனைத்தையும் திடீர் என இழக்கும் சூழ்நிலையை  ஏற்ப்படுத்தியது .

மேலும் ஜாதகருக்கு ஆறுதல் சொல்லி செய்ய வேண்டியதை தெளிவாக அறிவுறுத்தி அனுப்பி வைத்தோம் , இந்த ஜாதகத்தில் விரைய ஸ்தானம் வலுவாக பாதிக்க பட்டதே இதற்க்கு காரணம் , ஒருவருடைய ஜாதகத்தில் விரைய ஸ்தானம் பாதிக்க படாமல் இருப்பதே நன்மையை தரும் , மேலும் 12 ம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு திடீர் என பொருள் வரவையும் , சொத்து சுக வாழ்க்கையையும் தரும் , லாட்டரியில் யோகம் பெற வேண்டும் எனில் ஜாதகத்தில் இந்த 12 ம் பாவகம் மிகவும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு லாட்டரியில் யோகம் உண்டு , திடீர் என வாழ்க்கையில் அதிர்ஷ்டம் யோகம் உண்டாகும் , நல்ல மன நிம்மதி கிடைக்கும் , தனது பெயரில் வைத்திருக்கும் சொத்துகள் எவ்வித இழப்பையும் சந்திக்காது என்பதே உண்மை .

பொதுவாக துர் ஸ்தானம் எனப்படும்  6 ,8 ,12ம் வீடுகள் ஒரு ஜாதகருக்கு தீமையான பலனை மட்டும்தான் தருமா ? நன்மை செய்யாதா ? என்பதை பற்றி இதில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம்  .

6 ம் வீடு  ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் நன்மைகள் :

ஜாதகருக்கு முதலில் நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கும் , ஜாதகருக்கு பகைவரால் நன்மையே ஏற்ப்படும் , ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் வெற்றி பெரும் , தன்னம்பிக்கை மிகுதியாக அமைந்திருக்கும் , வட்டி தொழில் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் , தாய் மாமன் மூலம் அதிக உதவிகள் கிடைக்க பெறுவார் , ஜாதகருக்கு கிடைக்கும் சிறு சிறு அதிர்ஷ்டங்கள்  இந்த பாவக வழியில் இருந்தே கிடைக்கும் 

6 ம் வீடு  ஜாதகத்தில் பாதிக்கபட்டு  இருந்தால் ஜாதகர் பெரும் இன்னல்கள்  :

உடல் ரீதியான பாதிப்புகள் ஜாதகரை படுத்தி எடுக்கும் , மேலும் மன ரீதியான பாதிப்புகளும் ஜாதகரை அதிகம் துன்புறுத்தும் , வட்டிக்கு கடன் பெறுவது , கடன் கொடுப்பது , ஜாதகருக்கு அதிக இன்னல்களை ஏற்ப்படுத்தும் , தாய் மாமன் உறவு வழியில் இருந்து  நன்மை ஏதும் பெற முடியாது , உறவினர்கள் அனைவரையும் தேவையில்லாமல் பகைத்து கொள்ள வேண்டி வரும் , எதிரிகளால் அதிக துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும் .

8 ம் வீடு  ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் நன்மைகள் :

ஜாதகருக்கு பூரண ஆயுள் அமைந்து விடும் , விபத்து ஏற்ப்படும் பொழுது அதிக பாதிப்பு இல்லாமல் ஜாதகர் தப்பிக்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்தும் , உடல் ரீதியான பாதிப்பில் இருந்து ஜாதகர் விரைவில் குணம் பெரும் அமைப்பை தரும் , திடீர் என ஜாதகருக்கு குபேர சம்பந்து கிடைப்பதெல்லாம் இந்த பாவகம் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே கிடைக்கும் , மேலும் மனைவி வழியில் இருந்து வரும் சொத்து , யோகம் பற்றி குறிப்பிடுவதும் இந்த பாவகமே .

8 ம் வீடு  ஜாதகத்தில் பாதிக்கபட்டு  இருந்தால் ஜாதகர் பெரும் இன்னல்கள்  :

இந்த வீடு பாதிக்க பட்டாலும் ஜாதகருக்கு பூரண ஆயுள் அமைந்து விடும் , ஆனால் உடல் ரீதியான தொந்தரவுகள் வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும் , தனது பெயரில் இருக்கும் செல்வங்களை எதிர்பாராமல் திடீர் என இழக்க வேண்டி வரும் , மனைவி மிகப்பெரிய வீண் செலவாளியாகவும் , திடீர் என பண இழப்புகளை தருபவளாகவும் அமைந்து விடுவார், விபத்துகளில் சிக்கி உடல் ரீதியான பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும் .

12 ம் வீடு  ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் நன்மைகள் :

மன நிம்மதியான வாழ்க்கை இயற்கையாக அமையும் , கணவன் மனைவி நல்லுறவு சிறப்பாக அமையும் , ஒற்றுமையுடன் குடும்பம் நடத்த இந்த பாவகம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் இல்லற வாழ்க்கையில் இன்பம் காண 12 ம் பாவகம் உறுதுணை புரியும் , ஜாதகர் செய்யும் முதலீட்டில் இருந்து வரும் அதிக வருவாயினை பெற இந்த பாவகம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் , சில நேரங்களில்  திடீர் என வரும் யோகத்தை இந்த பாவக அமைப்பில் இருந்து தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் , ஆன்மீக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை தரும் , மிகசிறந்த ஆன்மீக வாதிகளின் ஜாதக அமைப்பில் இந்த பாவகம் வலிமை பெற்றிருக்கும் .

12 ம் வீடு  ஜாதகத்தில் பாதிக்கபட்டு  இருந்தால் ஜாதகர் பெரும் இன்னல்கள்  :

மன நிம்மதி இழப்பு , எப்பொழுதும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலை , குடும்ப வாழ்க்கையில் மன நிம்மதி இழப்பு , போலி ஆன்மீக வாழ்க்கை , போதை பழக்கத்திற்கு அடிமையாகி உடல் நிலையை கெடுத்துகொள்ளும் தன்மை , மன நோய்க்கு ஆளாகும் சூழ்நிலை , மற்றவர்களால் ஜாதகரை புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை , ஜாதகர் மற்றவரை புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை , பெண்களால் ஆண்களும்  , ஆண்களால் பெண்களும்  மன ரீதியான துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலை , தீய பழக்க வழக்கங்களை கற்று கொண்டு அதில் இருந்து வெளி வர முடியாத நிலை , கணவன் மனைவி உறவில் விரிசல் , விவாகரத்து , இல்லற வாழ்க்கையில் துன்பம் , போன்ற இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , எக்காரணத்தை கொண்டும்  ஜாதகர் எதிலும் முதலீடு செய்யாமல் இருப்பது,  ஜாதகருக்கும்  ஜாதகரை சார்ந்தவருக்கும் நன்மை தரும் .

துர் ஸ்தானம் எனும் 6 ,8 ,12ம் வீடுகள் ஒரு ஜாதகருக்கு நல்ல நிலையில் இருந்தால் மேற்கண்ட நன்மைகளும் , பாதிக்க பட்டால் மேற்கண்ட தீமையான பலன்களும் நடை பெரும் , எனவே குத்து மதிப்பாக 6 ,8 ,12ம் வீடுகள் பாதிப்பை மட்டுமே செய்யும் என்று ஜோதிட கணிதம் செய்வது முற்றிலும் தவறானது , மேற்கண்ட பாவகங்கள் சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறதா  , பாதிக்க பட்டு இருக்கிறதா என்று தெளிவாக தெரிந்து கொண்டு பலன் சொல்வதே சிறந்த ஜோதிடருக்கு அழகு .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696